Last Updated : 24 Mar, 2018 10:55 AM

 

Published : 24 Mar 2018 10:55 AM
Last Updated : 24 Mar 2018 10:55 AM

தெருவாசகம்: பெயரைச் சொன்னாலே அதிரும் பேட்டை!

 

‘நா

ன் யார் தெரியுமா?’ என்று பலர் நம்மிடம் பெருமையுடன் கேட்டிருப்பார்கள். நாமும் பலரிடம் அவ்வாறு கேட்டிருப்போம். ஆனால், அந்தக் கேள்வியில் இருக்கும் நான் என்பது கேட்பவரின் பெயருடன் மட்டும் சுருங்கி விடுவதில்லை. அது அவரின் குடும்பம், வசிக்கும் தெரு, பூர்வீகம், பரம்பரை போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது.

நம் பெயரில் ஆரம்பித்து வசிப்பிடத்தில் விரிந்து பூர்வீகத்தில் முடியும் வண்ணம் பழம்பெருமையைப் பேசி வீண் ஜம்பம் அடிப்பது பலருக்கு அலாதியான சுகம்தரும். இவ்வாறு பாரம்பரியத்தைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் மனிதர்களுக்கு மத்தியில், தாங்கள் வசிக்கும் தெருவின் பெயரைச் சொல்லக் கூடத் தயங்கும் மக்கள், அதுவும் சென்னையின் மையத்தில் இருக்கும் ராயப்பேட்டையிலேயே இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக இல்லையா?

ஏன் மறைக்க வேண்டும்?

பெயரைச் சொன்னாலே சட்டென அதிரும்வகையில் , கொலைகாரன் பேட்டை முதல் தெரு என்றும் கொலைகாரன்பேட்டை இரண்டாம் தெரு என்றும் இரண்டு தெருக்கள் ராயப்பேட்டையில் உள்ளன. அந்தத் தெருக்களில் சுமார் 500 வீடுகள் உள்ளன. அங்கே வசிப்பவர்கள்தாம் தங்கள் தெருவின் பெயரைச் சொல்வதற்கே தயங்குகின்றனர். கொலைகாரன் பேட்டை என்னும் பெயர் எப்படி உருவானது என்பது இன்றும் விசித்திரமாகத்தான் உள்ளது. இது எப்படி உருவானது என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

முதலாவது காரணம் அதன் பெயரிலேயே உள்ளது. ஆனால், அங்கே கொலைகாரர்களோ சமுக விரோதிகளோ வசித்ததற்கு ஆதாரம் ஏதும் இல்லை. எனவே, இந்தப் பெயர் வேறொரு சொல்லிலிருந்து மருவிவந்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என்று அங்கே வசிப்பவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகின்றனர். அது மட்டுமன்றி, அந்தப் பெயர்க் காரணம்குறித்து பல சுவராசியமான வாதங்களையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

வாதம் 1

கௌடியா மடச் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் இந்தத் தெருவில் அந்தக் காலத்தில் பெண்கள் கோலாட்ட நடனப் பயிற்சியிலும் ஆண்கள் சிலம்பாட்டப் பயிற்சியிலும் ஈடுபட்டனராம். அதன் காரணமாக அந்தத் பகுதியின் பெயர் கோல்காரன் பேட்டை என்று இருந்ததாம். அதுதான் மருவி இன்று கொலைகாரன் பேட்டையாகிவிட்டது என்பது ஒரு வாதம். சிலம்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் கம்பைக் கோல் என்றும் அழைக்கலாம். அவர்கள் பயிற்சி பெற்ற மைதானம், பைலட் திரையரங்கின் (தற்போது இடிக்கப்பட்டுவிட்டது) பின்னால் இருந்ததாகவும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் கூட அங்கே சிலம்பாட்டப் பயிற்சி பெற்றதாகவும் அப்பகுதியினர் சிலர் சொல்கிறார்கள்.

வாதம் 2

அந்தக் காலத்தில் அங்கிருந்த அனைத்து வீடுகளின் பின்புறத்திலும் தோட்டங்கள் இருந்திருக்கின்றன. இதனால் அந்தப் பகுதி கொல்லைக்காரப் பேட்டை என்று அழைக்கப்பட்டதாகவும், அதுவே நாளடைவில் மருவிக் கொலைகாரன் பேட்டை என ஆகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தோட்டம் கொண்ட வீட்டின் பின்புறத்தைக் கொல்லை என்று அழைக்கும் வழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

வாதம் 3

இரும்பு உருக்கும் வேலை மற்றும் பூசும் வேலைகள் செய்யும் கருங்கொல்லர்களும் பொன், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களிலிருந்து அணிகலங்கள், ஆபரணங்கள் செய்யும் பொற்கொல்லர்களும் அந்தக் காலத்தில் அங்கு வாழ்ந்ததாகவும், அதனால் அந்தப் பகுதிக்குக் கொல்லர்பேட்டை என்று பெயர் இருந்தாகச் சிலர் சொல்கிறார்கள். இந்தக் கொல்லர்பேட்டைதான் இப்போது கொலைகாரன்பேட்டை மாறிவிட்டது என்பது அவர்களது வாதம்.

வாதம் 4

இந்தப் பகுதியில் கோல மாவு விற்கப்பட்டதால் இது கோலக்காரன்பேட்டை என்று அழைக்கப்பட்டதாகவும் அதுவே மருவிக் காலப்போக்கில் கொலைகாரன்பேட்டை ஆனதாகவும் சிலர் சொல்கிறார்கள்.

வாதம் 5

சிற்பிகளும் கல் உடைப்பவர்களும் கல் கொத்துபவர்களும் அங்கு வசித்ததால் அந்தப் பகுதி கல்லுக்காரன்பேட்டை என்று அழைக்கப்பட்டதாகவும் பலர் சொல்கிறார்கள். இதுதான் அப்பகுதியின் உண்மையான பெயர் என்று பரவலாக நம்பப்படுகிறது.

விடாமல் துரத்தும் சிரிப்பொலி

எது உண்மை என்று இன்றும் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. அந்தக் காலத்தில் அந்தத் தெருக்களின் பெயர்கள் பெருமைக்குரிய ஒன்றாகவும் இருந்திருக்கலாம். ஆனால், இன்று வழக்கில் இருக்கும் கொலைகாரன்பேட்டை என்ற பெயரால் அங்கு வசிக்கும் மக்களுக்கு எவ்விதப் பெருமையும் இல்லை. வங்கிகளிலும் தபால் நிலையங்களிலும் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் தவிர்க்க வழியின்றி அந்தப் பெயரை உச்சரிக்க நேரிடும்போது பிறரிடமிருந்து புறப்பட்டுவரும் சிரிப்பொலி அவர்களைத் தர்ம சங்கடத்தில் நெளிய வைக்கிறது.

அந்தப் பெயரை மாற்றச் சொல்லிப் பல போராட்டங்களை அங்கே வசிக்கும் மக்கள் நடத்தியுள்ளனர். 2013-ம் வருடம் அதன் பெயரை ஜெயலலிதா தெரு என்று கூட மாற்ற முயன்று உள்ளனர். ஆனால், அந்த மாற்றம் நிலைக்கவில்லை. 2015-ம் வருடம் ஔவையார், அகத்தியர், சங்கவை, திலகவதியார், மணியம்மாள் போன்ற பெயர்களை அரசு பரிசீலித்துள்ளது. கல்லுக்காரன்பேட்டை என்ற பெயரையே பயன்படுத்தலாமா என்றும் அரசு யோசித்துள்ளது. ஆனால், இந்தப் பரிசீலனைகள் இன்றும் பரிசீலனையாகவே உள்ளதால் அந்த மக்களைத் துரத்தும் சிரிப்பொலி தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x