Published : 17 Mar 2018 10:36 AM
Last Updated : 17 Mar 2018 10:36 AM

நலம் தரும் நான்கெழுத்து 26: குழந்தைகளுடன் என்னதான் பிரச்சினை?

குழந்தைகள் உங்களிடமிருந்து வந்தவர்கள் அல்ல. உங்களுடையவர்களும் அல்ல. அவர்கள் உங்கள் மூலமாக வந்தவர்கள்.

– கலீல் ஜிப்ரான்

சமீபத்தில் ஒரு பள்ளி மாணவனை மனநல ஆலோசனைக்காக என்னிடம் அழைத்துவந்தார்கள். ஆசிரியர் திட்டிவிட்டார் என்பதற்காகத் தற்கொலை செய்துகொள்ள முயன்று காப்பாற்றப்பட்டவன் அவன். அவனுக்கு ஆலோசனை கொடுத்து அனுப்பிவைத்து நிமிர்ந்தால், அடுத்த நபர் வந்தார். அவர் வேறு யாருமல்ல முன்னே சொன்ன பையனின் ஆசிரியர்தான். ‘இந்தக் காலத்துப் பசங்கள ஒரு வார்த்த சொல்ல முடியல சார். பொசுக்குன்னு ஏதாச்சும் பண்ணிடறாங்க. ஒரே டென்ஷனா இருக்கு’ எனப் புலம்பினார்.

உண்மைதான். காலம் மாறிவிட்டது! அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்தில் பையனைச் சேர்க்கும் முன்னர் பையனின் அப்பா ஆசிரியரிடம் ‘சார்! பையன் கண்ணை மட்டும் விட்டுட்டு எந்த இடத்தில் வேணுமானாலும் அடிங்க!’ எனச் சொல்லித்தான் சேர்ப்பார்கள். ஆசிரியர்களுக்கும் மாணவர்களை அடிப்பதே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. மனைவியிடம் போட்ட சண்டை, பழைய பிளேடால் சவரம் செய்த எரிச்சல், மின்விசிறி இல்லா வகுப்பறைப் புழுக்கம் என எல்லாவற்றின் விளைவும் பையன்களின் முதுகில்தான் விடியும்.

அதேபோல்தான் பெற்றோர்களும் இருந்தனர். குறிப்பாக அப்பாக்கள். ‘ஹிட்லர் பாதி இடி அமீன் பாதி கலந்து செய்த கலவை நான்’ என்பதுபோல் சர்வாதிகாரியாகத்தான் பலரும் இருந்திருக்கின்றனர். நெல்லைப் பகுதியில், பாராட்ட வேண்டுமென்றால்கூடப் பத்துக் கெட்ட வார்த்தை போட்டுத்தான் பாராட்டுவார்கள்.

அதுபோல் அக்காலத் தகப்பன்கள் மகனைப் பாராட்டினால்கூடப் பார்ப்பவர்களுக்கு ஏதோ கடுமையாகப் பேசுவதுபோல் தோன்றும். அவர்கள் மனநிலை நன்றாக இருந்தால் அடியோடு போய்விடும். இல்லையென்றால் பெல்ட், கம்பு எனப் பொருட் சேதமும் ஏற்படக்கூடும்.

திட்டியதற்கெல்லாம் தற்கொலையா?

இப்படிப் பெரும்பாலும் வசவும் வசவுசார்ந்த வாழ்க்கையுமாகவே அக்காலச் சிறுவர்கள் பலருடைய குழந்தைப் பருவம் அமைந்திருந்து. இருந்தாலும் அப்போதெல்லாம் ஆசிரியரோ பெற்றோரோ அடித்தார், திட்டினார் என்பதற்காக மனம் நொந்து தற்கொலை செய்துகொள்வதெல்லாம் வெகுவெகு அபூர்வமாக இருந்தது. அதிகம் போனால் ஊரைவிட்டு ஓடிப் போய் ராணுவ வீரனாகவோ தொழிலதிபராகவோ திரும்பி வருவார்கள்.

ஆனால் இப்போது ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் என மூன்று பிரிவினருமே பெரிதும் மாறியிருக்கிறார்கள். அனிச்ச மலர் மோந்து பார்த்தால்தான் வாடும். ஆனால், லேசாகக் கடுமையாகப் பார்த்தாலே வள்ளுவர் சொல்வதுபோல் ‘முகம் திரிந்து நோக்கக் குழைபவர்களாக’ இக்காலக் குழந்தைகள் உள்ளனர். கொஞ்சம்கூட ஏமாற்றங்களையோ கடுஞ்சொற்களையோ தாங்க முடியாதவர்களாக உள்ளனர். முதலிலே சொன்ன ஏமாற்றத்தைத் தாங்க முடியாமை என்ற பண்பு எப்படி உருவாகிறது எனப் பார்க்கலாம்.

எதிர்பார்ப்புகள் தரும் ஏமாற்றம்

நாம் விரும்பிய ஒன்று உடனே கிடைக்க வேண்டும், உடனே நடக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணமும் ‘நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்’ என்கிற மனநிலைதான் ஏமாற்றங்களுக்கெல்லாம் காரணம். கூட்டுக் குடும்பங்களாகவும் உடன்பிறந்தோர் புடைசூழவும் வாழ்ந்த காலகட்டத்தில் அதிகபட்ச எதிர்பார்ப்பு என்பது குச்சி மிட்டாய், குருவி ரொட்டி என்ற அளவிலேயே இருந்தது. அவற்றைப் பங்கு போட்டுக்கொள்ள பஞ்ச பாண்டவர்கள் அல்லது கவுரவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள்.

ஆனால், ‘நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என ஆகிவிட்ட இக்காலத்தில் கேட்டதெல்லாம் சில நானோ விநாடிகளுக்குள் கிடைத்துவிடுவதால், அடுத்து அடுத்து அவர்களது எதிர்பார்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன.

ஒரு லட்ச ரூபாய் பைக் வாங்கிக் கொடுக்காததால் அப்பாவை அடிக்கும் பையன்கள், ஐபோன் கேட்டால் அடுத்த மாதம்வரை பொறுத்திருக்க வேண்டுமென அம்மா சொன்னதால் தற்கொலை முயற்சியில் இறங்கும் பெண்கள் எனப் பலரை இக்கால கட்டத்தில் சந்திக்கிறோம்.

உணர்வுகளைப் பங்குபோட ஆளில்லை

இரண்டாவதாகச் சொன்னது வசைச் சொற்களைத் தாங்கிக்கொள்ள முடியாமை. அதுவும் இக்காலகட்டத்தின் சூழலால் வந்த மாற்றங்களுள் ஒன்று. உடைமைகளைப் பங்கு போட்டுப் பகிர்ந்துகொள்ள ஆளில்லாமல் போவதைப் போன்றே உணர்வுகளைப் பகிர்ந்து பங்கு போட்டுக்கொள்ள முடியாமல் போகிறது.

பெரும்பாலும் திட்டுக்களைக் கேட்டே வளராமலும் அதுவும் பிறர்முன் கேட்டு வளராமல் இருப்பதால் இன்றைய குழந்தைகளின் ஈகோ வீங்கிப் போன பலூனாக உள்ளது. ஒரு சிறு சுடுசொல் என்னும் குண்டூசிகூட அதை உடைத்துவிடுகிறது. பிறர் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற எதிர்பார்ப்பு அதிகமாகிறது. விளைவு? அந்த வசைச்சொல் தாங்க இயலாத அவமானமாகி விடுகிறது.

ஆக, ஒன்றாகக் கலந்துவிட்ட இடியாப்பத்தையும் நூடுல்ஸையும் பிரிப்பது போல் சிக்கலான ஒரு செயலாக, குழந்தைகளைக் கண்டிப்பது அவர்கள் கேட்பதை மறுப்பது போன்று ஆகிவிடும் நிலையில், கண்மூடித்தனமான கண்டிப்புக்கும் செல்லம் கொடுத்தே சீரழிப்பதற்கும் இடையே ஒரு சமநிலையை அடைவது எப்படி?

கட்டுரையாளர், மனநலத் துறைப் பேராசிரியர்
தொடர்புக்கு: ramsych2@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x