Last Updated : 25 Mar, 2018 03:57 PM

 

Published : 25 Mar 2018 03:57 PM
Last Updated : 25 Mar 2018 03:57 PM

இல்லம் சங்கீதம் 28: சண்டை போட்டால் அன்பு பிறக்கும்

கொஞ்சம் அருகிலமர்

தலை கோது

மூக்கில் உரசு

புன்னகை

நான் முத்தமிடுகிறேன்

- ந.லஷ்மி சாகம்பரி

உறவானாலும் நட்பானாலும் அவற்றின் ஆழத்துக்கு அர்த்தம் சேர்ப்பதில் அவ்வப்போது எழுந்து அடங்கும் சண்டைகளுக்கும் இடமுண்டு. கருத்து வேற்றுமைகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட சண்டைகளும் இல்லறத்தில் தவிர்க்க முடியாதவை. கணவன், மனைவியை மையமாகக் கொண்ட குடும்பச் சண்டைகளைச் சரியாகப் புரிந்துகொள்வதும் சாமர்த்தியமாகச் செயல்படுவதும் அவசியம்.

உங்கள் சண்டையில் சாரம் இருக்கிறதா?

சாரமற்ற சண்டைகளுக்குத் தீர்வில்லை என்பதால் அந்த மாதிரி இழுவையாகும் சண்டைகளே குடும்ப அமைதியைக் குலைக்கின்றன. அவை குழப்பத்தை மேலும் அதிகரித்து ஒரு கட்டத்தில் உறவை இற்றுப்போகவும் செய்துவிடும். சில நேரம் ஒன்றுமே இல்லாதவைகூட சண்டை போலத் தெரியும். கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் காலை நேரம் பெரும்பாலும் போர்க்களம்போல் இருக்கும். சின்ன சின்ன சண்டைகள் தோன்றும். மேற்பார்வைக்கு அவை கவலையளித்தாலும் சாரமற்ற அந்தச் சண்டைகளைப் பின்னர் புரிந்துகொண்டு இயல்பாகிவிடுவார்கள். மாறாக, அவரவர் பிறந்த வீட்டை இழுக்கும்போது சண்டை காரசாரமாகும்.

‘இன்-லா’ இம்சையா?

சண்டையின் பின்னே வீரியமான நபர்களோ காரணங்களோ இருந்தால் அவற்றை அலட்சியப்படுத்த முடியாது. ஆதாம் ஏவாளைத் தவிர்த்த அனைத்துத் தம்பதியருக்கும் ‘இன்-லா’ பிரச்சினை உண்டு என்பார்கள். அதிலும் முக்கியமானது மாமியார் - மருமகள் சண்டை. இரண்டு பெண்கள் சண்டைபோடுவதைவிட கணவன்-மனைவி உரசலாகவே அது வெடிக்கும். ஆணைத் தலைவனாகக் கொண்ட குடும்ப அமைப்பில், ‘உடைமை உரிமை’ கோரும் பெண்களின் இந்த மோதலில் அடுத்தவரின் உரிமைக் கோட்டை அழிக்காதவரை பிரச்சினையில்லை. திருமணத்தின் ஆரம்ப ஆண்டுகளில் பெரிதாகப் பயமுறுத்திப் பின்னர் படிப்படியாக இவை தேய்ந்துபோகும்.

சண்டைக்கான விதிகள்

குழந்தைகள் முன் சண்டை போடுவதைத் தவிர்க்க வேண்டும். இதர குடும்ப உறுப்பினர், உறவினர், நண்பர்கள் போன்றோர் மத்தியிலும்கூட வேண்டாமே சண்டை.

மூன்றாம் நபர்கள் சொல்வதையும் முதுகுக்குப் பின்னால் பேசப்படுவதையும் நம்பி கணவன்–மனைவி சண்டையில் வார்த்தையை விடுவது ஆபத்தானது.

சண்டையின் போக்கில் தன் தரப்பு தவறுகளை ஒப்புக்கொள்வதும் அவற்றுக்காக உடனடியாக வருத்தமோ மன்னிப்போ கேட்பதும் சண்டைக்கு அழகு.

அடுத்தவர் வாயை அடைக்கும் முயற்சியாகத் தனிப்பட்ட பலவீனங்களையோ அந்தரங்கமான பழைய காயங்களையோ கிளறுவது விபரீதத்தைக் கூட்டும்.

மீன் பிடிப்பவர் தக்கையின் மீது கவனத்தைக் குவிப்பதைப் போல கோபத்தின் எந்தக் கணத்திலும் வெளிப்படும் வார்த்தைகளின் மீது கவனம் இருக்கட்டும். வரம்பு மீறி வார்த்தைகளைக் கொட்டுவது ஆழமான வடுக்களை உறவில் உருவாக்கும்.

ஆக்கபூர்வமான சண்டைக்குச் சூழலையும் நேரத்தையும் வரையறுத்துக்கொண்டு தொடங்கலாம். உதாரணத்துக்குக் குறிப்பிட்ட பிரச்சினையை விவாதிப்பதில் அவரவர் தரப்பைப் பேச ஆளுக்கு ஐந்து நிமிடங்கள், பிறகு தீர்வை நோக்கியதாக அடுத்த பத்து நிமிடங்கள், ஆசுவாசத்துக்கு 5 நிமிடங்கள் என அதிகபட்சம் 30 நிமிடங்களுக்குள் முடித்துக்கொள்ளலாம். அப்படியும் தீர்வு கிடைக்கவில்லையெனில் இன்னொரு நாள் அடுத்த சுற்று சண்டையை வைத்துக்கொள்ளலாம்.

சண்டைகளால் பிறக்கும் சந்தோஷம்

குடும்பத்துக்குள் கட்டிப்போட்டது போல உழலும் கணவன் - மனைவி உறவு விரைவில் புளித்துப்போகலாம். அதுபோன்ற நேரத்தில் எழும் சண்டைகள் தற்காலிகமான விலகலை ஏற்படுத்தும். நீடிக்கும் விலக்கம் மீண்டும் ஈர்ப்பாக மலர்ந்து ஒருவரையொருவர் நெருங்கச் செய்யும்.

பெரும்பாலான சண்டைகளில் ‘என்னைக் கவனி, என் வார்த்தைகளுக்குச் செவிகொடு, எனக்கு நேரம் ஒதுக்கு, என் கைகளைக் கோத்துக்கொள், என் தனிமையைப் போக்கு’ என்பது போன்ற இறைஞ்சலும் ஏக்கமுமே மறைந்திருக்கும். இந்த உணர்வுரீதியிலான எதிர்பார்ப்பில் தன் பாலியல் தேவையையும் அது தொடர்பான ஆற்றாமையையும் சண்டையாக வளர்த்தெடுக்கும் கணவன்/மனைவி உண்டு. தன் தேவையை வாழ்க்கைத் துணை புரிந்துகொள்ளும்வரை அங்கலாய்ப்பும் அக்கப்போரும் தொடரும். சேலம் அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியரும் மனநல மருத்துவருமான ஆர்.சேகர் இதை உறுதிப்படுத்துகிறார்.

உறவை வலுப்படுத்தும் பிணக்கு

“கணவன் - மனைவி இருவருக்கிடையிலான பாலியல் தேவையும் சண்டையாக வெளிப்படலாம். குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்தால் தங்களின் தனிப்பட்ட உறவு சீராகச் செல்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பாலியல் ஆற்றாமையே பெரும்பாலான குடும்பங்களில் வெவ்வேறு முகமூடிகளை அணிந்துகொண்டு வருகின்றன. அதேபோல வேறு காரணங்களால் சண்டையிட்டுக்கொள்ளும் கணவனும் மனைவியும் அவர்களுக்கு இடையிலான பாலியல் தேவை நிறைவு பெறும்போது உண்மையான பிரச்சினையின் தீவிரம் குறைவதாக உணர்வார்கள்.

இனங்காட்டாமல் சச்சரவு எழுவதற்கு உடல்நலம், மனநலம் ஆகியவை சார்ந்த வேறு பிரச்சினைகளும் காரணமாகலாம். உதாரணத்துக்குப் பெண்களின் தனிப்பட்ட உபாதைகளால் அவர்களின் மன அமைதி கெட்டு குடும்பத்தின் அமைதி குலையக்கூடும். இவற்றைக் குடும்பத்தினர் புரிந்துகொண்டு நடக்கும்போது பெண்ணின் சிரமங்களும் அதனாலான சச்சரவுகளும் வீரியம் குறைகின்றன.

அடிக்கடி சண்டையிடுபவர்கள் மனப்பதற்றமும் மன அழுத்தமும் மிக்கவர்களாகத் தென்படுவார்கள். இதன் தலைகீழ் விகிதமாகச் சில சண்டைகளில் காரணம் ஏதுவுமின்றி ஒருவரின் மனப்பதற்றமோ அழுத்தமோ அவர்களைச் சண்டைக்காரராக வைத்திருக்கும். இவர்களுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம்” என்கிறார் மருத்துவர் ஆர்.சேகர்.

குடும்பத்தின் ஆரோக்கியமான போக்குக்கும் கணவன் - மனைவி உறவு பலப்படவும் ஆக்கபூர்வமான குடும்பச் சண்டைகள் அவசியம். ஆண்டுக்கணக்கில் நீளும் உறவில் மனதுக்குள் முடங்கும் ஆதங்கம் பலவும் சண்டையின்போது மட்டுமே தம்மை வெளிப்படுத்தும். கணவன் - மனைவி உறவைப் பண்படுத்தவும் சண்டையே களம் அமைத்துக்கொடுக்கும். அக்கறை, அன்பு, புரிதல் எனப் பலவற்றையும் வளர்ப்பதற்குச் சண்டைக்குப் பிந்தையே சூழல்கள் உதவும். இவை அனைத்தையும்விடத் திகட்டாத தாம்பத்தியத்துக்கும் சில நேரம் சண்டைகளே ஜன்னல் திறக்கும்.

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x