Last Updated : 23 Feb, 2018 11:16 AM

 

Published : 23 Feb 2018 11:16 AM
Last Updated : 23 Feb 2018 11:16 AM

குரு - சிஷ்யன்: என்னைப் போல் ஒருவர்!

 

கு

ஜராத் மாநிலத்திலுள்ள பாவ் நகர்தான் எனது சொந்த ஊர். தந்தையின் தொழில் காரணமாக என்னுடைய 20-வது வயதிலேயே சென்னையில் குடியேறிவிட்டோம். பெண்கள் படிப்பதற்கும் வேலைக்குச் செல்வதற்கும் அனுமதிக்காத ஒரு குடும்பச் சூழலில் நான் பிறந்தாலும், நன்கு படிக்க வேண்டும் வாழ்க்கையில் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்தால், கணிதவியலில் இளங்கலையும் தத்துவவியலில் முதுகலையும் இந்தியில் முனைவர் பட்டமும் பெற்றேன்.

1988-ம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் இந்தி மொழித் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தேன். குஜராத்தி, இந்தி, ஆங்கிலம் தெரிந்த எனக்கு தமிழ் அவ்வளவாகப் பேசத் தெரியாமல் சிரமப்பட்டேன். கல்லூரியில் படிக்கிற மாணவிகளோடு நெருக்கமாக உரையாட முடியாத நிலை ஏற்பட்டது.

இருந்தாலும் மனம் தளராமல், நானே முயன்று கடைகளுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கு தமிழில் எழுதப்பட்டிருக்கும் பலகைகள், சுவரொட்டிகளை எழுத்துக்கூட்டிப் படித்துப் பார்ப்பேன். தமிழைப் படிக்க கற்றுக்கொண்ட பிறகு, தமிழ் மொழியின் மீது கொண்ட ஆர்வத்தால் தமிழின் பெருமைகளுள் முதன்மையானதாகக் கருதப்படும் திருக்குறளை எனது தாய்மொழியான குஜராத்தியில் மொழிபெயர்த்தேன்.

மாணவர்கள் படிப்பில் முழுக் கவனத்தோடும் ஈடுபாட்டோடும் இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் அக்கறை எடுத்துக்கொள்வது என் குணம். கல்லூரியில் பொதுவாக என்னிடம் படித்த எல்லா மாணவர்களுமே எனக்குப் பிடித்தவர்கள்தான். அதில், மிகவும் பிடித்தவர் என்றால், என் மாணவி சுதா சர்மாவைத்தான் சொல்வேன்.

2002-2003-ம் ஆண்டில் பி.ஏ. இந்தி வகுப்பில் என்னிடம் படித்தவள்தான் சுதா. அப்பா அரசுப் பணி அலுவலராகவும் அம்மா ஆசிரியராகவும் இருந்தார்கள். வகுப்பில் அமைதியாக இருப்பாள். பாடம் நடத்தும்போது அவளது கவனம் முழுவதும் பாடத்தில் இருக்கும்.

என் பாடத்தில் மட்டுமல்ல; வகுப்பிலும் முதல் மாணவியாக இருந்தாள் சுதா. என் மேல் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவள். ஒவ்வோர் ஆசிரியர் தினத்தன்றும் சுதாவின் வாழ்த்தே எனக்கு முதல் வாழ்த்தாகக் கிடைக்கும்.

பி.ஏ. படித்து முடித்துவிட்டு சென்ற பின்னரும், என்னோடு தொடர்பில் இருந்த மாணவி சுதா. சென்னைப் பல்கலைக்கழகத்தில் படிப்பைத் தொடர்ந்து முதல் ரேங்க் மாணவியாக வந்தாள். எம்.ஏ., சம்ஸ்கிருதத்தில் ‘கோல்டு மெடல்’ பெற்று முன்னேறினாள். ஒருமுறை எனக்குத் தொலைபேசியில் அழைத்து, தனக்கு வங்கியில் பணி கிடைத்திருப்பதாகக் கூறினாள். எனது வாழ்த்துகளைக் கூறினேன். வங்கிப் பணி கிடைத்திருப்பதாகச் சொன்ன அவளது குரலில் ஏனோ உற்சாகம் இல்லை. சில மாதங்கள் கழித்து, அவளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

“எப்படிம்மா இருக்கு வங்கிப் பணி..?” என்று கேட்டேன்.

“மேம்… நான் பேங்க் வேலையை ரிசைன் பண்ணிட்டேன்!” என்று சாதாரணமாகக் கூறினாள். வங்கி வேலையை அவள் ராஜினாமா செய்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இன்றைய தலைமுறையினர் வங்கிப் பணி கிடைத்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்றே நினைக்கிறார்கள். இவள் ஏன் இப்படியொரு முடிவெடுத்தாள் என்பது எனக்குப் பெரும் வியப்பாக இருந்தது.

kogilaகோகிலா, முன்னாள் துறைத் தலைவர், இந்தி மொழித்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை. right

“ஏம்மா, என்னாச்சு..?” என்றேன்.

“மேம்… எனக்குச் சின்ன வயசிலேர்ந்தே ஆசிரியராகணும்னுதான் ஆசை. நமக்குக் கிடைச்ச கல்வியை நாம் பலருக்குக் கற்றுக் கொடுக்கணும்னு நினைச்சேன். வங்கிப் பணி கிடைச்சதும் வேற வழியில்லாம சேர்ந்தேன். ஆனாலும், விடாமுயற்சி செஞ்சு, இப்ப சென்ட்ரல் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் இந்தி ஆசிரியரா வேலைக்குப் போறேன். என் மனசுக்குப் பிடிச்ச நிறைவான வேலை. நானும் உங்களை மாதிரி நிறைய மாணவிகளை உருவாக்குவேன்” என்று சொன்னாள் சுதா.

சுதாவின் குரலில் வெளிப்பட்ட உறுதியும் தெளிவும் அவளது மனதுக்குப் பிடித்த பணியில் இருப்பதை எனக்கு உணர்த்தியது. எனக்குப் பிடித்த மாணவி, பல மாணவர்களுக்கும் பிடித்தமான ஆசிரியராக மாறப் போகிறாள் என்பதை நினைத்தபோது மகிழ்ச்சியும் பெருமிதமும் கொண்டேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x