Published : 05 Mar 2018 11:56 AM
Last Updated : 05 Mar 2018 11:56 AM

நிலம் கையகப்படுத்தல்: வழிகாட்டுகிறது கர்நாடக மாநிலம்

ர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் பாவகடா என்ற இடத்தில் 13,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி பூங்காவை கடந்த வாரத்தில் அம்மாநில முதல்வர் சித்தராமையா திறந்து வைத்துள்ளார். `சக்தி ஸ்தலா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சூரிய மின் உற்பத்தி ஆலைக்காக அம்மாநில அரசு ரூ.16,500 கோடி முதலீடு செய்துள்ளது. ஐந்து கிராமங்களுக்கு பரந்து விரிந்துள்ள இந்த ஆலையின் மூலம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா சோலார் பவர் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் (KSPDCL) நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. கர்நாடகா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு நிறுவனம் மற்றும் மத்திய அரசின் சூரிய மின் உற்பத்தி துறையுடன் இணைந்து 2015-ம் ஆண்டிலேயே இதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளிலேயே இந்த திட்டம் செயல்வடிவத்துக்கு வந்துள்ளது. தவிர உலகின் மிகப் பெரிய சூரிய மின்னுற்பத்தி பூங்கா என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.

ஆனால் இதைவிடவும் முக்கியமான சிறப்பு என்னவென்றால், இந்த சூரிய மின்னுற்பத்தி பூங்கா அமைக்க ஒரு அடி நிலம்கூட கையகப்படுத்தவில்லை என பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் சித்தராமையா. குறிப்பாக ஐந்து கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து இந்த நிலம் வாடகை அடிப்படையில் பெறப்பட்டுள்ளது. இதற்காக அந்த விவசாயிகளிடம் ஒப்பந்தம் செய்துள்ளது மாநில அரசு. போதிய விளைச்சல் இல்லாமல் அப்பகுதி விவசாயிகள் சிரமப்படுகையில், இருக்கும் நிலத்தையும் கையகப்படுத்திவிட்டால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். அதனால் அப்படி யோசிக்கவில்லை என்கிறார் சித்தராமையா.

ஓர் ஏக்கருக்கு ஆண்டுக்கு 21,000 ரூபாய் வாடகைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இந்த வாடகை தொகை 5 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மூலம் இந்த பகுதியின் சமூக பொருளாதார நிலைமை மேம்படுவதுடன், விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

ஒருவேளை கர்நாடக அரசு இந்த நிலத்தை கையகப்படுத்துவது என்று முடிவு செய்திருந்தால் இந்த திட்டம் குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேறி இருக்க வாய்ப்பில்லை. நிலத்துக்கான உரிய விலையைத் தீர்மானிப்பதில் அதிகாரிகளுக்கும் மக்களுக்குமான இழுபறி, நிலத்தைத் தர விருப்பமில்லாத விவசாயிகளின் எதிர்ப்பு என பல கட்டங்களில் தேங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அரசின் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்றால் நியாயமான இழப்பீடு கிடைப்பதில்லை என்கிற நிலைமை நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் நிலம் அளிப்பவர்களையே திட்டத்தின் பங்குதாரர்களாக மாற்றியுள்ளது கர்நாடக அரசு.

அடுத்த சில மாதங்களில் கர்நாடக மாநில பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் விவசாயிகளிடம் நல்ல பெயர் எடுக்க சித்தராமையா முயற்சிக்கிறார் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்கின்றன. ஆனால் அரசியல் முரண்பாடுகளை மறந்தால் இந்த முயற்சி மிகச் சிறந்த முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இதர மாநிலங்களும் இதை பின்பற்றினால் அரசின் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் எந்த குழப்பமும் இருக்காது. மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும். செய்வார்களா ஆட்சியாளர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x