Last Updated : 17 Mar, 2018 10:35 AM

 

Published : 17 Mar 2018 10:35 AM
Last Updated : 17 Mar 2018 10:35 AM

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 74: மண்ணை மலடாக்காலாமா?

 

யற்கை வழி வேளாண்மையான தாளாண்மைப் பண்ணையத்தில் மண் என்பது உயிர்க் கண்டம் என்று வரையறுக்கப்படுகிறது. மண்ணில் வாழும் எண்ணற்ற உயிர்கள், மண்ணுக்கு உயிரைக் கொடுக்கின்றன. உயிரற்ற மண், விளைச்சலுக்கு உதவாது. ஆனால், பெரும்பாலான உழவர்கள் மண்ணில் ரசாயனங்களைக் கொட்டி உயிருள்ள மண்ணை ஒவ்வொரு நாளும் சாகடிக்கிறோம். அப்படியானால் விளைச்சலை இழந்துகொண்டிருக்கிறோம் என்று பொருள்!

மண்ணில் ரசாயன உப்புக்களைக் கொட்டி, நம் முன்னோர்கள் இட்டு வைத்திருந்த கரிமச் சத்துகளை நாம் வெளியேற்றிவிட்டோம். அதன் விளைவாக மண் கெட்டி தட்டிப்போய் உழுவதற்கே சில ஆயிரம் கிலோ எடை கொண்ட உழவு இயந்திரங்களை வைத்து மண்ணைக் கிழிக்க வேண்டிய நிலை வந்துள்ளது. மாட்டைக்கொண்டு உழுவதுகூடக் கடினமாகி வருகிறது.

அதி‘கரிக்கும்’ உப்பு

1950-களில் 14 மில்லியன் டன் என்ற அளவில் இருந்த உப்பு உரங்களின் பயன்பாடு, 2010-களில் 180 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. அப்படியானால் எவ்வளவு பணம் உழவர்களைவிட்டு வெளியேற்றப்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் விளைவாக, பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள், அவற்றுக்கான பணம் என்று கணக்கிட்டால் தலைசுற்றும்.

ஒரு கிலோ யூரியா போன்ற உப்பு உரங்களை மண்ணில் இட்டால், ஏறத்தாழ 30 கிலோ மக்கு நமது மண்ணை விட்டு வெளியேறும் என்பது ஒரு கணக்கு. அதாவது மண்ணில் உள்ள உயிர்மக் கரிமம் (ஆர்கானிக் கார்பன்), அவுரிமக் கரிமம் ஆக அதாவது கனிமக் கரிமமாக (இன்ஆர்கானிக் கார்பன்) மாறுகிறது. எனவே, மண்ணை உயிரற்றதாக மாற்றும் வேலையை விட்டுவிட்டு, மண்ணில் உயிர்களைச் சேர்க்கும் பணியைச் செய்வதன் மூலம் நீடித்த விளைச்சலை உறுதிசெய்ய முடியும்.

வளமான நிலம் எது?

மண்ணில் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற உயிர்கள் மண்ணை உயிருடன் வைத்திருக்கின்றன. மிகவும் காய்ந்துபோன மண்ணை எடுத்து எடை போட்டு, பின்னர் அதை ஒரு சட்டியில் இட்டு தீயில் நன்கு சூடேற்றி அதை மீண்டும் எடை போட்டுப் பார்த்தீர்களானால், அதன் எடை நிச்சயம் குறைந்திருக்கும். அதற்குக் காரணம் ஈரப்பதம் மட்டுமல்ல; அதில் காணப்பட்ட பல ஆயிரம் உயிர்களும் காணாமல் போனதாலேயே எடை குறைந்து காணப்படுகிறது.

ஒரு வளமான நிலத்தை நாம் எப்படி எளிதாகக் கண்டறிவது? அதற்குச் சில எளிமையான வழிமுறைகள் உள்ளன. நீர் பாயாத, மழை பொழியாத நேரத்தில் ஒரு சிறு குச்சியை எடுத்து தெரிவுசெய்துள்ள நிலத்தில் சற்றே அழுத்திப் பாருங்கள். மண்ணில் குச்சி எளிதாக இறங்குகிறதா கடினமாக இறங்குகிறதா என்று பாருங்கள்.

நிலத்தில் எளிதாக இறங்குமேயானால், அந்த நிலம் விளைச்சலுக்கு ஏற்ற நிலம் என்று பொருளாகும். அத்துடன் ஒரு கோப்பை நீரை எடுத்து நிலத்தின் மீது ஊற்றுவீர்களேயானால் ஓர் உறிஞ்சு தாளில் நீர் இறங்குவதுபோல நீர் உறிஞ்சிக் கொள்ளப்பட்டால் நிலம் நன்றாக இருக்கிறது என்று அறியலாம்.

மண்ணுக்குள் வாழும் உலகம்

இதற்கு என்ன காரணம் என்று கவனித்தால், மண்ணில் உள்ள உயிர்களே இவ்வளவு செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருக்கின்றன என்பது புரியும். எனவே, மண்ணை மிகவும் சாதாரண ஒன்றாகப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ‘மண்ணு மாதிரி இருக்கிறாயே!’ என்று பேசுவது அறிவின்மையையே காட்டுகிறது.

மண்ணின் எண்ணற்ற உயிர்கள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. வெட்டுவதும், சிதைப்பதும், தின்னுவதும், கழிப்பதும்... ஒரு பெரும் காட்டுக்குள் எப்படி உலகம் இயங்கிக்கொண்டே இருக்கிறதோ அப்படி மண்ணுக்குள் விரியும் உலகத்தை நீங்கள் கற்பனை செய்துகொண்டுகூட காண இயலாது. அந்த உயிர்களின் பண்புகளையும் செயல்களையும் சுருக்கமாகப் பார்ப்போம்.

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x