Last Updated : 29 Sep, 2014 12:30 PM

 

Published : 29 Sep 2014 12:30 PM
Last Updated : 29 Sep 2014 12:30 PM

வாழ்க்கை வசீகரமானது!

வெட்டப்பட்ட தலைமுடி, காட்டன் புடவை, ஜோல்னா பையுடன் தினம் ஓர் ஊருக்குப் பயணமாகிறார். கூட்டங்கள், பயிற்சிப் பட்டறை, அறிவியல் விழிப்புணர்வு, போராட்டம் போன்றவற்றில் பங்கேற்கிறார். கடின உழைப்புக்கும் சுறுசுறுப்புக்கும் தன்னம்பிக்கைக்கும் ஒரு பெயர் வைக்கலாமென்றால் ‘மோகனா’ என்றுதான் வைக்க வேண்டும். பழநியில் வசிக்கும் 68 வயது மோகனா, ஓய்வு பெற்ற கல்லூரிப் பேராசிரியை.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவர், எழுத்தாளர், சமூக மாற்றத்துக்காகப் போராடுகிறவர் என்று நீளும் பட்டியலில் மார்பகப் புற்றுநோயைத் துரத்தியடித்தவர் என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம். மகனைப் பார்ப்பதற்காக அமெரிக்காவுக்கு டிக்கெட் வாங்கி, காத்திருந்தபோதுதான் மார்பில் லேசாக வலி வந்தது. தானே பரிசோதித்துப் பார்த்தபோது ஒரு சின்னக் கட்டி இருப்பது தெரிந்தது.

உங்களுக்கு மார்பகப் புற்றுநோய் என்று தெரிந்தபோது எப்படி எடுத்துக்கொண்டீர்கள்?

நான் எப்போதும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, தொடர்ச்சியான மருத்துவப் பரிசோதனை என்று இருந்ததால், எனக்கு மார்பகப் புற்றுநோய் வரும் என்று நினைக்கவேயில்லை. அதனால் 4 மாதங்களுக்குப் பிறகே பரிசோதனைக்குச் சென்றேன். பரிசோதனையின் முடிவு புற்றுநோயை உறுதி செய்தது. முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அழுவதாலும் வருத்தப்படுவதாலும் கேன்சர் ஓடிவிடுமா என்ன? என் மனத்தைத் திடப்படுத்திக்கொண்டேன். புத்தியைத் தயார் செய்துகொண்டேன். நோய் இரண்டாவது கட்டத்துக்கு வந்துவிட்டதால், உடனே அறுவைசிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சையைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் சிரித்துக்கொண்டேதான் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தேன். இரண்டேகால் மணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்தது. வேகமாகக் கண் விழித்தேன். புகைப்படங்கள் எடுக்கச் சொன்னேன். புத்தகம் படித்தேன். என்னுடைய வேலைகளைப் பிறர் உதவியின்றி செய்தேன். மறுநாளில் இருந்து நடைப்பயிற்சி மேற்கொண்டேன். என் தைரியத்தைக் கண்டு மருத்துவர்களே அசந்து போனார்கள். 15 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினேன். அறுவை சிகிச்சையின் போதோ, அதற்குப் பிறகோ நான் வலியை உணரவே இல்லை. இதற்கு என் பாசிட்டிவ் சிந்தனைதான் காரணம். நோயை வெல்ல முடியும் என்று நினைத்தாலே நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும் என்பது என் எண்ணம்.

கீமோதெரபி எப்படி இருந்தது?

முதல் கீமோதெரபியின்போது வயிற்றுப் போக்கும் வாந்தியும் ஏற்பட்டது. இரண்டாவதில் இருந்து அந்தப் பிரச்சினை இல்லை. கீமோதெரபியின் வேலை புதிய செல்கள் பெருகுவதைத் தடுப்பதுதான். அப்படித் தடுத்தால்தான் கேன்சர் செல்கள் பரவாது. நாக்கு, உள்ளங்கை, உள்ளங்கால் எல்லாம் கறுப்பாக மாறியது. முடி கொட்டியது. உணவைச் சாப்பிட முடியாது. காரம் இல்லாமல், உப்பு இல்லாமல் சாப்பிட்டேன். காய்கறி சாலட், ஜூஸ், பழங்கள் போன்ற சமைக்காத உணவுகளை எடுத்துக்கொண்டேன். 6 கீமோதெரபி வரை இந்தப் பிரச்சினைகள் இருந்தன.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு எவற்றில் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்?

மருந்துகளைச் சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். கொழுப்பில்லாத உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும். கலர்ஃபுல் டயட்டாக மாற்றிக்கொண்டால் மிகவும் நல்லது. அதாவது கேரட், பீட்ரூட் போன்ற பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களை ஜூஸாகவும் எடுத்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி மிக மிக அவசியம்.

மிக முக்கியமான விஷயம் வீடு திரும்பிய பிறகு, நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பார்க்க வருகிறவர்களைத் தவிர்க்கலாம். இப்படித் தவிர்ப்பதால் இன்னொரு நன்மையும் உண்டு. அவர்கள் சொல்கிற அநாவசிய ஆலோசனைகளையும் தவிர்க்கலாம்.

அறுவைசிகிச்சை முடிந்த பிறகு 5 ஆண்டுகள்வரை மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 4 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதற்குப் பிறகும் டயட், உடற்பயிற்சியோடுதான் இருக்கவேண்டும். அப்போதுதான் துரத்தியடித்த கேன்சர் திரும்பிப் பார்க்காது.

இந்த 6 மாதங்களை எப்படிக் கடந்தீர்கள்?

மூளையைச் சும்மா வைத்திருந்தால் கண்டதையும் யோசிக்கும். நிறையப் படித்தேன். நிறைய எழுதினேன், அதுவரை அறிவியல் எழுதி வந்த நான், விதவிதமாகச் சமைத்து, போட்டோ எடுத்து, சமையல் குறிப்புகளை எழுதினேன். 6 மாதங்களில் 300 கட்டுரைகள் எழுதினேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

எவ்வகையான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும்?

மார்பில் தோல்களை இழுத்து வைத்து தைத்திருப்பார்கள். கை இயல்பு நிலைக்கு வர கைக்குத் தனிப் பயிற்சி. காலை, மாலை நடைப்பயிற்சி. முக்கியமான, என்னை மீட்டெடுத்த உடற்பயிற்சி என்றால் அது தாய் சி தான். கேன்சருக்கு முன்பிருந்த நிலைக்குக் கொண்டுவந்து, இன்னும் அதிக சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் வழங்கியிருக்கிறது தாய் சி. ஓராண்டுக்குள் காஷ்மீர் பயணம் சென்று வந்தேன். அதன் பிறகு இயக்க வேலைகளில் வழக்கம் போல இறங்கிவிட்டேன்.

நீங்கள் சமூக மாற்றத்துக்காக உழைத்துக்கொண்டிருப்பவர். மார்பகப் புற்றுநோய்க்காக ஏதாவது விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறீர்களா?

சவாலே சமாளி என்ற தலைப்பில் ஸ்லைட் ஷோ, உரை போன்றவற்றை பெண்கள் கல்லூரிகளிலும் மாதர் அமைப்புகளிலும் செய்திருக்கிறேன். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்னைத் தொடர்புகொள்ளும்போது அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி, தைரியமாக எதிர்கொள்ளச் செய்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 60 பேருக்கு இப்படி நட்பு முறையில் கவுன்சலிங் அளித்து வந்துள்ளேன்.

இன்றைய பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு இருக்கிறதா?

பெரும்பாலும் இல்லை என்பதுதான் நிஜம். படித்த பெண்கள்கூட மார்பகப் புற்றுநோய் என்றால் அவமானமாகக் கருதி, வெளியில் சொல்வதில்லை, சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. இதில் என்ன அவமானம் இருக்கிறது? அறுவை சிகிச்சைக்குப் பிறகும் இயல்பான குடும்ப வாழ்க்கையை மேற்கொள்ளலாம். குழந்தை பெற்றுக்கொள்ளலாம். சகல வேலைகளையும் செய்யலாம். நான் எதையும் இழந்ததாக நினைக்கவில்லை. என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும், சமூகத்துக்குப் பயன்படும் விதத்திலும் மாற்றிக்கொண்டிருக்கிறேன். வசீகரமான இந்த வாழ்க்கைக்காக எத்தனைப் போராட்டங்களையும் சந்திக்கலாம்!

ஆரோக்கியமான வாழ்வைக் கடைப்பிடித்து புற்றுநோய் வரும் முன் காப்போம். ஒருவேளை வந்தால் தைரியமாக எதிர்கொண்டு, புற்றுநோயைத் துரத்தியடிப்போம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x