Last Updated : 19 Mar, 2018 10:52 AM

 

Published : 19 Mar 2018 10:52 AM
Last Updated : 19 Mar 2018 10:52 AM

இணைவோம்… பிரிவோம் !

இது ஒன்றும் சினிமா பட தலைப்பு அல்ல. இந்தியாவில் தொழில் தொடங்க கூட்டு சேரும் வெளிநாட்டு நிறுவனங்கள் பாதியிலேயே வெளியேறும் அவல நிலையை பறைசாற்றுவதற்காக வைக்கப்பட்டது. ஆம் சமீபத்திய உதாரணம் ஐஷர் – போலாரிஸ் கூட்டணி முறிவு.

இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள் என ஒருபுறம் மத்திய அரசு பல நாடுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கிறது. மற்றொருபுறம் வெளிநாட்டு நிறுவனங்கள் பாதியிலேயே வெளியேறுகின்றன.

குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் இது அதிக அளவில் நிகழ்ந்துள்ளது கண்கூடு. வெளிநாட்டு கூட்டணியில் தொடங்கப்படும் தொழில்களில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரையிலான தொழில்கள் பாதியிலேயே முறிந்து போகின்றன. இந்தியாவில் இந்த எண்ணிக்கை மிக அதிகம் என்றே புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரிட்டிஷ் நிறுவனங்கள் சில தங்கள் தொழிலை அப்படியே விட்டு விட்டு வெளியேறின. சில நிறுவனங்களோ இந்திய நிறுவனங்களோடு கூட்டு சேர்ந்து நடத்தின.

ஆனால் 1991-ம் ஆண்டில் தாராளமயமாக்கல் பின்பற்றப்பட்ட பிறகுதான் இந்தியாவில் கூட்டு சேர்ந்துதொழில் தொடங்கும் போக்கு அதிகரித்தது. அதற்கு முன்பு இந்திரா காந்தி காலத்தில் ஜப்பானின் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் தொழில் தொடங்கியது. ஆட்டோமொபைல் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு இருந்ததைத் தொடர்ந்து பல நிறுவனங்கள் இந்திய கூட்டாளிகளோடு கை கோர்த்தன.

இரு சக்கர வாகன உற்பத்தியில் ஹீரோ மற்றும் கைனடிக் நிறுவனங்களுடன் ஹோண்டாவும், டிவிஎஸ் நிறுவனத்துடன் சுஸுகியும், பஜாஜ் நிறுவனத்துடன் காவஸகியும், எஸ்கார்ட்ஸ் குழுமத்துடன் யமஹாவும் கூட்டு சேர்ந்து வாகனங்களைத் தயாரிக்கத் தொடங்கின.

இந்தக் கூட்டணிகள் அனைத்துமே நீண்ட காலம் தொடரவில்லை. அடுத்தடுத்து கூட்டணிகள் முறிந்தன. இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்துமே தனியாக ஆலை அமைத்து தங்களது தயாரிப்புகளை இந்திய சந்தையில் விற்கின்றன.

இந்திய நிறுவனங்களும் தொழில்நுட்ப கூட்டு இல்லாமல் சுயமாக வாகனங்களைத் தயாரித்து ஒரு காலத்தில் தங்களது கூட்டாளியாக இருந்த நிறுவனங்களுடன் போட்டி போடுகின்றன.

ஆட்டோமொபைல் துறையில் கூட்டணி முறிந்தது பரவலாக வெளியே தெரிந்தாலும் பிற துறைகளிலும் இதுபோல வெளிநாட்டு நிறுவனங்கள் சத்தமின்றி வெளியேறியுள்ளன.

காப்பீட்டுத் துறையில் சென்னையைச் சேர்ந்த சன்மார் குழுமம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏஎம்பி நிறுவனத்துடன் 2002-ம் ஆண்டில் கூட்டு சேர்ந்தது. ஆனால் இக்கூட்டணி 2013-ல் முறிந்துபோனது. வங்கியல்லாத நிதிச் சேவையில் ஈடுபட முருகப்பா குழுமத்துடன் சிங்கப்பூரின் டிபிஎஸ் நிறுவனம் இணைந்தது. ஆனால் இந்த கூட்டணியும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

தொலைத் தொடர்புத் துறையில் வெர்ஜின் மொபைல் மற்றும் டோகோமோவுடன் டாடா நிறுவனம் மேற்கொண்ட கூட்டணி, வோடபோன் – எஸ்ஸார் கூட்டணியும் முறிந்துபோனது.

இதேபோல வால்மார்ட் நிறுவனம், பார்தி ஏர்டெல் கூட்டணியும் நீடிக்கவில்லை. மொத்த பொருள் விற்பனையில் 5 ஆண்டுகளுக்கு மேல் இவ்விரு நிறுவன கூட்டணி தொடரவில்லை.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான மெக்டொனால்டு நிறுவனம் இந்தியாவில் 170 சங்கிலித் தொடர் விற்பனையகங்களை செயல்படுத்தி வந்தது. கன்னாட் பிளாஸா ரெஸ்டாரென்ட் பிரைவேட் லிமிடெட் (சிபிஆர்எல்) எனும் நிறுவனத்துடன் இணைந்து 1990-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டுவந்தது. இவ்விரு நிறுவனங்களிடையிலான கூட்டணி 2017-ம் ஆண்டில் முறிந்து போனது.

தேவூ - பிராக்டர் அண்ட் கேம்பிள், டாடா - ஐபிஎம், மஹிந்திரா – நிஸான், எல்எம்எல் – பியாஜியோ, ஸ்டார் டி.வி – ஜீ டெலிஃபிலிம்ஸ், எஸ்ஆர்எப் – டூபாண்ட் கூட்டணி, கோத்ரெஜ் – ஜிஇ மற்றும் கோத்ரெஜ் - ஹெர்ஷே கூட்டணி ஆகியனவும் முறிந்துபோன உறவுகள் பட்டியலில் இடம்பெறுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 50 கூட்டணிகள் முறிந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை 10 ஆண்டுகளுக்குள்ளாக அல்பாயுசில் முடிந்த கூட்டணியாகும்.

1990 களின் பிற்பாதியில் பிரபல தொழில் குழுமமான பி கே மோடி 12 நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து பல்வேறு தொழில்களைத் தொடங்கினார். ஜெராக்ஸ், ஜிபிசி, கான்டினென்டல், ஒலிவெட்டி ஆகிய முன்னணி நிறுவனங்களும் இக்குழுமத்துடன் கூட்டு சேர்ந்து தொழிலை தொடங்கின. ஆனால் இன்று பிகே மோடி குழுமத்துடன் ஒரு அந்நிய நிறுவனமும் கூட்டாளியாக இல்லை.

இதேபோல டாடா நிறுவனத்துடன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டாளியாக இருந்த ஹனிவெல் நிறுவனம் இப்போது பிரிந்து தனியாக தொழிலை நடத்துகிறது. பொதுவாக கூட்டு சேர்ந்து தொழிலைத் தொடங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் 7 ஆண்டுகளுக்கு மேல் தொடர்வதில்லை. விரும்பினால் இந்திய நிறுவனத்தின் பங்குகளை அதிக விலை கொடுத்துவாங்கி சொந்தமாக நடத்துகின்றன. இல்லையெனில் தங்களது பங்குகளை எவ்வளவு குறைந்த விலைக்குவேண்டுமானாலும் விற்றுவிட்டு வெளியேறிவிடுகின்றன.

இந்தியாவில் அதிகபட்சமாக நீடித்த கூட்டணி ஹீரோ – ஹோண்டாதான். இவ்விரு நிறுவனங்களிடையிலான கூட்டணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு முறிந்தது.

ஆர்வம் ஏன்?

இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்பது பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்களின் லட்சியமாகவே உள்ளது. அதிக மக்கள் தொகை, சிறந்த சந்தை வாய்ப்பு, தொழில் தொடங்க அரசு அளிக்கும் வரிச் சலுகை, ஆலை அமைக்க இடம், தடையற்ற மின்சாரம், குடிநீர் வசதி. இவை அனைத்துக்கும் மேலாக குறைந்த ஊதியத்தில் கிடைக்கும் மனித வளம். இதனாலேயே இந்தியாவில் ஆலையைத் தொடங்கி இங்கிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் உள்ளன.

முறிந்து போவது ஏன்?

கலாசார ரீதியான வேற்றுமை பிரதான இடம் பிடிக்கிறது. வெவ்வேறு விதமான தொழில் கலாசாரம், மாறுபட்ட நிர்வாக செயல்பாடு, பணி பரவல், மாற்று முறை, பணியாளர்களிடையே நிலவும் மாறுபட்ட குணங்கள் உள்ளிட்டவை பிரிவுக்குக் காரணங்களாகின்றன.

இந்திய நிறுவனங்கள் பெரும்பாலும் தனி நபர்களால் மேம்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. இதனால் தங்களுக்கு கூட்டு நிறுவனத்தில் அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து ஒரு தலைமைச் செயல் அதிகாரியை நியமனம் செய்கிறார்கள். ஆனால் அந்த தலைமைச் செயல் அதிகாரி வெளிநாட்டு பங்குதாரருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்திய பங்குதாரருக்கு கொடுப்பதில்லை. இதனால் இந்திய கூட்டாளிகளை வெளிநாட்டு நிறுவனங்கள் சற்று குறைந்த நிலையில்தான் பார்க்கின்றன. இந்த தாழ்வு மனப்பான்மை இந்திய நிறுவனர்களிடம் அதிகரித்து ஒரு கட்டத்தில் வெடித்துவிடுகிறது.

தவறான உத்திகள் வகுப்பதும் முறிவுக்குக் காரணமாகிவிடுகிறது. கூட்டாளிகளில் ஒருவர் சந்தை மதிப்பில் கவனம் செலுத்தும்போது அது பிரிவுக்குக் காரணமாகிறது.

கூட்டாளிகள் இருவரும் வெவ்வேறு இலக்கில், எதிர்பார்ப்பில் இருந்தாலும் கூட்டணி முறியும். ஒருவர் உடனடி லாபத்தை எதிர்பார்ப்பவராகவும் மற்றொருவர் லாபத்தை தொடர்ந்து முதலீடு செய்ய விரும்புபவராக இருந்தாலும் கூட்டணி முறியக் காரணமாகிறது.

நிறுவனத்தை செயல்படுத்துவதில் அதாவது இரு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உருவாக்கிய கூட்டு நிறுவனத்தை செயல்படுத்துவதற்கு தனி திறன் அவசியம்.

இது தவிர வேறு பிற காரணங்களும் உள்ளன. வால்மார்ட் – பார்தி இடையிலான கூட்டு முறிந்துபோனதற்கு அரசின் அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை பிரதானமானதாகும்.

மெக்டொனால்டு – கன்னாட் பிளாஸா ஒப்பந்தம் இரு நிறுவன தலைவர்களிடையே மனக்கசப்பு உருவானதால் பிரிவு தவிர்க்க முடியாமல் போனது.

டி பெலா காபி – எஸ் சபர்வால் இடையிலான ஒப்பந்தம் லைசென்ஸ் பிரச்சினையால் முறிந்தது.

கில்லெட் – சரோஜ் பொடார் கூட்டணி முறிவுக்கு செபி குறிக்கீடு காரணமானது.

ஃபேபர் கேஸில் – அனுப் ராணா கூட்டணி முறிந்து போனதற்கு நிதி முறைகேடு காரணமானது.

இவற்றுக்கெல்லாம் மேலாக அரசு நிறுவனங்களோடு இணைந்து செயல்படுவதில் ஊழல் நடைமுறைகள் வெளிநாட்டு நிறுவனங்களை ஓட்டமெடுக்கச் செய்துள்ளன. வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்கும்போது லஞ்சம் அளிக்கும் வழக்கம் தங்கள் நாடுகளில் இல்லை என்று உறுதிபட தெரிவித்துவிட்டுத்தான் ஒப்பந்தம் போடுகின்றன. ஆனால் உள்ளூரில் தொழில் நடத்த அடிக்கடி தரப்படும் லஞ்சம் அவர்களுக்கு பெரும் உறுத்தலாகவே இருக்கிறது.

நிறுவனங்கள் உருவாவதால் வேலை வாய்ப்பு, புதிய தொழில்நுட்பம் கிடைப்பது நல்ல விஷயம்தான். அதேசமயம் கூட்டணி முறியாமல் தடுப்பதற்கான வழி வகைகளையும் காண்பதுதான் புத்திசாலித்தனம்.

குறுகிய நோக்கத்திற்காக இணையும் எந்த கூட்டணியும் நீண்ட காலம் நீடிக்காது. இது அரசியலில் மட்டுமல்ல, தொழில்துறையிலும்தான்.

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x