Last Updated : 28 Mar, 2018 10:51 AM

 

Published : 28 Mar 2018 10:51 AM
Last Updated : 28 Mar 2018 10:51 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: இது ஆண்களுக்கான இடமா?

 

‘‘அ

டடா, என்ன துடிப்பான குழந்தை! எத்தனை வலிமையான கைகள்! எதிர்காலத்தில் நல்ல பலசாலியாக இவன் உருவாகப்போகிறான். இப்பொழுதே எப்படி உதைக்கிறான் பாருங்கள். வலுவான கால்கள். உலகம் முழுக்கச் சுற்றிவர வேண்டுமே, சும்மாவா? கொஞ்சம் வளர்ந்த பிறகு, நிச்சயம் கராத்தே வகுப்புக்கு அனுப்பி வையுங்கள். அட, என்ன அட்டகாசமான சிரிப்பு! கண்களைப் பார்த்தாலே பெரிய புத்திசாலி என்று தெரிந்துவிடுகிறது. அமெரிக்காவில் பெரிய நிறுவனத்தையே தலைமை தாங்கி நடத்தப் போகிறான், பாருங்கள். குட் பாய்!’’

வீட்டுக்கு வந்த நண்பர் கொஞ்சி முடிக்கும்வரை காத்திருந்த குழந்தையின் அம்மா மெதுவாகச் சொன்னார்: ‘‘பையன் இல்லை, பெண் குழந்தை.’’

‘ஓ... நான் சரியாகக் கவனிக்கவில்லை. பாருங்கள், கன்னத்தில் எத்தனை அழகாக குழி விழுகிறது! கண்ணே பட்டுவிடும் அளவுக்கு அழகோ அழகு. பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். அட, கைகள் எத்தனை மென்மையாக இருக்கின்றன. நாளையே உங்களைவிட நன்றாகச் சமைக்கப் போகிறாள், பாருங்கள். வளையல் போடவில்லையா? குழந்தைக்கு மை வைத்தால் நன்றாக இருக்குமே! இவள் கண்களைப் பார்த்தாலே அமைதியான, அடக்கமான பெண் என்று தெரிந்துவிடுகிறது. கொஞ்சம் போகட்டும், தவறாமல் பாட்டு கற்றுக்கொடுங்கள். சரி, நான் கிளம்பட்டுமா?’

நண்பர் கிளம்பி நீண்ட நேரம் ஆன பிறகும் அந்த அம்மாவுக்குப் புரியவில்லை. குழந்தை என்னவோ அதே குழந்தைதான். ஆனால் ஆண் என்று நினைத்துப் பார்க்கும்போது அது பலசாலியாக இருக்கிறது. பெண் என்றதும் அழகு பொம்மையாக மாறிவிட்டது. ஆண் குழந்தை என்றால் ஜாலியாக உலகைச் சுற்றி வரவேண்டுமாம். பெண் குழந்தையை அம்மா பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவேண்டுமாம்.

ஆண் குழந்தை அட்டகாசமாகச் சிரிக்குமாம். பெண் குழந்தை கன்னத்தில் குழி விழ அழகாகச் சிரிக்குமாம். கண்ணைப் பார்த்தால் முதலில் புத்திசாலி குழந்தை தெரிகிறதாம். அடுத்த முறை பார்ப்பதற்குள் அந்தப் புத்திசாலி குழந்தை திடீரென்று அடக்கமான குழந்தையாக மாறிவிட்டதாம். ஒரே குழந்தை ஏன் அவருக்கு இரண்டு விதமாகக் காட்சியளிக்கவேண்டும்? இதென்ன ஜீபூம்பா மாயம்?

இப்படிப் பல மாயங்கள் இருக்கின்றன. ஏன் பெண் குழந்தைகளின் ஆடைகள் பெரும்பாலும் பிங்க் நிறத்தில் இருக்கின்றன? பெண் குழந்தைகளுக்கு அந்த நிறம்தான் பிடிக்கும் என்பதை ஆடை உற்பத்தியாளர்கள் எப்படிக் கண்டுபிடித்தார்கள்? ஒவ்வொரு வீட்டுக்கும் போய் குழந்தைகளைப் பேட்டி எடுத்தார்களா? ஆம் எனக்கு பிங்க் என்றால் உயிர் என்று பெண்கள் சொன்னார்களா? ஐயய்யே எனக்கு பிங்க் பிடிக்காதே என்று பையன்கள் அலறினார்களா?

அதை விடுங்கள். பொம்மைகள் என்ன செய்தன? ஆண் குழந்தைகளுக்கு ஏன் காரும் டிரக்கும் ரோபோவும் வாங்கித் தருகிறார்கள்? பெண் குழந்தைகளுக்கு அவற்றை வைத்து விளையாடத் தெரியாதா? எனக்குச் சமையல் பாத்திரம், சொப்புச் சாமான் வாங்கிக் கொடு. நான் இப்போதே பயிற்சி எடுத்து நாளையே விருந்து சாப்பாடு சமைக்கவேண்டும் என்று பெண் குழந்தை அடம் பிடித்ததா? அல்லது என்னைப் பெண் குழந்தையிடம் தராதே என்று கார் பொம்மை சொன்னதா?

பாவம், பெண் குழந்தைக்கு மென்மையான கைகள். ஆ, ஊ என்று கத்தி கராத்தே சண்டையெல்லாம் போடமுடியாது. அதனால் பாட்டுப் பாட அனுப்பிவிடலாம். பெண் குழந்தைகளுக்கு மை, வளையல் எல்லாம் போட்டு அலங்கரிக்கவேண்டும். ஆண் குழந்தைகளுக்கு அதெல்லாம் தேவையில்லை.

IPMV -2

யார் சொன்னார்கள்? எல்லோரும் சொல்கிறார்கள். ஏன் அப்படிச் சொல்கிறார்கள்? தெரியாது. ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? நான் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை ஒரு குழந்தை மற்றவர்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறது. நான் ஆண், நான் வலிமையானவன் என்பதை ஒரு குழந்தை 6 வயதுக்குள் தெரிந்துகொண்டுவிடுகிறது.

நான் ஒரு பெண், நான் வளர்ந்த பிறகு சமையல் செய்யப் போகிறேன் என்பதை ஒரு பெண் குழந்தை அதே 6 வயதுக்குள் கற்றுக்கொண்டுவிடுகிறது. ஆண் குழந்தை எப்படி இருக்கவேண்டும், பெண் குழந்தை எப்படி இருக்கவேண்டும் என்பதை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் யாராவது கற்றுக்கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த நண்பரைப் போல.

இந்த உலகம் மாறிவிட்டது என்பதை அந்த நண்பருக்கும் அவரைப்போலவே இருக்கும் மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும். எப்படி? ஒரு சுலபமான, சுவாரசியமான வழி இருக்கிறது. இதுவரை கால் பதிக்காத ஒரு முக்கியமான இடத்துக்கு ஆண்கள் துணிச்சலாகச் செல்ல வேண்டும். அந்த இடம், வீட்டில் உள்ள சமையலறைதான். எனக்கும் அதே எண்ணிக்கையில்தானே விரல்கள் இருக்கின்றன. நான் ஏன் டீ போடக் கற்றுக்கொள்ளக் கூடாது? நான் ஏன் இட்லி வேக வைக்கக் கூடாது? அறிவியலும் புவியியலும் கற்றுக்கொண்டால் போதுமா? அவியலும் பொரியலும் செய்வதும் முக்கியம் அல்லவா?

ஆண் சமையலறைக்குள் நுழைந்ததும் பெண் அங்கிருந்து வெளியில் வந்து (உள்ளே இரண்டு பேருக்கும் இடம் இருக்காது இல்லையா?), ஊர் உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும். ஒரு நாளைக்கு நூறு கேள்விகள் கேட்கவேண்டும். நான் ஏன் கால்பந்து விளையாடக் கூடாது? நான் ஏன் வலிமையாக இருக்கக் கூடாது? பாட்டுக்குப் பதில் நான் ஏன் கராத்தே கற்றுக்கொள்ளக் கூடாது? எனக்கு ஏன் சொப்பு, சாமான்கள் வாங்கிக்கொடுக்கிறீர்கள்? நான் ஏன் சத்தம் போட்டுச் சிரிக்கக் கூடாது?

பிறகு, இரண்டு பேருக்குமே ஒரு முக்கியமான கேள்வி பாக்கியிருக்கிறது. யாராவது துப்பறிந்து விடை கண்டுபிடிக்கமுடியுமா என்று பாருங்கள். எத்தனையோ நிறங்கள் இருக்க, இந்த பிங்கை எங்கிருந்து பிடித்தார்கள்?

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x