Last Updated : 20 Mar, 2018 10:58 AM

 

Published : 20 Mar 2018 10:58 AM
Last Updated : 20 Mar 2018 10:58 AM

ஆங்கிலம் அறிவோமே 205: தைரியசாலினா கீழே தள்ளு!

கேட்டாரே ஒரு கேள்வி

இன்று திங்கட்கிழமை. ‘Next Tuesday’ என்று நான் குறிப்பிட்டால் அது எந்த நாளைக் குறிக்கிறது, நாளையா அல்லது எட்டு நாட்கள் கழித்து வரும் செவ்வாய்க்கிழமையையா?

************

“Cheek by jowl என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். Jowl என்றால் என்ன?”

Cheek என்றால் கன்னம். Jowl என்றால் தாடை. இந்த இரண்டு உடல் பாகங்களும் அருகருகே இருக்கின்றன. அதுபோல ‘மிக நெருக்கமாக’ என்ற பொருளில் இது பயன்படுத்தப்படுகிறது. Narmada and Lakshmi are friends. Even if they fight in the morning they are cheek and jowl by the evening.

இதேபோல முகத்தின் சில பாகங்களை அடிப்படையாகக்கொண்டு உருவான வேறு சில விஷயங்களையும் பார்த்துவிடுவோமே.

Keep your ear to the ground என்றால் ஒன்றை நன்கு தெரிந்துகொள்ளுதல். அதாவது to be well informed.

Ten years back Ranjani kept her ear to the ground and bought a small statue at a very low price. Today it is a priceless masterpiece.

Laughing out of other side of your mouth என்றால் மிகவும் வருத்தப்படுதல் அல்லது சோகமயமாதல் என்று பொருள். Murthy cheated in the race and won. When everyone knows about this, he will be laughing out of the other side of his mouth. மகிழ்ச்சியின் மறுபக்கம் சோகம் என்ற அர்த்தத்தில் உருவானது இது.

வெற்றி பெறக் கடுமையாக உழைப்பதை ‘Keep your nose to the grindstone’ என்பார்கள்.

He made this beautiful painting by putting her nose to the grindstone, for over a year. மாவாட்டும் இயந்திரத்தில் மாவாட்டும்போது தொடர்ந்து அதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அந்தக் கோணத்தில் உருவான சொலவடை இது.

Chip on your shoulder என்றால் தன்னைப் பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக்கொள்ளுதல். Nobody wants to be a friend with Venkat as he walks around the school with a chip on his shoulder.

அந்தக் காலத்தில் சிறுவர்கள் பங்கு கொண்ட ஒரு விளையாட்டு இது. ஒரு சிறுவன் தன் தோளில் ஒரு சிறு மரப்பட்டையை வைத்திருப்பான். ‘தைரியம் இருப்பவர்கள் இதைக் கீழே தள்ளுங்கள்’’ என்று சவால் விடுவான். அப்படி வருபவர்களிடம் சண்டையிடுவான். இதிலிருந்து வந்ததுதான் ‘Chip on your shoulder’’.

‘Cool your heels’ என்றால் உங்கள் குதிகால்களில் ஐஸ் தண்ணியைக் கொட்ட வேண்டும் என்பதல்ல. வெகு நேரம் எதற்கோ காக்க வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்றால் இப்படிச் சொல்வார்கள். He is cooling his heels in this long queue to buy milk.

ஓடும்போது உங்கள் பாதம் வெப்பத்துடன்தான் இருக்கும். நிற்கும்போது குதிகால்கள் குளிர்ச்சியடையும். இதைக் கொண்டு உருவான வாக்கியம்தான் இது. இல்லையே. தொடர்ந்து நிற்கும்போதும் என் குதிகால் வெப்பத்துடன்தான் இருக்கிறதே என்று கேட்டு விடாதீர்கள். இவையெல்லாம் ஐரோப்பியச் சூழலில் உருவானவை.

************

‘கேட்டாரே ஒரு கேள்வி’ வாசகருக்கான பதில் இது. இன்று திங்கட்கிழமை என்றால் இதே வாரம் வரவிருக்கும் செவ்வாய்க்கிழமையை ‘this Tuesday’ என்றுதான் சொல்ல வேண்டும். ஆகையால், ‘next Tuesday’ என்பது அடுத்த வார செவ்வாய்க்கிழமையைக் குறிப்பதாகும்.

english 2jpg100 

“ஒரு புத்தகத்தில், ‘Everyone should be careful while using a singular pronoun in their writing’ என்ற வாக்கியத்தைத் தொடர்ந்து, சிரித்தபடி கண்ணடிப்பது போன்ற ஓர் emoticon-ஐயும் அச்சிட்டிருந்தார்கள். இதற்குப் பொருள் என்ன?”

அந்த வாக்கியத்திலேயே அவர்கள் கவனக்குறைவாக இருந்திருக்கிறார்கள் என்று பொருள்!

Everyone, everybody ஆகியவை singulars. ஒவ்வொருவரும் என்பதும், எல்லோரும் என்பதும் ஒரே அர்த்தம் கொண்டவைபோலத் தோற்றமளித்தலும் ஒவ்வொருவரும் என்பது singular, எல்லோரும் என்பது plural. ஒரு singular-ஐப் பயன்படுத்தும்போது அதற்குரிய verb-தான் இடம் பெற வேண்டும். எனவே, Everyone should be careful while using a singular pronoun in his or her writing என்பதுதான் சரி.

************

Figure out என்றால் என்ன என்று வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். ஒன்றை அல்லது ஒருவரைப் புரிந்துகொள்வதைத்தான் figure out என்பார்கள். அதாவது ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கான புரிதல். Let us analyse the cause of the problem. Then we may be able to figure out how to prevent it happening again.

தொடக்கம் இப்படித்தான்

“உடோபியா (Utopia) என்பதைக் கற்பனை உலகம் என்கிறார்கள். இந்த வார்த்தை எப்படி உண்டானது?’’ என்று கேட்கிறார் வாசகர் ஒருவர். அறிந்து கொள்வோம்.

தாமஸ் மோர் என்ற எழுத்தாளரின் படைப்பில்தான் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. அவரது அந்த நூலின் பெயரே இதுதான் (Utopia). இது ஓர் அரசியல் அங்கதக் கதை. கற்பனைத் தீவு ஒன்றில் நிகழும் சம்பவங்கள்தாம் இந்தப் புதினத்தின் கரு. உடோபியா என்பது கற்பனை உலகம் மட்டுமல்ல; எல்லாமே சிறப்பாக இருக்கும் ஒருவித சொர்க்கபுரி அது. அங்கே குழந்தைகள்கூட விலை உயர்ந்த கற்களைத்தான் வீசி விளையாடுவார்கள் (அதாவது பாலும் தேனும் பெருகி ஓடிய நாடு!).

கிரேக்க மொழியில் OU என்றால் இல்லாத என்று பொருள். டோபோஸ் என்றால் இடம் என்று பொருள். இரண்டையும் சேர்த்தால் ‘இல்லாத இடம்’. இந்த உலகில் இல்லாத கற்பனை இடம்தான் இந்தப் புதினத்தின் கருப்பொருள் என்பதால் தலைப்பு பொருந்துகிறது.

 

கேள்விக்கு இதோ பதில்

SIN என்று தொடங்கும் சில வார்த்தைகள் குறித்த ஒரு போட்டியை இரு வாரங்களுக்கு முன் அறிவித்திருந்தேன். விடைகள் இதோ.

1. பன்மையல்ல - SINGULAR

2. நேர்மையாக - SINCERE

3. தசையை எலும்புடன் இணைக்கும் நார்த்திசு - SINEW

4. தீமையான - SINISTER

5. யாருடைய உதவியுமின்றி- SINGLE-HANDEDLY

6. அப்போதிலிருந்து இப்போதுவரை - SINCE

7. அரேபிய இரவுகள் நூலின் கதாநாயகன் - SINDBAD

8. வேலை, பொறுப்பு எதுவுமல்லாத அலுவல் - SINECURE

9. அண்டை நாடு ஒன்றிலுள்ள மெஜாரிட்டி மக்கள் - SINHALESE

10. பொசுக்கு - SINGE

ஏராளமானோர் விடைகளை அனுப்பிவைத்தனர். அவர்களில் பலரும் தவறு செய்தது கடைசிக் குறிப்புக்கான விடையில்தான். ஐந்தாம் கேள்விக்கான விடையாக SINGULARLY என்றும் ஒன்பதாம் கேள்விக்கு விடைகளாக SINGAPOREAN என்றும் கணிசமானவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள்.

40-க்கும் மேற்பட்டவர்கள் சரியான விடைகளை அனுப்பியிருந்தார்கள். அவர்களில் முதல் பத்து பேரின் பட்டியல்.

1. எஸ்.கிருஷ்ணன், வேளச்சேரி, சென்னை

2. வி. பரத் பாபு, மதுரை

3. எம்.அனிதா, சென்னை

4. வி.பாஸ்கரன், A.வள்ளாளப்பட்டி

5. ஜெயஸ்ரீ பட்டாபிராமன், சென்னை-110

6. P.அஜய் மார்ஷல், தூத்துக்குடி

7. B.எழில் ஓவியா, அலங்காநல்லூர், மதுரை

8. J.மிருதுளா ஜெயசந்திரன், அடையாறு, சென்னை

9. அப்துல் ரஹ்மான், இளையாங்குடி

10. எஸ்.ஷெண்பகம், எம்.கே.கோட்டை, திருச்சி

“இந்தப் போட்டி தேங்காய் ஸ்ரீனிவாசன் ஒரு படத்தில் SIN என்று தொடங்கும் மாத்திரைகளின் பெயர்களைப் பட்டியலிட்டுக் (க்ரோசின், மெடாசின் என்பதுபோல) குறிப்பிட்டதை நினைவுபடுத்துகிறது. நாம் செய்த SINகளின் காரணமாகத்தான் நோய்கள் வருகின்றன என்று அதில் கூறுவார்’’ என்று கூறியிருக்கிறார் சி.சுப்ரமணியன், சென்னை -100.

“அரேபிய இரவுகள் (ஆயிரத்தில் ஓர் இரவுகள்) நூலில் சொல்லப்பட்ட பல கதைகளில் ஒன்றின் கதாநாயகன்தான் சிந்துபாத். இக்கதைகள் சொல்லப்பட்டதற்கு மூலகாரணமான கதையின் நாயகன் பெயர் ஷாரியர்” என்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார் எம்.எஸ். அஹ்மத் இஸ்மாயில் நயினார், ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி மாவட்டம்.

நன்றி வாசகர்களே!

சிப்ஸ்

# Intelligentsia என்பது எதைக் குறிக்கிறது?

ஒரு சமூகத்தில் அல்லது நாட்டிலுள்ள படித்த, புத்திசாலிகளை.

# Ex gratia payment என்றால்?

சட்டப்படி கொடுக்கத் தேவைஇல்லை என்றாலும் ஒழுக்க நெறியின்படி கொடுப்பது நியாயம் எனக் கருதி அளிக்கப்படுவது. Ex gratia என்றாலே போதும். Payment என்ற வார்த்தை அதிகப்படியானது.

# ஜீவனாம்சம் என்பதன் ஆங்கில வார்த்தை எது?

Alimony.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x