Published : 11 Mar 2018 12:00 PM
Last Updated : 11 Mar 2018 12:00 PM

எசப்பாட்டு 26: கட்டுகளைத் தகர்த்துப் பறப்பது எப்போது?

ரலாறு பெண்ணுக்கு இழைத்த பெரிய அநீதி அவளுடைய புழங்கும் வெளியைச் சுருக்கியது. காட்டில் அலைந்து, மலையில் ஏறி, நதியில் நீந்திக் கடலைக் கடந்து வந்தவளை, வீட்டிலொரு பொந்தில் அடைத்து வைத்தது. நீண்ட நெடும் பயணத்தில் அவள் கால்களில் படிந்திருந்த வரலாற்றின் புழுதி கவனமாகக் கழுவி எடுக்கப்பட்டது. மருதாணியும் மெகந்தியும் அவள் பாதங்களில் வரையப்பட்டன.

மெட்டியும் கொலுசும் அணிவிக்கப்பட்டு ‘ஜல் ஜல்’ என்ற சிணுங்கும் ஒலியுடன் வீட்டை மட்டுமே வளையவருபவளாக மாற்றப்பட்டாள். குடும்பத்தில்/வீட்டில் இனவிருத்திக்கான அவளுடைய பாலியல் செயல்பாட்டை அடிப்படையாகக்கொண்டு அவளைப் பற்றிய அனைத்துக் கற்பிதங்களும் புனைவுகளும் ஆண்களால் கட்டமைக்கப்பட்டன. ‘படிதாண்டாப் பத்தினிகள்’ என ஆண்களால் போற்றப்பட்டனர். 20-ம் நூற்றாண்டு வரையிலும் பெண்ணின் புவியியல், வீடு என்ற கட்டிடத்துக்கு உள்ளேயே சுருக்கப்பட்டது.

உழைக்கும் பெண்கள்

எல்லாப் பெண்களுக்குமா இப்படி? நிச்சயமாக இல்லை. அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் பெண்கள் படி தாண்டினால்தான் அன்றன்றைய அப்பம் வீட்டில் எல்லோருக்கும் கிடைக்கும் என்பது யதார்த்தம். ஆகவே, “குறமகள், கொடிச்சி, பரதவப் பெண், நுழைச்சி, உமணப் பெண், உழத்தியர், கடைசியர், ஆய்மகள், எயினப் பெண், மறப் பெண், புலைத்தி, பருத்திப் பெண், கட்டுவிச்சி, அகவன் மகள், விறலி, பாடினி, மூதில் மகள், வெறியாடு மகள் முதலான எளிய இனக்குழுப் பெண்களும் ஆணைத் தலைவனாகக் கொண்ட குடும்பத்தில் வாழ்ந்தாலும் பிற மேட்டுக்குடிக் குடும்பப் பெண்களை ஒத்திருந்தாலும் அவர்களைவிடக் கூடுதல் சுதந்திரம் பெற்றவர்களாக வாழ்ந்திருந்தார்கள். வீட்டுக்குள் அடைந்து கிடக்காமல் உழைப்பின் பொருட்டுத் தெருக்களிலும் உழைக்கும் இடங்களிலும் நடமாடினார்கள் ” (தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு - ராஜ் கௌதமன்).

கொச்சைப்படுத்தப்படும் பெண்ணுழைப்பு

அதிகாரத்தில் இருந்த மேட்டுக்குடியினரும் அதிகாரத்துக்கு அருகிலிருந்த நடுத்தர வர்க்கத்தினரும் சாதி இந்துக்களும் சேர்ந்து உருவாக்கிய பண்பாடே உயர் பண்பாடாகப் பரப்பப்பட்டு நம் மனங்களில் ஏற்றப்பட்டுவிட்டது. தெருக்களில் அலைய விதிக்கப்பட்ட உழைக்கும் பெண்களைக் கொச்சையாகச் சித்தரிப்பது தொடர்கிறது. “எலந்த பயம்…எலந்த பயம்.. இது செக்கச் செவந்த பயம்”, “வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா! என்னைப் பார்க்காம போறாளே சந்திரிகா!” போன்ற பாடல்கள் எல்லாம் வீட்டைவிட்டு வெளியே வருவது பெண்ணுக்கு அழகல்ல என்று பெண்ணின் புழங்கு வெளியையும் புவியியலையும் சுருக்குகிற ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடுதான். இதன் தத்துவ வடிவமாக 2002-ல் காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள், வேலைக்குப் போகும் பெண்களை நடத்தை சார்ந்து தவறாகச் சித்தரித்து, இந்தப் புவியியலின் அரசியலுக்கு ஒரு மத அங்கீகாரத்தை வழங்கினார்.

வீடே உலகம்

பெண்களும் பள்ளிக்கூடம் போகலாம் என்ற நிலை சமூகத்தில் வந்த பிறகுதான் பெண்களின் பாதங்கள் வீட்டையும் தெருவையும் கோயிலையும் வாசலையும் தாண்டிப் பிற நிலப் பகுதிகளுக்கும் சென்றன. அவர்களின் புவியியல் விரியத் தொடங்கியது. கல்விச் சுற்றுலாக் காலங்களில் அவர்கள் கண்ட நிலக் காட்சிகளை மீண்டும் ஒருமுறை காணவே வாய்ப்பில்லாமல் வீடுகளின் சுற்றுச் சுவர்களுக்குள்ளேயே முடிந்துபோகும் வாழ்க்கையே பெரும்பாலான பெண்களுக்கு அமைகிறது.

உள்ளூரிலேயே கணவன் அமைந்துவிட்டால், கணவனின் ஊர் என்னும் இன்னொரு நிலப் பரப்பும் அவளுக்கு இல்லாமல் போகும். அவளுக்குக் கணவனின் பணி நிமித்தமான மாறுதல்களின் போதும் கணவனின் கருணையின் பேரில் அல்லது குழந்தைகளின் மகிழ்ச்சியை முன்னிட்டுச் செல்லும் குடும்பச் சுற்றுலாக்களின்போதும் கிட்டும் புவிக் காட்சிகளும் கிட்டாது போகும்.

அவளுக்கு விதிக்கப்பட்ட நிலக் காட்சியாக அதே அடுப்பங்கரையும் பாத்திரம் கழுவும் ஒதுக்குப் புறமும் ஜலதாரையும் முற்றமும் பின் கட்டுமென ஆகிவிடும். ஊரைச் சுத்தம் செய்ய மட்டும் தெருக்களில், சில நேரம் வீடுகளுக்குள்ளேயும் அனுமதிக்கப்படும் துப்பரவுப் பணியாளர்களைப் போலப் பெண் வீட்டின் எல்லா அறைகளையும் சுத்தம் செய்யவும் வெளியிலிருந்து வரும் வீட்டு ஆடவர் நிம்மதியாகத் துயில் கொண்டு எழத் தோதாக வீட்டை நிர்வகிக்கவும் அனுமதிக்கப்படுவாள். அவளுக்கு, “என் தேவையை யார் அறிவார், உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்” என்ற பாராட்டுப் பத்திரம் எப்போதும் தயாராக இருக்கும்.

ஆண்கள் நுழையாத இடங்கள்

வீட்டின் எல்லா அறைகளுக்கும் பொறுப்பு அவள்தான் என்றாலும் அவளுக்கான நிலப் பரப்பாக இருப்பது அடுக்களைதான். ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் இருக்கும் தீண்டாச்சேரி அதுதான். ஆண்கள் நுழைய மறுக்கும் தீண்டாச்சேரி. அடுப்படி, துணி துவைக்கும் இடம், பாத்திரம் கழுவும் வெளி எனப் பெண் புழங்கும் வெளிகள் எல்லாமே ஆண்கள் நுழையாத சேரிகளாகத்தான் இருக்கின்றன.

பெண் புழங்கும் வெளி குறித்த கவிஞர் கந்தர்வனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. “பாலிதீன் பைக்குள் கிடந்த பாலை வாசலில் வந்து எடுத்துப்போனாள்/காய்கறிக் கூடை கூவல் கேட்டு வாசலில் வந்து வாங்கிப்போனாள்/ வீதி உலா வரும் சாமி பார்த்து வாசலில் வந்து வணங்கிப்போனாள்/ பிச்சைக்காரன் பிலாக்கணம் கேட்டு வாசலில் வந்து வழங்கிப்போனாள்/ கணவன் திரும்பும் காலமறிந்து வாசலில் வந்து தாங்கிப்போனாள்/ அத்தை நின்ற வாசல் வரை அவளும் வந்து திரும்புகிறாள்/மரத்தில் கட்டிய பசுமாடு கயிற்றின் நீளம் சுற்றிவரும்/ வாசல் வரைக்கும் அளவெடுத்து அவளைக் கட்டிய கயிறொன்று”.

பெண்கள் போராடிப் போராடி ஒவ்வொரு நூற்றாண்டிலும் அந்தக் கயிற்றின் நீளத்தை அதிகரித்திருக்கிறார்கள். கல்லூரிவரை, வேலைத் தளங்கள்வரை, ஐ.டி. கம்பெனிகள் இயங்கும் பெங்களூருவரை என. ஆனால், நீளத்தை அதிகரிக்கும் போராட்டங்களைத் தாண்டி கயிறுகளை அறுத்தெறியும் போராட்டத்தை நாம் தொடர வேண்டியுள்ளது.

யுத்தங்களின் தொடர்ச்சியாக மக்கள் அகதிகளாக்கப்படுவதும் தாம் பிறந்த மண்ணைவிட்டு வேற்று நிலப் பரப்புகளில், கூடாரங்களில் வசிக்கும் அவலம் ஏற்படுவதும் இன்று திரும்பத் திரும்ப உலகெங்கும் நிகழ்கின்றன. விவசாயம் பொய்த்துக் கிராமங்களை விட்டுக் குடும்பம் குடும்பமாக மக்கள் இடம்பெயர்வது இன்று தமிழகம் உள்ளிட்டு உலகெங்கும் நிகழும் கொடுமையாக மாறியிருக்கிறது.

இருவேறு நிலங்கள்

இத்தகைய இடப்பெயர்வுகள் பெண்களுக்குப் புதிய நிலப் பரப்புகளை அறிமுகம் செய்தபோதும் அவை துயர்தரும் அனுபவங்களாகவே அமைகின்றன. ‘Jis Lahore Nai Dekhya - லாகூரைப் பார்க்காத கண் என்ன கண்ணோ’ என்ற மேடை நாடகத்தில் (இயக்கம் - ஹபீப் தன்வீர்) ஒரு காட்சி வரும். தேசப்பிரிவினையின்போது இந்தியாவிலிருந்து வெளியேறும் குடும்பம் ஒன்று பாகிஸ்தானில் வந்து ஒரு கிராமத்தில் குடியேறும். ஆண்கள் வேலை தேடி வெளியே போய்விடுவார்கள்.

வேலைத்தளம் எவ்வளவு தூரம், சம்பளம் எவ்வளவு, பஸ் டிக்கட் எவ்வளவு என்பதெல்லாம் அவர்களின் கவலைகளாக இருக்கும். பெண்கள் அந்த நிலப் பரப்பின் தன்மை ஏதும் அறியாததால் அடுப்புக்கு விறகும் சுள்ளியும் எங்கே கிடைக்கும், காய்ச்சலில் கிடக்கும் பாப்பாவுக்குப் பற்றுப்போட பச்சிலை எப்பக்கம் கிடைக்கும் எனத் தத்தளிப்பார்கள். புவியியலும் ஆணுக்கு வேறாகவும் பெண்ணுக்கு வேறாகவும்தான் அர்த்தமாகிறது.

நிலப் பரப்பின் கதை இப்படி இருக்க மனிதர்கள் விண்வெளிக்குப் பயணமானபோது பெண்களை முதலில் அனுப்பவில்லை. அமெரிக்காவில் விண்வெளி வீராங்கனைகள் முதலில் அனுமதிக்கப்படவே இல்லை. சோவியத் நாடுதான் முதன்முதலாக 1963-ல் வாலண்டினா தெரேஸ்கோவாவை அனுப்பியது. பெண்ணுக்குரிய வெளியை வழங்க விஞ்ஞான முன்னேற்றம் மட்டும் போதாது. ஆண் - பெண் சமத்துவம் என்ற கருத்தியல் ஆட்சிக்கு வர வேண்டும். நாம் ஏற்கும் கருத்தியல்தான் புவியியலை எப்படிப் பார்ப்பது, புழங்கும் வெளிகளை எப்படிப் பார்ப்பது என்பதைத் தீர்மானிக்கிறது.

(தொடர்ந்து பேசித்தான் ஆக வேண்டும்)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: tamizh53@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x