Last Updated : 05 Sep, 2014 01:34 PM

 

Published : 05 Sep 2014 01:34 PM
Last Updated : 05 Sep 2014 01:34 PM

லெஃப்ட் ரைட் லெஃப்ட்: கட்சி மட்டுமல்ல கம்யூனிஸம்

இரண்டாண்டுகளுக்கு முன்பு கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளரான எம்.எம்.மணி ஒரு கட்சிக் கூட்டத்தில், “கட்சிக்கு எதிரானவர்களைக் கொன்றிருக்கிறோம். எதிரிகள் குறித்துப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களை ஒவ்வொருவராகக் கொல்வோம்” என உணர்ச்சி வசப்பட்டுப் பேசியிருந்தார். அதற்குச் சில மாதங்கள் முன்புதான், மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி என்னும் புதிய கட்சியைத் தொடங்கியிருந்த டி.பி.சந்திரசேகரன் கொல்லப்பட்டிருந்தார். மணியின் இந்தப் பேச்சு நாடு முழுவதுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இது கேரளத்தின் அரசியல் படுகொலைகளை இந்திய அளவிலான கவனத்திற்கு எடுத்துச் சென்றது.

இம்மாதிரியான அரசியல் கொலைகளைப் பின்னணியாகக் கொண்ட மலையாளப் படம் ‘லெஃப்ட் ரைட் லெஃப்ட்’(2013). 1960, 1970, 1980களில் நடக்கும் மூன்று சம்பவங்கள், மூன்று சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கின்றன. அவர்களின் ஆளுமையைப் பாதிக்கின்றன. இந்த மூன்று சிறுவர்களின் வாழ்க்கையின் ஊடே கேரள கம்யூனிஸ்ட் கட்சி அரசியலும் பதிவுசெய்யப்படுகிறது. இந்தச் சிறுவர்களில், கய்தேறி சகதேவனும் செகுவரா ராயும் இடதுசாரிப் பின்புலம் கொண்ட குடும்பத்தின் வாரிசுகள். இடதுசாரிகளாகவே ஆகின்றனர். 1980களின் இறுதியில் வளரும் ஜெயன், பணம் இல்லாத காரணத்தால் தன் அக்கா அரசுப் பொது மருத்துவமனையில் இறக்க நேரிட்டதால் பணமே வாழ்க்கையில் முக்கியம் எனக் கருதுகிறான். லஞ்சம் வாங்குவதற்காகவே காவல் துறை உதவி ஆய்வாளர் ஆகிறான்.

உண்மையான கம்யூனிஸ்ட்

கட்சிக்காகச் சித்தப்பாவையும் தந்தையையும் பறிகொடுத்த சகதேவன் மார்க்சிஸ்ட் கட்சியின் RPI(M) இளைஞர் பிரிவான ஒய்.எஃப்.ஐ. வழியாக வளர்ந்து அதன் தலைவராகிறான். மாநில ஆட்சி நிர்வாகத்திலும் செல்வாக்கு மிக்க தலைவராகிறான். சகதேவனின் வளர்ச்சி ‘தோழர் எஸ்.ஆர்.’ என அழைக்கப்படும் அதன் மூத்த தலைவருக்கு உவப்பாக இருக்கவில்லை. ஒரே கட்சியில் இருந்தாலும் இருவரும் எதிர்க்கட்சியினரைப் போல் செயல்படுகின்றனர். இவர்களுக்கு இடையிலான பொறாமையும் பகையும் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் கூட்டங்களிலும் வெளிப்படுகின்றன. இந்த இரு பாத்திரங்களும் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவர்களான வி.எஸ்.அச்சுதானந்தனையும் பிணராயி விஜயனையும் சித்திரிப்பதுபோல உருவாக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களை நேரடியாகச் சித்திரிப்பதால் கேரள மார்க்சிஸ்ட் ஆதரவாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. கட்சியின் ஆதிக்கம் நிறைந்த மலபார் பகுதியில் இந்தப் படத்திற்கு அதிகாரபூர்வமற்ற தடை நிலவியது.

தந்தையைக் கட்சிக்காகப் பலிகொடுத்த செகுவரா ராய்க்குக் கட்சி அலுவலகமே வீடாகிறது. அங்கேயே வளர்ந்து படிக்கிறான். காத்திரமான கம்யூனிஸ்ட்டாக உருவாகும் ராயின் உக்கிரமான பேச்சுக்குக் கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கிறது. டெல்லி வரை வரை சென்று ராய் உரை நிகழ்த்துகிறான். ஆனால் ராயின் இந்த வளர்ச்சியை அப்போது கட்சியில் உயர்மட்டத்திலிருக்கும் சகதேவனால் சகிக்க முடியவில்லை. சகதேவன் நடவடிக்கைக்கு எதிராகவும் கட்சிக் கூட்டங்களில் ராய் பேசுகிறான். இதனால் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள்போல வேடமிட்ட சகதேவன் ஆதரவாளர்கள் ராயின் இடது கையைத் (Left Hand) தாக்கிச் செயலிழக்கச் செய்கிறார்கள். இது படம் சித்திரிக்கும் முக்கியமான குறியீடு. உண்மையான கம்யூனிஸ்டான ராயின் இடது கை ஊனமாக்கப்படுகிறது.

சகதேவன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கான ஆதாரம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டுத் தனியாகப் பத்திரிகை நடத்திவரும் சுரேஷ் குமார், அலியார் கைகளில் கிடைக்கிறது. அதைத் தங்கள் பத்திரிகையில் பிரசுரிக்க நினைக்கிறார்கள். இதைக் குறித்துத் தங்கள் ஆலோசகரான செகுவரா ராயிடம் கூறுவதற்கு அலியார் வரும் காட்சியில்தான் படம் தொடங்குகிறது. இந்தக் காட்சியின் ஊடே சகதேவனுக்கு ஆதரவாகக் கட்சியின் இளைஞர் பிரிவினர் நடத்தும் போராட்டமும் அதற்கு எதிரான போலீஸின் தடியடியும் வந்துபோகிறது. இந்த ஆதாரங்களை வெளியிடுவதைவிட இதைக் குறித்துக் கட்சிக்குத் தெரியப்படுத்தினால் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்பது ராயின் எண்ணம். ஆனால் சுரேஷுக்கும் அலியாருக்கும் இதில் பெரிய உடன்பாடில்லை. என்றாலும் ராயின் பேச்சுக்கு இணங்குகிறார்கள்.

ராய் கட்சியின் மற்றொரு தலைவரான எஸ்.ஆரிடம் இந்த ஆதாரங்களை அளித்துக் கட்சிக்குத் தெரியப்படுத்தலாம் என நினைக்கிறார்கள். எஸ்.ஆரிடம். இது குறித்துப் பத்திரிகையில் மூன்றாம் பக்கத்தில் சிறிய அளிவில் செய்தி வெளியிடச் சொல்கிறார். ஆனால் சுரேஷுக்கு அதில் உடன்பாடில்லை. அலியாரையும் சம்மதிக்க வைக்கிறான். காலையில் முதல் பக்கத்தில் சகதேவனின் படத்துடன் செய்தி வெளிவருகிறது. இது தொலைக்காட்சிகளின் அன்றைய தலைப்புச் செய்தியாகிறது.

சகோதரப் படுகொலைகள்

குடும்பஸ்தனான சுரேஷ், தன் மனைவி குழந்தைகளுடன் தலைமறைவாகிறான். அவனது வீடு தீயிட்டுக் கொளுத்தப்படுகிறது. ராய் இந்தச் சகோதரப் படுகொலைகளைத் தடுக்க முயல்கிறான். எஸ்.ஆரைப் பார்க்கிறான். ஆனால் அவர் இந்த நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக்கொள்ள நினைக்கிறார். இறுதியில் ராயின் முயற்சி பலனளிக்கவில்லை. இருவருமே கொல்லப்படுகிறார்கள். இதற்கடுத்து தொடர்ந்து நடக்கும் கொலைகளும் மரணமும் கட்சியைக் கேள்விக்குட்படுத்துகின்றன.

அருண்குமார் அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் மிகச் செறிவாகச் செதுக்கியிருக்கிறார். முரளிகோபி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இதன் முக்கியப் பாத்திரமான செ குவரா ராயாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது வசனங்களும் படத்திற்கு வலுச் சேர்க்கின்றன. “இடது கால் கொண்டு கோல் அடிக்க வலது காலில் நின்றால்தான் முடியும்” “பார்ட்டி மட்டுமல்ல கம்யூனிசம்” “இடதுசாரிக் கட்சி இரண்டானால் ஒன்று இடதாகவும் இன்னொன்று வலதாகவும்தானே மாற வேண்டும்” போன்ற சில உதாரணங்களைச் சொல்லலாம்.

சமகால அரசியல் செயல்பாடுகளைத் திரைக்கதையாக்குவது என்பது சவாலான காரியம். ஆனால் அதைத் துணிச்சலாகச் செய்திருக்கிறார் முரளிகோபி. நிகழ்காலச் சம்பவங்களைச் சின்ன மாற்றங்களுடன் திரைக்கதையில் கோத்திருக்கும் நேர்த்தி பாராட்டத்தக்கது. வெவ்வேறு சரடுகளாகப் பிரிந்து செல்லும் காட்சிகள் கதையின் மையச் சரடுக்கு வலுச்சேர்க்கின்றன. சமூகக் கோபங்களையும் உறவுச் சிக்கல்களையும் ஆர்ப்பாட்டமில்லாமல் இந்தப் படம் பதிவுசெய்கிறது. ஆனால் அவை ஏற்படுத்தும் தாக்கம் வலுவாக வெளிப்பட்டுள்ளது. மேலும் படுகொலைகளும் வன்முறைச் சம்பவங்களும் மனித மனத்தின் விநோதங்களின் வெளிப்பாடு என இப்படம் உளவியல் ரீதியாகவும் அலச முயல்கிறது.

ஆனால் பல பத்தாண்டுகளாக கம்யூனிஸம் செல்வாக்குச் செலுத்திவரும் கேளரச் சமூகத்தைச் சமரசங்களுக்கு அப்பாற்பட்டு வலுவாகச் சித்திரிப்பதுதான் இதன் முக்கியமான அம்சம். அதிகாரப் போட்டியால் பூர்ஷ்வாக்களுக்கு (முதலாளித்துவத்திற்கு) எதிராகத் தொடங்கப்பட்ட ஒரு கட்சி, பூர்ஷ்வாக்களை, - இந்தப் படத்தின் கதாபாத்திரமொன்று சொல்வதைப் போல - பூர்ஷ்வாக்களின் அப்பன்களை உருவாக்கிவருகிறது என்பதற்கு இந்தப் படம் கதாபாத்திரங்களைச் சாட்சியாக்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x