Published : 11 Mar 2018 12:00 PM
Last Updated : 11 Mar 2018 12:00 PM

களம் புதிது: 16 வயது சூப்பர் ஸ்டார்!

பலசாலி கோலியத்தைச் சிறுவன் தாவூத் வீழ்த்திய கதை பலருக்கும் தெரிந்திருக்கக்கூடும். மெக்சிகோவில் நடைபெற்ற உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் நடந்ததும் அப்படியொரு வியப்பூட்டும் நிகழ்வுதான். துப்பாக்கிச் சுடுதலில் நீண்ட அனுபவம் வாய்ந்த பலசாலி வீராங்கனைகளை ஒரே ஷாட்டில் தெறிக்கவிட்டிருக்கிறார் இந்தியாவின் 16 வயது இளம் பெண் மனு பாகர்!

மெக்சிகோவில் உள்ள குவாதலஜரா நகரில் நடைபெற்றுவரும் உலகத் துப்பாக்கி சுடும் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உலகின் கவனத்தை மனு ஈர்த்திருக்கிறார். ஹரியாணாவைச் சேர்ந்த மனு பாகர், மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்கே செல்லத் தொடங்கினார். இன்றோ, துப்பாக்கிச் சுடுதலில் சர்வதேச சூப்பர் ஸ்டார் வீராங்கனைகளை எல்லாம் ஓரங்கட்டி வெற்றி சாம்பியனாக மாறியிருக்கிறார். அதுவும், உலகத் துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற முதல் முறையிலேயே முத்திரை பதித்திருக்கிறார்!

சுட்டு வீழ்த்திய வெற்றிக் கனி

மனு, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இந்தப் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மனு நின்றபோது பலரும் அதிசயமாகப் பார்த்தார்கள். ஏனென்றால், இறுதி ஆட்டத்தில் நின்றவர்கள் எல்லோரும் துப்பாக்கிச் சுடுதலில் பெரும் மலைகள். மெக்சிகோவின் அலஜாண்ட்ரா சேவியா, பிரான்சின் செலின் கோபர்வில்லே, கிரீஸின் அன்னா கோரக்கி ஆகிய சாம்பியன்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

இவர்களில் அலஜாண்ட்ரா சேவியா இரு முறை உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றவர். நீண்ட அனுபவம் கொண்டவர். 1998-ம் ஆண்டிலிருந்து துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்கிறார். இவர் துப்பாக்கிச் சுடத் தொடங்கி நான்கு ஆண்டுகள் கழித்துதான் மனு பிறந்திருக்கிறார். அவரோடு மனு மல்லுக்கு நிற்கிறார் என்றால் நம்பவா முடிகிறது? ஆனால், இவர்களுக்குப் பக்கத்தில் ஏதும் தெரியாதவரைப் போல மனு பாகர் நின்றுகொண்டிருந்தார்.

முதல் சுற்றில் சூட்டில் மனு பின்னடைவைச் சந்தித்தார். கடைசி இரண்டு சுற்றுகளுக்கு முன்புவரை 1.7 புள்ளிகள் பின்தங்கி இருந்தார். ஆனால், கடைசி கோல்டன் ஷூட்டில் 0.4 புள்ளிகள் கூடுதலாகப் பெற்றார். அவரது கடைசி குறியில் தங்கப் பதக்கம் அவர் மடியில் விழுந்தது. கடைசி ஷூட்டில் வென்ற தருணத்தை அவராலேயே நம்ப முடியாமல் வாயடைத்து நின்றபோது, அரங்கில் எழுந்த பலத்த கரவொலி அவரை நிதானத்துக்குக் கொண்டுவந்தது. மனு பேக்கரின் இந்த வெற்றி பலவகையிலும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. உலகக் கோப்பைத் தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா பெற்ற 4-வது சிறந்த வெற்றி இது.

தொடரும் தங்க வேட்டை

இதோடு மனுவின் தங்க வேட்டை நிற்கவில்லை. 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் மனு சாதனை படைத்திருக்கிறார். இந்தப் பிரிவில் இந்தியாவின் ஓம் பிரகாஷுடன் இணைந்து களமிறங்கினார். தகுதிச் சுற்றைத் தாண்டிவந்த இந்த இணை, இறுதிப் போட்டியில் 5 இணைகளை எதிர்த்துக் களமிறங்கியது.

11CHLRD_MANU_4_right

இதில் மனு பாகர் - ஓம் பிரகாஷ் இணை 476.1 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தைத் தனதாக்கியது. இந்த வெற்றியின் மூலம் சீனியர் உலகக் கோப்பைத் தொடரில் இளம் வயதில் இரண்டு தங்கப் பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் மனு பாகர் பெற்றிருக்கிறார்.

துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் புதிய சூப்பர் ஸ்டாராக உருவாகியுள்ள மனு பாகர் தற்போது 11-ம் வகுப்பு படித்துவருகிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை மனு அக்மார்க் குத்துச் சண்டை வீராங்கனை. குத்துச் சண்டைப் போட்டியில் கண்ணில் காயம்பட்டுப் பாதிக்கப்பட்டவர். அதனால், அந்த விளையாட்டிலிருந்து விலகி, துப்பாக்கிச் சுடுதலுக்கு மாறினார். மனுவுடைய தந்தை துப்பாக்கிச் சுடும் வீரர் என்பதால் ஒரே மாதத்தில் துப்பாக்கிச் சுடுதலில் தேர்ந்தவரானார். இதனால் அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே தேசிய சாம்பியனாகி ஆச்சரியமூட்டிவர், இன்று சர்வதேச சாம்பியனாகி அசத்தியிருக்கிறார்.

தன்னுடைய கடும் உழைப்பாலும் மன உறுதியாலும் சிறு வயதிலேயே ஒரு விளையாட்டிலிருந்து விலகி, இன்னொரு விளையாட்டில் தடம் பதித்து, மூன்று ஆண்டுகளிலேயே உலக சாம்பியனாக ஒளிரும் மனு, நம்பிக்கை நட்சத்திரம்!

மகுடம் சூடிய மல்யுத்த ராணி!

இந்தியாவில் ஆண்கள் அணியின் ஆதிக்கம் நிறைந்தது மல்யுத்த விளையாட்டு. இதுவரை பெண்களும் மல்யுத்தப் போட்டிகளில் வெற்றிபெற்றிருந்தாலும், ரியோ ஒலிம்பிக் போட்டியில் சாக்‌ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் பெற்றதன் மூலம் மகளிர் அணி பரவலான கவனம் பெற்றது.

11CHDKN_NAVJOT_KAUR

இப்போது ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று மல்யுத்தத்தில் புதிய மைல்கல்லைப் பதித்திருக்கிறார் பஞ்சாப்பைச் சேர்ந்த நவ்ஜோத் கவுர். ஆசிய மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைக்கும் அவரே சொந்தக்காரர்.

கிர்கிஸ்தானில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த இந்தப் போட்டியில் இந்தியப் பெண்கள் அபாரமாக விளையாடி, கவனம் பெற்றனர். இந்தத் தொடரில் ஒட்டுமொத்தமாக இந்தியா ஒரு தங்கம் உட்பட எட்டுப் பதக்கங்களை வென்றது. இதில் சரிபாதி பதக்கங்களை வென்றவர்கள் பெண்கள். வினேஷ் போகத், சங்கீதா போகத், சாக்‌ஷி மாலிக் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வெல்ல, நவ்ஜோத் கவுர் தங்கப் பதக்கம் வென்று இந்திய மல்யுத்த வரலாற்றில் தன் பெயரை அழுத்தமாகப் பதிந்திருக்கிறார். மார்ச் 3 அன்று நடைபெற்ற 65 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜப்பானின் மியூ இமாயைத் தோற்கடித்து, நவ்ஜோத் தங்கத்தைச் சூடிக்கொண்டார்.

முதன்முறையாக இந்தியாவுக்குத் தங்கம் வாங்கிக் கொடுத்திருக்கும் நவ்ஜோத், ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பஞ்சாப்பில் பகாரியா என்ற கிராமத்தில் வசித்துவருகிறார். இவருடைய தந்தை சுக்செயின் சிங் விவசாயியாக இருந்தாலும், ‘தங்கல்’ படத்தில் வருவதுபோல் தன் இரண்டு மகள்களையும் மல்யுத்த வீராங்கனைகள் ஆக்க, ஊர் முழுவதும் கடன் வாங்கி செலவு செய்தவர். 13 லட்சம் ரூபாய்வரை கடன் வாங்கி, அதை அடைக்க வழிதெரியாமல் விழி பிதுங்கிக் கிடந்தார். ஆனால், பதக்கம் வென்றதால், தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையைக் கொண்டு, தனக்காகக் கடன் பெற்ற தந்தையின் கடனை அடைத்திருக்கிறார் நவ்ஜோத் கவுர்.

மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் நவ்ஜோத் கவுர் பெற்ற தங்கப் பதக்கத்தால் இந்தியா மட்டுமல்ல; அவரது குடும்பமும் தலை நிமிர்ந்திருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x