Published : 10 Mar 2018 12:24 PM
Last Updated : 10 Mar 2018 12:24 PM

நலம் தரும் நான்கெழுத்து 25: தோஷங்களில் கொடியது எது?

பழக்கம் என்னும் சங்கிலி நம் காலைப் பிணைத்திருப்பதை உணரவே முடியாத அளவுக்கு லேசாக இருக்கும். அந்தச் சங்கிலி உடைக்கவே முடியாத அளவுக்கு வலிமையானதாக ஆகிவிடும்போதுதான், அது இருப்பதையே நாம் உணர்வோம்.

– வாரன் பஃபே

பரம ஏழை ஒருவர் கடவுளிடம் தனது வறுமையைப் போக்குமாறு மனமுருகி வேண்டினார். கடவுளும் இரங்கி, இறங்கி வந்து அவனிடம் கடலுக்கு அருகில் இருக்கும் ஒரு கூழாங்கல் குவியலைக் காட்டி ‘இந்தக் குவியலில் ஒரே ஒரு வைரக்கல் இருக்கிறது. அதை நீயே எடுத்துக்கொள்’ எனச் சொல்லிவிட்டு அடுத்த பக்தரைச் சோதிக்கச் சென்றுவிட்டார். அந்த ஏழையும் ஒவ்வொரு கூழாங்கல்லாகப் பார்த்துப் பார்த்து அது வைரம் இல்லை என்றதும் கடலுக்குள் வீசி எறிந்தார். மணிக்கணக்காக இதையே செய்து அவருக்குப் பழக்கமாகவே ஆகிவிட்டது. கடைசியாக உண்மையிலேயே வைரக்கல்லை எடுத்துப் பார்த்தவுடன் பழக்கதோஷத்தில் அதையும் கடலுக்குள் எறிந்து விட்டாராம். ஆக, தோஷங்களில் கொடியது பழக்கதோஷம்.

கடந்த வாரக் கட்டுரையில் பழக்கம் எப்படி உருவாகிறது என்பதைப் பார்த்தோம். தொடர்ந்து ஒரு செயலைச் செய்துகொண்டே இருக்கும்போது நமது முழுக் கவனமும் தேவைப்படாமல் தன்னியல்பாகச் செய்துமுடிக்கக் கூடியதாக மாறுவதே பழக்கம். அப்படி நமது முழுக் கவனமும் இல்லாமல் நம்மையறியாமல் செய்வதே, சில நேரம் எதிர்மறையான விளைவை உண்டாக்கிவிடும்.

கோபம், பயம் போன்ற எதிர்மறை உணர்வுகள் இதுபோல் நமக்குப் பழக்கமாகி விடுகின்றன. கோபத்தை எடுத்துக்கொண்டால் நமக்குப் பிடிக்காத ஒரு செயல் நடக்கும்போது கோபப்பட்டுப் பழகிவிடுகிறோம். அதன்பின் எப்போது அந்தச் செயல் நடைபெற்றாலும் ஏன் கோபப்படுக்கிறோம் என்பதை உணரக்கூட இயலாத அளவில் அனிச்சையாகக் கோபப்பட்டுப் பழகிவிடுகிறோம். உதாரணமாக, ஒரு பொருள் நாம் நினைத்த இடத்தில் இல்லை, அல்லது வாகனம் ஓட்டும்போது குறுக்கே யாராவது வந்தால் உடனே ஆங்கிலத்தில் ‘ ரிஃப்ளெக்ஸ்’ எனச் சொல்லப்படுவதுபோல் அனிச்சையாகக் கோபப்பட்டு எரிந்துவிழுகிறோம். ஒரு கணம் ‘இதற்கு ஏன் கோபப்பட வேண்டும்?’ என யோசித்தால் கோபப்படாமல் இருந்து பழகலாம்.

பழக்கத்தைக் கட்டுப்படுத்துதல்

அதுபோன்றே அச்சமும். புது மனிதர்களிடம் பழகுவது, மேலதிகாரிகளிடம் பேசுவது, மேடையிலே பேசுவது போன்ற பல விஷயங்களுக்கும் அச்சப்பட்டு அச்சப்பட்டு அதுவே பழக்கமாகி விடுகிறது. ‘மனிதன் பழக்கத்துக்கு அடிமை’ என்று சொல்வதுபோல் பழகிப் பழகி நான் இப்படித்தான் எல்லாவற்றுக்கும் கோபப்படுவேன், பயப்படுவேன் எனத் தன்னைப் பற்றியே ஒரு முன்முடிவுக்கு வந்துவிடுகிறோம். பின்னர், அதை மாற்ற முயல்வதே இல்லை.

புகை, மது போன்ற போதைப் பழக்கங்களும் இப்படித்தான் பழக்கமாகின்றன. மணியடித்தால் சோறு என்று பழகிய பாவ்லோவின் நாய்க்கு மணியடித்தாலே எச்சில் சுரப்பதைப் போல், ‘ஒரு மணியடித்தால் கண்ணே உன் ஞாபகம்’ எனக் காலை எழுந்தவுடனேயே நிதம் ஒரு தம் பற்றவைத்து நிதானம் அடைபவர்கள், மாலை மங்கத் தொடங்கியதும் மாலை நேரத்து மயக்கத்தை மதுவில் தேடுபவர்கள் எனப் பலரும் பழக்கத்தின் அடிமைகளே. இன்னும் சிலர் துரித உணவு போன்றவற்றுக்கும் இதுபோன்றே மூளையைப் பயன்படுத்தாமல் பழகிவிடுகிறார்கள்.

இதுபோன்ற பழக்கங்களிலிருந்து விடுபட வேண்டுமென்றால் அனிச்சையாகப் பழக்கமான செயல்களைச் செய்யாமல் கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பழக்கத்தை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதாவது எந்தெந்தச் சூழல்களில் எல்லாம் நாம் விரும்பாத செயல்ளைச் செய்கிறோமோ, அந்தச் சூழ்நிலைகளில் மிகவும் முயன்று விழிப்புணர்வுடன் அச்செயலைச் செய்யாமல் இருந்து பழக வேண்டும். இல்லையென்றால் ‘பழகத் தெரிந்த உயிரே !உனக்கு விலகத் தெரியாதா?’ எனப் புலம்ப வேண்டியதுதான்.

பாதுகாப்பு வளையத்துக்கு வெளியே

தொடர்ச்சியாகச் செக்குமாடுபோல் ஒரே விஷயத்தைச் செய்துகொண்டே இருக்கும்போது திடீரெனப் புதிதாக ஒரு சவால் தோன்றினாலோ சூழ்நிலை மாறினாலோ அதை உணரவோ சமாளிக்கவோ முடியாமல் போய்விடும். பல வருடங்களாக ‘ராமனின் மனைவி சீதை’ என்று படித்து வந்தவரிடம் ஒரு நாள் ‘சீதையின் கணவர் யார்?’ என மாற்றிக் கேட்டால் குழம்பிவிடுவார். புதுமை விரும்புதல் என்ற பண்பைப் பற்றி முன்பே பார்த்தோம்.

முன்னேற்றத்துக்குப் பயிற்சியும் பழக்கமும் முக்கியக் காரணமாக அமைவதைப் போன்றே, பழக்கமே பல முறை முன்னேற்றத்துக்குத் தடையாகவும் அமைந்துவிடலாம். புதிதாக ஒரு வாய்ப்பு வரும்போது பலரும் அதை ஒரு பிரச்சினையாகப் பார்ப்பார்கள். பழகிய சூழல் தரும் பாதுகாப்பை இழக்க விரும்பாமல் கூட்டுப் புழுவாக இருக்கவே விரும்புவார்கள். ஆனால், கூட்டுக்குள்ளேயே இருக்கும் பறவைக் குஞ்சுக்கு வானம் வசப்படாதே! அந்தப் பாதுகாப்பு வளையத்தைவிட்டு வெளியே வருவதுதான் நம்மை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வழி.

பழக்கமும் பயிற்சியும் நாம் செல்லும் பாதையில் வெற்றியை நோக்கிச் செலுத்தும். அதேநேரம் பழக்கத்தை மீறிச் செல்வதுதான் புதுப்புதுப் பாதைகளில் நாம் செல்ல உதவும். இந்த இரண்டுக்குமான சமநிலையே நலம்தரும் நான்கெழுத்து.

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x