Published : 04 Mar 2018 12:53 PM
Last Updated : 04 Mar 2018 12:53 PM

எசப்பாட்டு 25: வரலாறு இழைத்த துரோகம்

“என்ன ரிப்போர்ட்டு எழுதணும்?”

“பொம்பளைங்களப் பத்தி”

“பொம்பளைங்களப் பத்தி எழுத என்ன இருக்கு?”

“அதாவது அவங்க எப்படி வாழறாங்க, என்னவெல்லாம் வேலை செய்யறாங்க, தங்களோட வாழ்க்கையைப் பத்தி என்ன நினைக்கிறாங்க….?”

“என்ன நெனக்கிறாங்க? புள்ளப் பெறுதோம். ஆக்கிப்போடுதோம்”

“எப்பப் பாரு புள்ள பெறலியே? நடுவிலே ஏதாவது யோசிச்சிருப்பிங்க இல்ல?”

“ஆமா, ரோசிச்சோம் போங்க”

- அம்பை எழுதிய ‘வெளிப்பாடு’ சிறுகதையிலிருந்து.

மனித குலம் தோன்றியதிலிருந்து 20 ஆயிரம் போர்கள் நடைபெற்றுள்ளதாக வரலாற்று அறிஞர்கள் சொல்வார்கள். இனக் குழுக்களுக்கு இடையே நடந்த மோதல்களையெல்லாம் சேர்த்தால் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட போர்கள் எனச் சொல்கிறார்கள். ஆனால், எந்தப் போரையும் தொடங்கி, முன்னெடுத்து நடத்தியவர்களாகப் பெண்கள் இருந்ததில்லை. ஆகவே, போர்களை முன்வைத்து எழுதப்பட்ட வரலாறுகளில் பெண்கள் இல்லை. மாபெரும் அரசியல் மாற்றங்கள், இயக்கங்களில் ஈடுபடப் பெண்கள் அனுமதிக்கப்பட்டதில்லை.

பொருளாதாரத்தைப் பெண்கள் தங்கள் கைகளில் வைத்திருக்க வாய்ப்பளிக்கப்பட்டதில்லை. அதனால் அரசியல் வரலாறு, பொருளாதார வரலாறு போன்றவற்றிலும் அவர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. எழுதியவர்கள் ஆண்கள் என்பதாலேயே பெண்களுக்கு இடமில்லாமல் போயிற்று என்று மட்டும் சுருக்கிச் சொல்லிவிட முடியாது.

‘எழுதும் தகுதி வாய்ந்த வரலாற்று நிகழ்வுகள்’ என வரலாற்றுக்கு முத்திரை குத்தும் அதிகாரம் படைத்த அறிவுசார் அமைப்புகளாலும் நபர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாறுகளில் பெண்கள் இல்லைதான். அத்தகைய அக்மார்க் வரலாற்று நிகழ்வுகளில் பங்கேற்கப் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதைக்கூட இவர்கள் எழுதவில்லை. இது ஒரு புள்ளி எனில், இன்னொன்று வரலாறு என்பது இதுதானா, இது மட்டும்தானா என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டும்.

வாய்மொழி வரலாறு

போர்ப் பிரகடனங்கள், உடன்படிக்கைகள், விடுதலை சாசனங்கள், கல்வெட்டுகள், எழுதப்பட்ட நாட்குறிப்புகள், அறிக்கைகள் என வரலாற்றுக்குச் சான்றுகளாக அறிவுலகம் இதுவரை ஏற்றுக்கொண்டுள்ளவற்றில் எல்லாம் பெண்கள் இருக்க வாய்ப்பில்லை. அவர்களின் நினைவுகள், அனுபவங்கள், அவர்களின் உடம்பின் மீதும் உள்ளத்தின் மீதும் வரலாறு ஏற்படுத்திய ரணங்கள் எல்லாம் எழுதப்படவே இல்லை.

ஆகவே, எழுதாக் கிளவி எனப்படும் வாய்மொழி வரலாறு, வாய்மொழி வழக்காறு, வாய்மொழிச் சாட்சியங்கள் பெண்களின் வரலாற்றை எழுத முக்கியச் சான்றுகளாகின்றன. இவைபோக, இலக்கியப் பதிவுகளும் சமமான முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்திய தேசப் பிரிவினை குறித்த அரசாங்க வெளியீடுகள், அரசு அங்கீகாரம் பெற்ற வரலாற்றுப் புத்தகங்கள் போன்றவற்றில் ஒரு வரியாகக்கூட எழுதப்படாத வரலாற்று நிகழ்வுகள், பெண்களின் வாய்மொழியில் அவர்கள் உள்ளத்தின் கதவு திறந்து வெளிவந்தன. சாதத் ஹசன் மண்ட்டோ, அம்ரிதா ப்ரீதம், குஷ்வந்த் சிங் போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் பெண்களின் வரலாறு கொப்பளித்துக் கொந்தளித்து வெளிவருவதைப் பார்க்கலாம்.

எழுதப்பட்ட வரலாறுகளில் விடுபட்டவற்றைப் பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் வாய்மொழியாகக் கேட்டு நிரப்பிக்கொள்ள வேண்டும் என்பதல்ல இன்றைய பெண்களின் கோரிக்கை. வரலாற்றையே வேறு மாதிரிப் பார்க்க வேண்டும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்திய நாட்டின் வரலாறு ஒன்றுதானே என்பது போன்ற உளறல்கள் நிறுத்தப்பட வேண்டும். 1757, 1857, 1942, 1947 ஆகிய ஆண்டுகள் வேண்டுமானால் பொதுவாக இருக்கலாம்.

ஆனால், வரலாறு ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒன்றேயல்ல. ‘வரலாற்றுப் புத்தகங்களில் ஆண்டுகளும் தேதிகளும் மட்டும்தான் உண்மையானவை. மற்ற எவையும் அல்ல’ என்ற சொலவடை பெண்களுக்கு நூறு சதவீத பொருந்தும். மனித குலத்தின் சரிபாதியாக இருக்கிற பெண்களின் குரலைக் கேட்காமலேயே எழுதப்பட்ட வரலாறு எப்படிச் சரியானதாக இருக்க முடியும்?

சொலவடை வரலாறு

ஆணுக்குப் பதிலாகப் பெண் பேனா எடுத்துவிட்டால் போதாது. பெண்ணின் வாயருகே மைக் வந்தால் மட்டும் போதாது.

“அவனுடைய குரலே தனியான குரலாக அவள் தொடர்ந்து கேட்கிறபோது ராணி, ராஜாவைப் போல் குரல் எழுப்ப முயல்கிறாளா? அவனுடைய குரலை, குரல் அழுத்தங்களை, அவனுடைய தொடரை, அவனுடைய நோக்குநிலையைப் போலச் செய்வதன் மூலம் அவள் ராஜாவாகக் குரல் கொடுக்க முனைகிறாளா? தன்னுடைய சொந்த வார்த்தைகளில், சொந்தக் குரல் அழுத்தத்தில், தனது நோக்கு நிலையில் அவனிடம் ‘திருப்பிப் பேசு’கிறாளா?”

- பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் - சாரா காம்பிள் - டோரில் மோய் - தமிழில்: ராஜ்கௌதமன்.

இலக்கியமும் வரலாறும் படைக்கத் தொடங்கியிருக்கும் பெண்களை நோக்கி வைக்கப்படும் கேள்விகள் இவை.

அரசியல், பொருளாதார வரலாற்றை மட்டுமின்றி ஒரு சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றையும் வாய்மொழி ஆதாரங்களைக்கொண்டே எழுதி முடிக்க முடியும். வாய்மொழி இலக்கியம், வாய்மொழி வழக்காறு என்றாலே அது பெண்களின் தனிப்பெரும் பொக்கிஷமாக இன்றைக்கும் திகழ்கிறது. 90-களில் பேராசிரியர் ச.மாடசாமியின் தலைமையில் நான்கு தென் மாவட்ட கிராமப்புறங்களில் மக்களிடமிருந்து நாங்கள் சேகரித்த நாட்டுப்புற வழக்காற்று வடிவங்களில் 99 சதவீதம் பெண்கள் சொன்னவைதான்.

“அரிசின்னு அள்ளிப் பாப்பாரும் இல்ல

உமின்னு ஊதிப் பாப்பாரும் இல்ல

ஏன்னு கேப்பாருமில்ல

எடுத்துப் பிடிப்பாரும் இல்ல”

என்று ஒரு பாட்டி சொன்ன சொலவடைக்குள் சுதந்திர இந்தியாவின் வரலாற்றை நாம் வாசிக்க முடியும்.

“ஆணாப் பொறந்தா ஆம்பளைக்கு அரை நாழிய வேலை. பொண்ணாப் பொறந்தா புழுத்த முண்டைக்குப் பொழுது அடையுமட்டும் வேலை” என்ற சொலவடை உழைப்புக் களத்திலும் வீட்டிலும் என இரட்டைச் சுமை ஏற்கும் பெண்ணின் வரலாற்றை இன்றோடு இணைப்பதைக் காணலாம். “என் வீட்டுக் கிணத்துல எப்போதும் உப்புத்தண்ணி. அது என்ன?”என்ற விடுகதையில் கண்ணீர் என்னும் விடை பெண்ணின் சோக வரலாற்றைச் சொல்லுகிறது.

தெய்வங்களாக்கப்பட்ட பெண்கள்

தமிழகத்தில் கொல்லப்பட்ட பெண்கள் ஆயிரக்கணக்கானோர் கிராமப்புற/நாட்டார் தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள். விருதுநகர் மாவட்டத்தில் வணங்கப்படும் ‘கம்பங்குழி அம்மன்’ அப்படிக் கொல்லப்பட்டவள்தான். மன்னராட்சிக் காலத்தில் அவள் மேல் கண் வைத்து அரசன் அவளை அரண்மனைக்கு அனுப்பச் சொல்ல, பெற்ற தகப்பனே அவளைக் கம்பு நிறைந்த தானியக் குதிருக்குள் இறங்கச் சொல்லி அவளறியாமல் ஏணியை எடுத்துவிட, கம்பங்குழிக்குள் புதைந்து மாண்டாள்.

பின்னர், அவள் தெய்வமாக்கப்பட்டாள். வட இந்தியாவில் பிரிவினையின்போது பலிகொடுக்கப்பட்ட பெண்கள் எல்லாம் இன்றும் குலதெய்வங்களாக, குலத்தின் மானம் காத்த வீராங்கனைகளாக வணங்கப்பட்டுவருகின்றனர். இப்படியான ‘வரலாற்று இணைகளை’ எல்லா நிலப் பரப்புகளிலும் காண முடியும்.

கதைப் பாடல்கள், நாட்டுப்புறத் தெய்வங்களின் தோற்றக் கதைகள், சொலவடைகள், பழமொழிகள் போன்றவற்றினூடாக ஒரு சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றையே எழுதிவிட முடியும். அத்தகைய ஆதாரங்களின் சுரங்கமாக நம் பெண்கள் திகழ்கிறார்கள்.

எழுதப்பட்ட வரலாற்று நிகழ்வுகள் பெண்களின் இருப்பின் மீது, அவர்களின் உடல்கள் மீது, அவர்களின் நினைவுகளின் மீது, அவர்களின் நம்பிக்கைகள் மீது மௌனம் என்னும் கும்மிருட்டைப் போர்த்தியபடி நகர்கின்றன. அல்லது பெண்களின் உடல்களால் விரிக்கப்பட்ட சாலையின் மீது இந்த வரலாற்று வாகனங்கள் தடதடத்து ஓடுகின்றன. ஆகவேதான் அந்தப் பெண்களின் குரல் கேட்கப்பட வேண்டும்; குடும்பப் பெண்களின் அந்தக் குரல்கள் தேச வரலாற்றுடன் பிணைக்கப்பட வேண்டும்.

வரலாற்றில் பெண்கள் என்று வாயைத் திறந்தால் காந்திஜியின் மனைவி கஸ்தூரிபாய், நேருவின் மனைவி கமலா, நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட், கொஞ்சம் முந்தைய வரலாறு என்றால் ஜான்சிராணி, வேலுநாச்சியார் என்று ஒரு பட்டியலை வாசித்துத் துணை கதாபாத்திரங்களாகச் சில பெண்களைக் காட்டிவிடுவார்கள். அவரை மகாத்மாவாகவே தொடர்ந்து தக்கவைக்க ஆகுதி செய்யப்பட்ட வாழ்வுதான் கஸ்தூரிபாயின் வாழ்க்கை என்ற கோணத்தில் பேசுவதில்லை. ஆகவேதான்…

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x