Published : 09 Sep 2014 13:12 pm

Updated : 09 Sep 2014 13:12 pm

 

Published : 09 Sep 2014 01:12 PM
Last Updated : 09 Sep 2014 01:12 PM

கால் ரேகையைப் படித்தறியும் பழங்குடிகள்

“எங்களது தங்குமிடம் பாலைவனத்தின் ஒரு மூலையில் மிகச் சிறிய கிராமத்தில் இருந்தது. ராபர் (குஜராத்) என்ற பெயருடைய அந்த இடத்தில் மண்சுவருடன் கூடிய ஒரு காவல்நிலையம்.

அங்கே இரு காவலர்கள், அவர்களுக்கு உதவும் பக்கி (Puggee) எனப்பட்ட தடமறிதலில் கரைகண்ட ஒரு பழங்குடி இனத்தவர் இருந்தனர். அவரது வேலை அந்தக் கிராமத்தின் எல்லைக்குள் வந்துபோகும் மனிதர்கள், ஒட்டகங்களின் காலடித் தடத்தை ஆய்வு செய்து வெளியாட்களோ அல்லது வெளி ஒட்டகமோ வந்ததா, போனதா என்று கண்டறிவதுதான்.

தடமறிதல் (Tracking) கலையில் சிறந்த விற்பன்னர்களான இப்பழங்குடி மக்கள் பரம்பரை பரம்பரையாக இதில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு நபரின் காலடித் தடத்தையும், அவர்களுடைய முகத்தைப் போல அப்பழங்குடிகள் அறிவர். அதேபோல அங்குள்ள ஒட்டகங்களின் காலடிச் சுவடுகளும் அவர்களுக்கு அத்துப்படி.

பரந்து விரிந்த இந்தப் பாலைவனத்தில் ஒட்டகத் திருட்டு அடிக்கடி நடக்கும். அப்போதெல்லாம், இந்தத் தடமறிபவர்களின் உதவியால் காவல்துறை அவற்றை மீட்கும். இதனாலேயே ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இவர்களுக்குப் பணியிடம் இருந்தது. அவர்களது திறமை நம்ப இயலாத, ஆனால் அதிசயிக்கத்தக்க ஆற்றல் என்பதில் அய்யமில்லை.

ஆச்சரியக் கண்டறிதல்

கட்ச் வளைகுடாவின் அன்றைய ஐ.ஜி. கான் பகதூர் மால்கம் கொத்வாலா தன் வாழ்க்கையில் கண்ட பிரமிக்கத்தக்க தடமறிபவர்களின் ஆற்றலை எனக்கு விவரித்தார். ஒருமுறை சற்று நொண்டி நடக்கும் ஒரு ஒட்டகம் காணாமல் போய்விட்டது. முன் கால்களில் அது ஊனமுற்றிருந்தது.

திருடிக்கொண்டு போன ஊர்க்காரனுடன் வெகுதொலைவில் உள்ள வேறொரு இடத்துக்கு அது போய்விட்டது. அதனால் அதன் தடமும் கிடைக்கவில்லை.

இரண்டு வருடங்களுக்குப் பின்னர், குறிப்பிட்ட ஒரு தடமறிபவர் திருடப்பட்ட ஊரிலிருந்து தனது சொந்த ஊருக்குப் போனார். அவரது கிராமத்தில், முன் காலில் நொண்டி செல்லும் ஒரு ஒட்டகத் தடத்தை அவர் பார்த்திருக்கிறார்! இத்தடம் காணாமல் போன அதே ஒட்டகத் தடம் என்று அவரது தடமறிதல் அறிவு சொன்னது! விடாமல் அதைப் பின்தொடர்ந்த அவர், அதன் தற்போதைய சொந்தக்காரனைக் கண்டார்.

ஆனால், அவனது காலடித் தடமும் திருடியவனின் காலடித் தடமும் ஒன்று சேரவில்லை! என்றாலும், தடமறிபவரின் தொடர் கேள்விகளால் அந்த ஒட்டகத்தின் முந்தைய சொந்தக்காரனைத் (திருடனை) தேடிப் பிடித்தார்.

அவனது காலடித் தடமும் இரு வருடங்களுக்கு முன் திருடியவனின் காலடித் தடமும் ஒன்று என்பதைக் கண்டறிந்தார்! பிறகு என்ன? காவலரின் அணுகுமுறையால் திருடன் மாட்டிக் கொண்டான்! ஒட்டகம் ஊர் திரும்பியது.

கல்விக் கூடத்தில் பயில முடியாத இது போன்ற அரிய, ஒப்பற்ற திறனை, ஒரு கலையாக வாழையடி வாழையாகப் பயின்ற பழங்குடி இனத்தவரை ஐ.ஜி. மெச்சினார்.

அது அருகி வருவதையும் அவர்களுக்கு முன்பு போலவே வேலைவாய்ப்பு இல்லாமல் போவதையும் எண்ணி, நான் மிகவும் வருந்துகிறேன். என்னவொரு நுண்கலை!"

- ‘பேர்ட்ஸ் ஆஃப் கட்ச்' நூலில் பறவையியல் அறிஞர் டாக்டர் சாலிம் அலி

அரிய கலை

இந்த இடத்தில் சாலிம் அலியின் மேற்கண்ட குறிப்பை மேற்கோள் காட்டுவதற்கு அவசியம் உள்ளது. போன மாத இறுதியில் சத்தியமங்கலம் திம்பம் பகுதியில் உலவிய, ஆட்கொல்லி என்று அடையாளப்படுத்தப்பட்ட சிறுத்தை கூண்டில் பிடிபட்டது.

அதற்குப் பின்னர் அப்பகுதி மக்கள் பயமின்றி நடமாடுகின்றனர் என்ற செய்தி வெளியானது. அத்துடன் கூண்டினருகே வனத்துறை அதிகாரிகளும் கால்நடை மருத்துவரும் சிரித்த முகத்துடன் உட்கார்ந்து எடுத்துக்கொண்ட படமும் வெளியிடப்பட்டிருந்தது - கூண்டினுள் மயக்க மருந்து செலுத்தப்பட்ட சிறுத்தையுடன்!

இந்த இடத்தில் காட்டினுள் தடமறிந்து விலங்குகளைக் கவனிப்பதும், பிரச்சினைகளை எதிர்கொள்வதும் எப்படி அருகி வருகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். பழங்குடி இனத்தவரும்கூட இந்தக் கலையை (தடமறிதல் - Tracking) மெதுவாக மறந்து வருகிறார்கள்.

தடமறிதல் அல்லது காலடிச் சுவட்டை வைத்து விலங்குகளின் நடமாட்டத்தையும் இயல்பையும் அறிவது என்பது கைதேர்ந்த ஒரு காட்டுயிர் ஆர்வலரின் அரிய புலமை என்றால் மிகையல்ல.

திரிக்கப்படும் உண்மைகள்

ஜிம் கார்பெட்டைப் படித்தவர்கள் அவரது இந்த நுண்ணிய அறிவைப் போற்றாமல் இருக்க முடியாது. அல்லது யானை டாக்டர் கே (கிருஷ்ணமூர்த்தி) போன்றோரின் காட்டுயிர் கட்டுரைகளைப் படிக்கும்போது, இதன் மகிமையை உணர முடியும்.

இன்றைய காட்டுயிர் ஆராய்ச்சியாளர் களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியும். ஆனாலும்கூட, அக்கலை வேகமாக அழிந்து வருகிறது என்பதில் அய்யமில்லை. நாளடைவில் முற்றிலும் அற்றுப் போகலாம்.

சமீபத்திய பத்திரிகைகளில் திம்பம் பகுதியில் மீண்டும் ஒரு ஆட்கொல்லி சிறுத்தை மற்றுமொரு மனிதனைக் கொன்றது என்ற செய்தி வெளியாகி இருந்தது. இப்படி, ஒரு சிறுத்தை பல்வேறு கதைகள் சேர்க்கப்பட்டுக் கொலைகாரச் சிறுத்தையாகச் சித்தரிக்கப்படுகிறது.

இந்த இடத்தில் பல கேள்விகள் எழுகின்றன: ஒரு சிறுத்தை பிடிபடும் முன்னரே, அது ஆட்கொல்லிச் சிறுத்தை என்பதை எப்படி முடிவு செய்ய முடியும்? எது உண்மையான ஆட்கொல்லி? சமீபத்தில் உலவுவதா அல்லது முன்னர் பிடிபட்டதா? பதிலில்லை.

எது ஆட்கொல்லி?

பதில் கிடைக்காததற்குக் காரணம், சிறுத்தையை அதன் தடம் மற்றும் நடவடிக்கைகளின் அடிப்படையில் பின்தொடர்ந்து அறிந்துகொண்ட பிறகு பிடிக்கவில்லை என்பதே! ஆட்கொல்லிகளின் பாதச் சுவட்டின் அளவு, ஆணா பெண்ணா என்ற தீர்மானம், அது ஊனமுற்றதா, இல்லையா, குட்டிகளுடன் உலவும் பெண் சிறுத்தையா என்று அறிய ஒரு நுணுக்கமான ஆய்வு நடத்தப்படுவதே இல்லை.

அதற்கு, தடமறிதல் கலையை நன்கு அறிந்த காட்டுயிர் ஆர்வலரோ அல்லது பழங்குடியினரோ நாடப்படவில்லை அல்லது காட்டினுள் புகுந்து ஆராயத் தவறிவிட்டார்கள் என்பதுதான் உண்மையான காரணம்.

மரபும் நவீனமும்

ஒவ்வொரு ஆட்கொல்லியை வேட்டையாடிய பின்னரும், அதுதான் ஆட்கொல்லி என்பதைப் பல வகைகளில் கார்பெட் உறுதிப்படுத்துவார் - உதாரணம் கண்டா ஆட்கொல்லி. அதேபோல அத்திக்கடவு அருகில் உள்ள கெத்தைக் காடு பழங்குடியினர் செவிட்டு யானையின் (மிக வலிய கொம்பன் யானை) தடத்தை எந்த இடத்திலும் கண்டறிந்துவிடுவார்கள்! இந்தக் காலத்தில் இது எப்படிச் சாத்தியப்படும் என்று சிலர் வாதிடலாம்!

தற்போது தடமறிதல் கலைக்கு உறுதுணையாகக் கேமரா பொறியை (Camera Trap) பயன்படுத்தலாம். விலங்கின் தன்மை, உடல்வாகு, நடமாட்டம் எனப் பல தகவல்களைத் தடமறிதல் மூலம் கண்டறிந்து, பின்னர் கேமரா பொறி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம். குறிப்பிட்ட ஒரு பகுதியில் உலவும் ஊனுண்ணிகளின் தோற்றம் மற்றும் எண்ணிக்கையையும் அறியலாம்.

தொலைநோக்குப் பார்வை

பறவையியல் பிதாமகர் டாக்டர் சாலிம் அலியின் கூற்றுப்படி தடமறிதலில் சிறந்த பழங்குடியினர் அல்லது காட்டுயிர் நிபுணர்-ஆர்வலரின் சேவையை அங்கீகரிப்பதுடன், அவர்களுக்கு வேலையும் தந்தால், இயற்கையையும் காட்டுயிரையும் உண்மை யிலேயே பாதுகாக்கலாம்.

இல்லையென்றால், சந்தேகத்தின் பேரில் எல்லாப் புலிகளையும் சிறுத்தைகளையும் பிடித்து உயிரியல் பூங்காக்களில் அடைப்பதோ அல்லது சுட்டு கொல்வதோ நடக்கும்.

இதில் வனத்துறையைக் குற்றம் சாட்டுவதிலும் பயனில்லை. ஏனெனில், பிரிட்டிஷ் காலத்து நல்ல வழக்கங்கள் பலவற்றைத் தொடரத் தவறிவிட்டோம். அதேநேரம் காலத்துக்கு ஒவ்வாத, தவறான பல விஷயங்களை இன்னும் கடைப்பிடித்துக் கொண்டி ருக்கிறோம். தேவை, அணுகுமுறை மாற்றம், மாறுபட்ட தொலை நோக்குப் பார்வை.

- சு.சந்திரசேகரன்,
இயற்கை ஆர்வலர்
தொடர்புக்கு: hkinneri@gmail.com


பாலைவனம்பழங்குடிகள்கால் ரேகைகால் தடமறிதல்விலங்குகல்இயற்கைவனத்துறைபுலிகள்பாரம்பரிய அறிவு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author