Last Updated : 29 May, 2019 09:43 AM

 

Published : 29 May 2019 09:43 AM
Last Updated : 29 May 2019 09:43 AM

கதை: யாருக்கு உதவலாம்?

பொங்குதேசத்தை ஒரு மன்னர் ஆண்டுவந்தார். யார் பேச்சையும் கேட்காத, தலைக்கனம் பிடித்தவர். ஒரு நாள் அரசவையில், “மந்திரி, நான் வேட்டைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றார்.

“நல்லது மன்னா, நான் நமது வீரர்களைத் தயார்படுத்துகிறேன்.”

“எதுக்கு? நான் ஒருவனே பெரும் படைக்குச் சமமானவன் தானே?”

மன்னரின் பெருமைப் பேச்சைப் புத்திசாலித்தனமாகத்தான் சமாளிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்த மந்திரி தொடர்ந்தார்: “உண்மைதான் மன்னா. மிகப் பெரிய மனிதப் படையைத் தாங்கள் ஒருவரே வீழ்த்த வாய்ப்புள்ளது. ஆனால், விலங்குகள் வேறு. நம்மைவிடப் பல மடங்கு பலம் வாய்ந்தவை.

எந்தத் திசையிலிருந்து தாக்கும் என்று கணிக்க முடியாதவை. அவை மன்னர், சாமானியர் என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பதில்லை. யாராக இருந்தாலும் அவற்றுக்கு இரைதான்...”

மந்திரி முடிப்பதற்குள் மன்னர் குரலை உயர்த்தி, “யாரங்கே? என் திறமையைக் குறைத்து மதிப்பிட்ட இந்த மந்திரியை உடனே கைது செய்யுங்கள்” என்று கர்ஜித்தார்.மந்திரி திகைத்துவிட்டார். உடனே சிறையிலும் அடைக்கப்பட்டார்.

மறுநாள் யார் துணையும் இன்றி, தன்னந்தனியாகக் காட்டுக்கு வேட்டையாடச் சென்றார் மன்னர். நேரம்தான் கடந்தது. அவர் எதிர்பார்த்ததுபோல் சிங்கமோ புலியோ அகப்படவில்லை.வேட்டையாடாமல் திரும்பக் கூடாது என்று நினைத்ததால், காட்டின் உட்புறம் நோக்கித் தன் குதிரையைச் செலுத்தினார்.

அவர் நினைத்ததைப்போல் ஒரு புலி தென்பட்டது. அவர் கண் இமைக்கும் நொடியில் அந்தப் புலி மன்னர் மீது பாய்ந்தது.   அதே நேரத்தில் புலியின் மீது சக்தி வாய்ந்த அம்பு ஒன்று பாய்ந்து, புலியை வீழ்த்தியது.

மன்னருக்கு ஒரு நொடி என்ன நடந்தது என்று புரியவில்லை.  புதருக்குப் பின்னால் மறைந்திருந்த வேடன் வெளியேறி, மன்னரை வணங்கினார்.

தனக்கு மன்னர் பாராட்டுத் தெரிவிப்பார், அவர் உயிரைக் காப்பாற்றியதற்காகப் பொன்னும் பொருளும் அள்ளிக் கொடுப்பார் என்று எண்ணியபடியே பெருமிதத்தோடு நின்றார்.

மன்னருக்கு ஆத்திரம் வந்தது. “நானே புலியை வீழ்த்தியிருப்பேன். உன்னை யார் அம்பு விடச் சொன்னது?” என்று கோபமாகக் கேட்டார்.

“இல்லை மன்னா, அந்தப் புலி உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொல்லப் பார்த்தது...” என்று வேடன் முடிப்பதற்குள் மன்னர் குறுக்கிட்டார்.

“இதற்கு மேல் எதுவும் பேசாதே” என்று கூறிவிட்டு, அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அரண்மனைக்கு வந்து சேர்ந்தார் மன்னர்.

மறுநாளே வேடன் கைது செய்யப்பட்டார். மந்திரியும் வேடனும் அருகருகே சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மந்திரி வேடனிடம் பேசி, அவர் சிறைக்கு வந்த கதையைக் கேட்டறிந்தார். அவருக்காக வருந்தினார்.

சில தினங்களுக்குப் பிறகு, மந்திரியும் வேடனும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டனர்.

மன்னர் இவர்களைப் பார்த்து, “சாட்சி தேவைப்படாத அளவுக்கு இருவரின் குற்றமும் நிரூபிக்கப்பட்டுள்ளது, மந்திரி தன் பேச்சின் மூலம் என் திறமையைக் குறைத்து மதிப்பிட்டார்; வேடனோ தனது செயலின் மூலம்  என் திறமையைக் குறைத்து மதிப்பிட்டார். மந்திரியாருக்கு ஆயுள் முழுக்கச் சிறையில் இருக்கும் தண்டனையும், வேடனுக்கு மரண தண்டனையும் விதிக்கிறேன்” என்றார்.

அரசவையே மெளனம் காத்தது. தான் நடுநிலை தவறாதவன் என்று காட்டிக்கொள்ள விரும்பிய மன்னர், “இறுதியாக ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்றார்.

வாய்ப்பைத் தவறவிட விரும்பாத மந்திரி, “முட்டாளுக்கு அறிவுரை வழங்காதே” என்றார்.

இதைக் கேட்ட வேடன், “முட்டாளுக்கு உதவி செய்யாதே” என்றார்.

மன்னர் ஒரு நொடி திகைத்தாலும், உடனே தனது தவறை உணர்ந்தார். இருவரையும் விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். தன் தவறுக்காக மன்னிப்பும் கேட்டார்.

இருவருக்குமே பொன்னும் பொருளும் வழங்கினார். தனது நன்மைக்காகத்தான் இருவருமே பேசியும் செயல்பட்டும் இருக்கின்றனர் என்பதை உணர்ந்து, நன்றியோடு திகழ்ந்தார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x