Published : 19 Mar 2018 10:51 AM
Last Updated : 19 Mar 2018 10:51 AM

பேட்டரி கார் உற்பத்தியை அதிகரிக்கிறது ஃபோக்ஸ்வேகன்

வா

கன புகை வழக்கில் சிக்கி சர்வதேச அளவில் மிகுந்த நெருக்கடிக்கு ஆளான ஃபோக்ஸ்வேகன் குழுமம் பேட்டரி கார் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் தற்போது இந்நிறுவனத்துக்கு உள்ள ஆலைகளில் மூன்றில் மட்டுமே பேட்டரி வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. 16 ஆலைகளில் பேட்டரி வாகனங்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் எட்டமுடிவு செய்துள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மத்தியாஸ் முல்லர் தெரிவித்துள்ளார்.

தற்போது மூன்று ஆலைகளில் தயாராகும் பேட்டரி வாகனங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 6 ஆலைகளில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கார் உற்பத்திக்கு ஏற்ப பேட்டரி தட்டுப்பாடின்றி கிடைக்க துணை நிறுவனங்களை இந்நிறுவனம் முடுக்கி விட்டுள்ளது. பேட்டரி தயாரிப்பு நிறுவனங்கள் பலவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நடவடிக்கையிலும் ஃபோக்ஸ்வேகன் தீவிரமாக உள்ளது.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவில் பெரிய நிறுவனங்களுடன் பேட்டரி சப்ளைக்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. மொத்தம் 2,000 கோடி டாலருக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக வட அமெரிக்கா சந்தையில் இதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது ஃபோக்ஸ்வேகன்.

ஆண்டுக்கு 30 லட்சம் பேட்டரி வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனை 2025-ல் எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக முல்லர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு 3 புதிய மாடல் பேட்டரி வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே இந்நிறுவனம் 8 பேட்டரி மற்றும் ஹைபிரிட் மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2019-ம் ஆண்டு முதல் மாதத்துக்கு ஒரு புதிய ரக பேட்டரி காரை அறிமுகப்படுத்தவும் ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் உலகிலேயே அதிக பேட்டரி வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக உயரவும் திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x