Last Updated : 04 Mar, 2018 12:52 PM

 

Published : 04 Mar 2018 12:52 PM
Last Updated : 04 Mar 2018 12:52 PM

இல்லம் சங்கீதம் 25: என்னுள்ளே ஒலிக்கும் ஏக்க கீதம்...

வேண்டியது வேண்டி

வேண்டியது கிட்டியபின்

வேண்டியது வேண்டா

மனது

- கனிமொழி

திருமணத்துக்கு அப்பால் உள்ள உறவை கொச்சைப் பிரயோகத்துடன் குறிப்பிட்டு நாள்தோறும் வெளியாகும் செய்திகளும் அவற்றையொட்டிய குற்றச் செயல்பாடுகளும் குடும்பத்தை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கையறு நிலையும் சமூகத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. இது போதாதென்று எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்று போகிறபோக்கில் சிலர் கொளுத்திப்போடும் சந்தேக நெருப்பு நல்லபடியாக குடும்பத்தைச் செலுத்தும் கணவன் மனைவியைக்கூட எரித்துப் பொசுக்கும்.

கணவன் - மனைவி உறவு சட்டத்தால் மட்டும் வரையறுக்கப்படும்போது அதை மீறும் எண்ணம் தோன்றும். சில வேளைகளில் அது துரோகமாகவும் வெளிப்படும். ஆனால், அதே உறவு அன்பால் வரையறுக்கப்படும்போது அந்த அன்பு இருக்கும்வரை துரோகம் தலை தூக்காது.

மரபில் புதைந்திருக்கும் விலங்கின் இச்சை

ஆணோ பெண்ணோ திருமணத்துக்கு அப்பால் உறவைத் தேடுவதன் பின்னணியில் ஒரு வகையான மரபு சார்ந்த பிரச்சினை இருக்கிறது. சந்ததியைப் பெருக்கும் அடிப்படை உந்துதலில் எந்தக் கட்டுப்பாடுமின்றித் தனக்கான இணையைத் தேர்வு செய்யும் விலங்குகளைப் போன்ற அடிப்படை இச்சை மனிதனுக்கும் உண்டு. ஆனால், நாகரிகம் கிளைத்ததும் இந்தத் தாவல்களைக் கட்டுப்படுத்த குடும்ப அமைப்பு உருவானது.

அதையும் மீறி மரபில் புதைந்திருக்கும் இச்சை உணர்ச்சியில் மனம் அவ்வப்போது அல்லாடுவது இயற்கை. ஆனால், பக்குவமடைந்த மனிதன் புதிதாக முகிழும் நேசத்தை முதிர்ச்சியுடன் எதிர்கொண்டு தேவையான இடைவெளியையும் கடைப்பிடித்து அதை ஆரோக்கியமான நட்பாக மற்றுவான். ஆனால், ஆளுமையில் தடுமாற்றங்கள் கொண்டவர்கள், இந்த உள்ளெழுச்சியால் உந்தப்பட்டு எல்லையைத் தாண்டி குடும்பத்தைச் சிதைக்கிறார்கள்.

மனநல ஆலோசனையைப் பெறலாமே

“என்னோட நியாயமான தேவைகள், விருப்பங்கள் எதுவும் இந்த வாழ்க்கையில நிறைவேறலை. அதை யாரும் புரிஞ்சிக்கவும் இல்லை. அதனால நான் வெளியேற நினைக்கிறேன். அதுக்குச் சமூக விதிமுறைகள் உடன்படாததால் அதை ரகசியமா செய்யறேன் என்பதே தவறிழைப்பவர்கள் சொல்லும் காரணங்கள். அவை எந்த அளவு சுயநலமிக்கவை என்பதையோ தன்னை நம்பிய இணைக்குத் துரோகமிழைப்பதையோ உணரும் தன்மை அவர்களுக்கு இருப்பதில்லை.

இப்படி உடல் இச்சையை மட்டுமே முன்னிறுத்தித் தடம் மாறுபவர்கள் விபரீதங்களுக்கும் ஆளாகிறார்கள்” என்கிறார் மனநல ஆலோசகர் க.சிவக்குமார். மேலும், “திருமணத்துக்கு அப்பால் தாவும் நபர்களின் ஆளுமைத் தடுமாற்றத்தை பிராமிஸ்க்யுடி (Promiscuity) பிஹேவியர் என்பார்கள். இந்த நபர்களின் வாழ்க்கை இணை எத்தனை உண்மையாக இருந்தாலும் தன் நடவடிக்கையால் பிரச்சினைகள் ஏற்படுவது புரிந்தாலும் தடுமாற்றங்கள் தொடர்ந்தபடியே இருக்கும். இவர்களுக்கு மனநல ஆலோசனை அவசியம்” என்கிறார்.

புரிதலால் மீண்டும் செழித்த உறவு

கணவரின் நடவடிக்கைகளில் எதுவோ சரியில்லை என்று சுதாவின் உள்ளுணர்வு எச்சரிக்கை மணி அடித்தது. முறையற்ற நேரங்களில் கணவருக்கு வரும் அழைப்புகளும் கைபேசியில் தனியாகச் சென்று கிசுகிசுப்பதும் வாட்ஸ் அப் தகவல்களே கதி என அவற்றில் மூழ்கிக் கிடப்பதும் அவளின் நிம்மதியைக் குலைத்தன. ஒரு நாள் இரவு கணவன் தூங்கியவுடன் சுதா அவனது செல்போனை ஆராய்ந்தாள்.

அது பல அதிர்ச்சிகளை அளித்து அவளை நிலைகுலைய வைத்தது. அவள் கணவன் யாரோ ஒரு பெண்ணிடம் வலிந்து சென்று பாலியல்ரீதியான உரையாடல் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருப்பது சுதாவுக்குத் தெரியவந்தது.

கோபம் தலைக்கு ஏறினாலும் தன்னிலை இழக்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என யோசித்தாள். கணவனுடன் பேசுவது என முடிவெடுத்தாள். பின்னர் சரியான சூழலை உருவாக்கிக்கொண்டு கணவனுடன் பேச்சை ஆரம்பித்தாள். சமூகத்தில் இருக்கும் மரியாதை, பெரியவர்களின் எதிர்பார்ப்பு, குழந்தைகளின் எதிர்காலம், தன்னுடைய நம்பிக்கை போன்றவற்றுக்கு அவனுடைய முறையற்ற விளையாட்டால் நேரப்போகும் பாதிப்பை எடுத்துச் சொல்லி யோசிக்கவைத்தாள்.

அவன் தவறை உணர்ந்து தலைகுனிந்தவுடன், ‘இதையே நான் செய்திருந்தால் உனக்கு எப்படி வலிக்கும்’ எனக் கேட்டதன் மூலம் அந்தப் புரிதலை நிரந்தரமாக்கினாள். தனது தவறும் அதை மனைவி அணுகிய விதமும் அவன் மனசாட்சியை உலுக்கின. தான் சிக்கவிருந்தது புதைகுழி என்பதை உணர்ந்து விலக முயன்றபோது, வேறு சில பிரச்சினைகள் முளைத்தன. அவனை அறியாமலயே அந்த விளையாட்டுக்குக் கிட்டத்தட்ட அடிமையாகி இருந்தான். அவனால் மனநல ஆலோசனை பெற்ற பின்னரே மீள முடிந்தது. மனநல மருத்துவர் ஒருவர் தெரிவித்த சம்பவம் இது.

தடுமாற்றத்தின் அறிகுறிகள்

  • நடைமுறையில் இந்தச் சங்கடங்களை முன்கூட்டியே தவிர்க்கக் கணவனுக்கும் மனைவிக்கும் கூடுதல் சுதாரிப்பு தேவைப்படுகிறது. கீழே உள்ள சில அறிகுறிகள் அவற்றை இனம் காண உதவலாம்:
  • தங்கள் தவறை நியாயப்படுத்துவதற்காக ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் சண்டையிடுவது.
  • குற்ற உணர்விலிருந்து விடுபடுவதற்காக அடிப்படையில்லாத சச்சரவுகளின் மூலம் ஆசுவாசமடைய முயல்வது.
  • செல்போனின் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுவது, வாட்ஸ் அப்புக்கும் போட்டோகேலரிக்கும் தனியாகப் பூட்டுகள் போடுவது என ரகசியங்களின் சுரங்கமாகவே மாறுவது.
  • வெளிப்படைத்தன்மை, நேர்மை, பெருந்தன்மை போன்றவற்றில் அடிக்கடி இடறுவது.
  • அதுநாள்வரை அலட்சியமாக இருந்த தோற்றப் பொலிவிலும் அலங்காரத்திலும் திடீரெனக் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பிப்பது.
  • உறவில் நாட்டமிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தாலும் அதைத் துணையிடம் வெளிப்படுத்தாமல் தவிர்ப்பது.
  • அலுவலகத்தில் வேலை அதிகம், நண்பனைச் சந்திப்பது, புதிய பொழுதுபோக்கு என்று சாக்குபோக்கு சொல்லி வழக்கத்துக்கு மாறாக வீட்டுக்கு வெளியே அதிகம் அலைபாய்வது.

வேற்றுமைகளைக் களைவோம்

வாழ்க்கை நெடுக உடன் பயணிப்பவர், ஊசலாட்டங்களுக்கு ஆளாகும்போது புரிந்துகொண்டு பக்குவமாகப் பதில் வினையாற்றுவது உறவைச் சீர்படுத்தும். பால் இச்சைக்காக மட்டும் அலைபவராகத் துணையை மதிப்பிட வேண்டாம். தனது எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போனதால் மடி மாறும் குழந்தையாக எங்கேனும் உங்கள் துணையின் மனம் ஆறுதல் தேடியலையவும் செய்யலாம். ரசனைக் குறைவு, அங்கீகாரமின்மை, கருத்து வேறுபாடுகளைப் போன்று அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

எனவே, ‘முன்பு போலவே துணையிடம் மாறாக் காதலுடன் இருக்கிறேனா, அவரின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறேனா, அவரது உணர்வுகளைக் காயப்படுத்தாமல் பலவீனங்களை பந்திவைக்காமல் குடும்ப வாழ்க்கையைச் சீராகக் கொண்டுசெல்கிறேனா’ என்பது உள்ளிட்ட இருவருக்கும் இடையிலான தனித்துவ உறவை ஒரு முறை பரிசீலியுங்கள். தவறு உங்களிடமிருந்தால் சரி செய்ய முயலுங்கள்.

இவற்றுக்கு அப்பாலும் துரோகத்தை அடையாளம் கண்டால் தாமதிக்காமல் வெகுண்டெழுங்கள். அப்போதும் வழிக்கு வரவில்லையென்றால் தீவிர நடவடிக்கைகளில் இறங்குங்கள். ஆனால், அப்போது உணர்வுபூர்வமாக அவரசப்படுவதைத் தவிர்த்து, குழந்தைகள், குடும்பம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து வாழ்க்கையைப் புதிய திசையில் தைரியமாகத் தொடங்குங்கள். உலகம் மிகப் பெரியது தோழிகளே!

(மெல்லிசை ஒலிக்கும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x