Last Updated : 24 Mar, 2018 11:10 AM

 

Published : 24 Mar 2018 11:10 AM
Last Updated : 24 Mar 2018 11:10 AM

நலம், நலமறிய ஆவல் 27: பரு ‘முகம்’ காட்டாதிருக்க...

என் முகத்தில் அடிக்கடி பருக்கள் வருகின்றன. இதற்கு ஆங்கில மருத்துவத்தில் என்ன சிகிச்சைகள் உள்ளன? பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க முடியுமா? இதற்கெனத் தனி உணவுமுறை உள்ளதா?

- ஜெ. பிரபா, மின்னஞ்சல்

நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் எனும் ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’ (Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இது முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது.

மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். விளைவு, எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால், தோலுக்கு அடியில் சுரக்கிற சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். இப்படி சீபம் சேரச்சேர தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும். இதுதான் பரு (Acne vulgaris). அடுத்து, சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படுகிற வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறுகிற வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்குப் பாதை போடும்.

பருவானது ஆரம்பத்தில் கரு நிறக் குருணைபோல் (Blackhead) தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள் (Whitehead) வெளிவரும். இந்த நேரத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற பாக்டீரியா வீரியமடைந்து பருக்களில் சீழ்ப்பிடிக்க வைக்கும். அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினாலும் பருக்கள் சீழ்ப் பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும். இதற்குச் சீழ்க்கட்டிப் பருக்கள் (Pustules) என்று பெயர். இவற்றுக்குச் சிகிச்சை பெறவில்லை என்றால், உறைகட்டிகளாக (Cystic acne) மாறிவிடும்.

எப்போது, எதற்கு வருகிறது?

பொதுவாக 13 வயதில் முகப்பரு தொடங்கும். 100-ல் 85 பேருக்கு 35 வயதுவரை இது நீடிக்கும். மீதிப் பேருக்கு இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். அம்மா, அப்பாவுக்குப் பரு வந்திருந்தால், வாரிசுகளுக்கும் இது வருவதற்கு அதிக சாத்தியம் உண்டு. பெண்களுக்கு மாத விடாயின்போது, சில ஹார்மோன்களின் அளவு மாறும்.

இதனால், அந்த நேரம் மட்டும் முகப்பரு ஏற்படும். சினைப்பையில் நீர்க்கட்டி (Poly Cystic Ovary) இருக்கிற பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம். மனக் கவலை உள்ளவர்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளில் சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். இதன் விளைவாக இவர்களுக்கு முகப் பருக்கள் தோன்றலாம். ‘5 - ஆல்பா ரெடக்டேஸ்’ (5-Alpha -reductase) எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பரு ஏற்படலாம். இந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தி, பருக்களை வரவேற்கிறது.

என்ன சிகிச்சை?

பருக்களின் மேல் பூசப்படுகிற களிம்புகளும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரை ரொம்பவே கவலைப்பட வைப்பது, இந்தத் தழும்புகள்தாம்.

இவற்றை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாப்ரேசன் (Dermabrasion), கொலாஜன் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிக்கான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் உள்ளன. சருமநல மருத்துவரின் ஆலோசனைப்படி தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்டுவிடலாம்.

கொழுப்பு உணவு வேண்டாம்!

நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்ஸா, பர்கர், தந்தூரி உணவு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, எண்ணெய்ப் பலகாரங்கள் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.

பருக்கள் வராமல் தடுக்க……

# முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது.

# தினமும் குறைந்தது மூன்று முறை சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் முகத்தைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

# அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சந்தன சோப்பு நல்லது.

# சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கு என்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்வது இன்னும் நல்லது.

# முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது.

# தினமும் இரு முறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது.

# பருக்களை அடிக்கடி கிள்ளக் கூடாது.

# முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது, அழகூட்டும் களிம்புகளை பயன்படுத்துவது போன்றவற்றில் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றினால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். | மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in | முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம் | 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x