Published : 20 Mar 2018 11:04 AM
Last Updated : 20 Mar 2018 11:04 AM

வேலை வேண்டுமா? - நபார்டு வங்கிப் பணி: மாதம் ரூ.61 ஆயிரம் சம்பளம்

மத்திய அரசின் நபார்டு வங்கிக்கு (தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி) 92 உதவி மேலாளர்கள் (கிரேடு-ஏ) நேரடி நியமன முறையில் போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்யப்பட இருக்கிறார்கள்.

பொதுப் பணி - பொருளாதாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கணக்குத் தணிக்கை, வனவியல், சமூகப் பணி, சுற்றுச்சூழல் பொறியியல், உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பம் முதலிய சிறப்புப் பிரிவுகளிலும் காலியிடங்கள் உள்ளன. பொதுப் பணிப் பிரிவில் மட்டும் 46 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

தேவையான தகுதி

பொதுப் பணிப் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 45 சதவீத மதிப்பெண்போதும். மற்ற சிறப்பு பிரிவுகளைப் பொறுத்தவரை, அந்தந்தப் பாடப் பிரிவில் இதே மதிப்பெண் தகுதியுடன் பட்டம் அவசியம்.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 30 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு முறை

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் உதவி மேலாளர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு என இரண்டு நிலையில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இரண்டுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில் ரீசனிங், ஆங்கிலம், கணினி அறிவு, பொது அறிவு, கணிதத் திறன், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள், விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகிய பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். 200 மதிப்பெண். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இது அப்ஜெக்டிவ் முறை, விரிவாக விடையளிக்கும் முறை (Descriptive Type) இரண்டும் கலந்ததாக அமைந்திருக்கும்.

மெயின் தேர்வில் இரண்டு தாள்கள். முதல் தாளில் பொது ஆங்கிலம் தொடர்பான கேள்விகளுக்கு (கட்டுரை எழுதுதல், அறிக்கை எழுதுதல் போன்றவை) கணினி விசைப்பலகையைப் பயன்படுத்தி விடையளிக்க வேண்டும். தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரம்.

இறுதிச் சுற்று

இரண்டாவது தாள் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்திருக்கும். பொதுப் பணிக்குப் பொருளாதாரம், சமூகப் பிரச்சினைகள், விவசாயம், ஊரக வளர்ச்சி ஆகிய பகுதிகளில் இருந்தும், மற்ற சிறப்புப் பிரிவு பணிகளுக்குச் சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் இருந்தும் 100 மதிப்பெண்ணுக்குக் கேள்விகள் கேட்கப்படும். தேர்வு நேரம் ஒன்றரை மணி.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், ஒரு காலியிடத்துக்கு 5 பேர் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கு 25 மதிப்பெண். இறுதியாக, மெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். உதவி மேலாளர்களுக்குத் தொடக்க நிலையிலேயே ரூ.61 ஆயிரம் சம்பளம். உரிய கல்வி, வயதுத் தகுதி உடைய பட்டதாரிகள் நபார்டு வங்கியின் இணையதளத்தை (www.nabard.org) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய தேதி

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஏப்ரல் 2

முதல்நிலைத் தேர்வு: மே 12

மெயின் தேர்வு: ஜூன் 6

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x