Last Updated : 19 Mar, 2018 10:52 AM

 

Published : 19 Mar 2018 10:52 AM
Last Updated : 19 Mar 2018 10:52 AM

உரிமை பங்குகளை வாங்கலாமா?

சமீப காலமாக பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் உரிமை பங்குகளை வெளியிட்டு வருகின்றன. விரிவாக்கம், கடனை அடைப்பது உள்ளிட்ட பல காரணங்களுக்காக உரிமை பங்குகள் வெளியிட்டு நிறுவனங்கள் நிதி திரட்டுகின்றன. டாடா ஸ்டீல், இந்தியன் ஓட்டல்ஸ், பிரமல் என்டர்பிரைசஸ், இந்தியாபுல்ஸ் என்டர்பிரைசஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் உரிமை பங்குகள் வெளியிட்டன.

ஏற்கெனவே பங்குதாரர்களாக இருக்கும் முதலீட்டாளர்களிடம், சந்தை விலையை விட தள்ளுபடி விலையில் வழங்கப்படும் பங்குகள்தான் உரிமை பங்குகள். ஏற்கெனவே இருக்கும் முதலீட்டாளர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள முடியும். மற்ற முறைகளை விட இந்த முறையில் நிதி திரட்டுவது நிறுவனங்களுக்கு எளிது. தவிர நிறுவனமும் கூடுதல் கடன் வாங்காமல் தேவையான தொகையை திரட்டிக்கொள்ள முடியும். ஆனால் ஒரு முதலீட்டாளராக உரிமை பங்குகள் உங்களுக்கு ஏற்றதா?

ஏற்கெனவே உங்களிடம் இருக்கும் பங்கினை சந்தை விலையை விட குறைந்த விலையில் வாங்க முடியும் என்றாலும் சில காரணிகளை அடிப்படையாக வைத்தே முடிவெடுக்கவும். உரிமை பங்குகள் விஷயத்தில் முதலீட்டாளர் தெரிந்து கொள்ள வேண்டியவை இதோ!

முதலீட்டுக்கு முன்!

உரிமை பங்கு வெளியீட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் குறிப்பிட்ட தேதியில் அந்த பங்கு உங்களிடம் இருக்க வேண்டும். பொதுவாக 15 முதல் 30 நாள்கள் வரை உரிமை பங்கு முதலீட்டில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். நீங்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்தலாம் அல்லது நிராகரிக்கலாம்.

முதலீடு செய்வதற்கு முன்பு திரட்டப்படும் இந்த தொகை எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். பொதுவாக நிறுவனங்கள் வாங்கிய கடனை அல்லது பகுதி அளவு கடனை குறைப்பதற்காக இந்த தொகையை பயன்படுத்துவார்கள். வட்டி விகிதம் உயர்ந்து வரும் இந்த சூழலில் கடனை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் நிறுவனங்கள் வட்டிக்கு செலுத்தும் தொகை மிகவும் குறையும். உதாரணத்துக்கு டாடா ஸ்டீல் நிறுவனம் உரிமை பங்குகள் மூலம் ரூ.12,000 கோடி அளவுக்கு நிதி திரட்டியது. இதில் ரூ.10,000 கோடி கடனை திருப்பி செலுத்துவதற்காக பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறது.

அதேபோல விலையை பொறுத்து முதலீடு செய்வதா வேண்டாமா என முடிவெடுக்கவும். உதாரணத்துக்கு டாடா ஸ்டீல் 15 சதவீத தள்ளுபடியில் உரிமை பங்குகளை வெளியிட்டது. ஆனால் பிரமல் என்டர்பிரைசஸ் நிறுவனம் சந்தை விலையை விட 10 சதவீத குறைந்த விலையில் வெளியிட்டது. உரிமை பங்கின் விலை மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் உரிமை பங்கு வெளியீட்டில் கலந்து கொண்டு, வைத்திருக்கும் பங்குகளின் சராசரி அடக்க விலையை குறைத்து கொள்ளலாம்.

இன்னொன்றையும் நினைவில் வைத்துக்கொள்ளவும். ஏற்கெனவே வைத்திருக்கும் பங்குகளில் மீண்டும் முதலீடு செய்யும்போது ஒரே பங்கில் அதிக முதலீடு செல்கிறது. இதனால் (concentration risk)ரிஸ்க் ஏற்படுகிறது. அதனால் உரிமை பங்குகள் வாங்கும் போது கவனமாக இருக்கவும். தவிர நீங்கள் ஏற்கெனவே மிகவும் குறைந்த விலையில் ஒரு பங்கினை வாங்கி அதன் பிறகு உரிமை பங்கு மூலம் சராசரி செய்ய வேண்டுமா என்பதையும் யோசிக்க வேண்டும்.

ஒரு வேளை நீங்கள் உரிமை பங்குகளை வாங்க விரும்பவில்லை என்றால் உங்களுக்கு என ஒதுக்கப்படும் பங்குகள் வேறு யாருக்காவது கூடுதலாக ஒதுக்கப்படும். கம்பெனி விதிகளின் படி சட்ட ரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. நீங்கள் முதலீடு செய்யாவிட்டால், உங்களுக்கான வாய்ப்பு இல்லை. அவ்வளவுதான். உங்களுக்கு அந்த பங்கினை வாங்க விருப்பம் இல்லை, அதே சமயத்தில் உங்களின் உரிமையை விட்டுக்கொடுக்கவும் விரும்பவில்லை என்னும் பட்சத்தில் பங்குகளுக்கு விண்ணப்பியுங்கள். குறைந்த விலையில் பங்குகள் உங்களுக்கு கிடைத்தவுடன் அதனை சந்தையில் விற்று பணமாக்கி கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x