Last Updated : 26 May, 2019 09:59 AM

 

Published : 26 May 2019 09:59 AM
Last Updated : 26 May 2019 09:59 AM

இனி எல்லாம் நலமே 07: கவனிக்காமல் விட்டால் ஆபத்து

பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பெண்ணை அவருடைய அம்மா அழைத்துவந்தார். நன்றாகப் படித்துக்கொண்டிருந்த பொண்ணாம். எப்போதும் முதல் ஐந்து ரேங்க்குக்குள் வாங்குவாளாம். இப்போது கடைசி மதிப்பெண் வாங்குவதைப் பற்றிச் சிறிதும் வருத்தப்படாமல் இருக்கிறாள் என்பது அம்மாவின் புகார்.

படிப்பதில்லை, சோம்பேறியாக இருக்கிறாள், எந்த வேலையும் செய்வதில்லை, எப்போதும் மூலையில் போய் உட்கார்ந்துவிடுகிறாள், வீட்டுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி இருக்கிறாள் என்று அடுக்கடுக்கான புகாரை வாசித்த அந்தப் பெண்ணின் அம்மா, மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டுமா என்று கேட்டார்.

இதுபோல் வரும் பெண்களை முதலில் பரிசோதித்துவிட்டுப் பிறகு சில அடிப்படைப் பரிசோதனைகளைச் செய்யச் சொல்வேன்.

அந்தப் பெண்ணுக்கு ஹீமோகுளோபின் அளவு மிகக் குறைவாக நான்குக்கும் கீழே இருந்தது. பொதுவாகப் பெண்களுக்கு 12 – 14 என்ற அளவில் இருக்க வேண்டும். அந்தப் பெண்ணுக்கு உடனடியாக ரத்தம் கொடுத்தோம். ஊட்டச்சத்து நிறைந்த உணவைக் கொடுத்தோம்.

ஹீமோகுளோபின் பிரச்சினை சரியானதுமே வேறு எதுவும் செய்யாமலேயே அந்தப் பெண் மீண்டும் சுறுசுறுப்பாகிவிட்டாள். பழையபடி நன்றாகப் படிக்க ஆரம்பித்துவிட்டாள். இது ஏதோ மாயாஜாலம்போல இருப்பதாக அந்தப் பெண்ணின் அம்மா ஆச்சரியப்பட்டார்.

இன்றைக்கு இளம் பெண்களையும் பெண்களையும்    பெரிதாகப் பாதிக்கிற பிரச்சினை ரத்தசோகை. அந்தப் பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய்ச் சுழற்சியின்போது எட்டு முதல் ஒன்பது நாட்களுக்கு நல்ல உதிரப்போக்கு இருந்திருக்கிறது.

பொதுவாக, மாதவிடாய்ச் சுழற்சியின்போது ஏழு நாட்கள் வரை உதிரப்போக்கு இருக்கலாம் எனச் சொன்னதை மனத்தில் வைத்துக்கொண்டு, தனக்கு ஒன்பது நாட்கள்வரை உதிரப்போக்கு இருப்பதை யாரிடமும் சொல்லாமலேயே இருந்திருக்கிறாள்.

அதிக ரத்த இழப்பால் அந்தப் பெண் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். அதனால், பசிக்கவில்லை; சரியாகச் சாப்பிடவில்லை. இது ரத்தசோகையை இன்னும் அதிகப்படுத்திவிட்டது. இந்த நச்சு வட்டத்தில் மாட்டி, மேலும் மேலும் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டு 3.4 என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது.

இளம்பெண்களைப் பாதிக்கும் ரத்தசோகை

ஒரு கல்லூரியில் ரத்த தான முகாம் நடந்தபோது பெண்களிடம் பொதுவான உடல்நலம் பற்றிப் பேசச் சென்றிருந்தேன். அன்று ரத்ததானம் கொடுக்க வந்த 267 பெண்களில் 263 பேருக்கு ரத்தசோகை என்று சொல்லக்கூடிய அனீமியா இருந்தது தெரியவந்தது.

நாம் பொதுவாக வறுமைக்கோட்டில் இருப்பவர்கள் மத்தியில்தான் ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கும் என்று நினைக்கிறோம். ஆனால், வசதியான வீடுகளில் இருக்கும் பெண்கள்கூட ரத்தசோகைக்கு ஆளாகிறார்கள். இதற்கு மருத்துவக் காரணங்கள் மட்டுமல்லாமல் சமூக, பொருளாதார காரணங்களும் உண்டு.

ஒல்லியாக இருப்பதுதான் அழகு என நினைத்துக்கொண்டு இளம்பெண்கள் சரிவரச் சாப்பிடுவதில்லை. அப்படியே சாப்பிட்டாலும் ஊட்டச்சத்தான உணவு வகைகளைவிடத் துரித உணவு வகைகளையே அதிகமாக விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இத்தகைய உணவு வகைகளிலிருந்து இரும்புச்சத்து அதிகம் கிடைப்பதில்லை. இரும்புச்சத்து இருந்தால்தான் ஹீமோகுளோபின் உற்பத்தி சரிவர இருக்கும்.

வளரிளம் பெண்களில் பெரும்பாலோர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இவர்களின் வேலை செய்யும் திறன் குறைவதோடு வளர்ச்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல், கற்றுக்கொள்ளும் திறமை போன்றவை பாதிக்கப்படுகின்றன. இந்த நிலையில் இவர்களுக்குத் திருமணமாகி, குறைவான எடை அளவோடு குழந்தை பிறக்க நேரிடுகிறது. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் ஏற்படும் பாதிப்புகளில் மிகவும் முக்கியமானது ரத்தசோகை.

எது ரத்தசோகை?

நம் உடலில் உள்ள ரத்தத்தில் காணப்படும் சிவப்பு அணுக்களில் ஹீமோகுளோபின் குறைந்து மயக்கம், தலைச்சுற்றல், அசதி, மூச்சு வாங்குதல் போன்றவை ஏற்படுகின்றன. இதை ரத்தசோகை என்கிறோம். ரத்தசோகையால் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளரிளம் பருவப் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

ரத்தசோகை ஏற்படக் காரணங்கள்

# பெண்களுக்கு மாதவிடாயின்போது அதிக அளவில் ரத்தம் வெளியேறுதல்.

# இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்ணாமல் இருப்பது.

# கொக்கிப்புழு நோயால் பாதிக்கப்படுவது.

# வயிற்றுப்போக்கு.

# மலேரியா நோயால் அவதியுறுவது.

# காசநோயால் நுரையீரலிலிருந்து ரத்தம் வருதல், குடல்புண் காரணமாக வயிற்றில் ரத்தம் வருதல், மூல நோயால் மூலத்திலிருந்து ரத்தம் வருதல் போன்றவை.

# காயங்களிலிருந்து ரத்தம் வருதல்.

ரத்தசோகையின் அறிகுறிகள்

# அசதி, சோர்வு, மயக்கம் பசியின்மை.

# உடல் வெளிறியிருத்தல்.

# கண்ணின் கீழ் இமையின் உட்பாகம் வெளுத்திருத்தல்

# நகம் வெளிறியிருத்தல்

# நாக்கு வெளிறிப்போய் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறுதல்

# எளிதில் களைப்படைதல்

# உணவில் நாட்டமில்லாதிருத்தல்

# அதிக வேலை செய்தால் மூச்சு வாங்குதல்

# தோலில் தேமல், குறிப்பாக, மூட்டுகளிலும் விரல் நகங்களிலும் தோற்றம் மாறுவது.

# ஆரம்பத்தில் நகங்கள் உலர்ந்து முறியத்தொடங்கும். பிறகு அவை வடிவில் மாறும்.

# கொக்கிப்புழுவால் ரத்தசோகை ஏற்படும்போது உடல் முழுவதும் வீங்கிவிடும்; பலவீனமடையும்.

ரத்தசோகையை எப்படித் தடுக்கலாம்?

1. இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2. இரும்புச்சத்தை நமது உடல் உட்கிரகித்துக் கொள்ளப் புரதம், வைட்டமின் சி, கால்சியம் போன்ற சத்துக்கள் அவசியம். எனவே, கேழ்வரகு, உளுந்து, முருங்கைக் கீரை, வெந்தயக் கீரை, கேரட், கொத்தவரை, எள், பால், வெல்லம், மீன் போன்ற உணவுப் பொருட்களையும் பச்சை காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3. குழந்தைகளுக்கு ரத்தசோகை வராமல் தடுக்கச் சிறுவயது முதலே இரும்புச்சத்து மிகுந்த உணவைக் கொடுக்க வேண்டும்.

4. கடுமையான ரத்தசோகையால் பாதிக்கப் பட்டவர்கள்  உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இரும்புச்சத்து, ஃபோலிக் அமில மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

6. இரும்புச்சத்து சேர்க்கப்பட்ட உப்பைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

7. வயிற்றுப்பூச்சி நீக்க மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும்.

ரத்தசோகை வராமல் தடுக்க உதவும் இரும்புச்சத்து கவனிக்காமல்-விட்டால்-ஆபத்து நிறைந்த உணவுப் பொருட்கள்:

முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணி, பசலைக் கீரை, கீரைத் தண்டு, கறிவேப்பிலை, சுண்டைக்காய், ஈரல், இறைச்சி, வெல்லம், பருப்பு வகைகள், கேழ்வரகு, சோயாபீன்ஸ், கோதுமை கலந்த உணவு, உளுந்து வடை, கடலை மிட்டாய், எள்ளுருண்டை, பேரிச்சம்பழம், பப்பாளி, மாதுளை, மலைவாழை போன்ற பழங்கள், பச்சை காய்கறிகள், மோர் கலந்த பச்சடி, பாகற்காய், உலர்ந்த பழங்கள், முட்டை, கருப்பட்டி, பயறு வகைகள், வைட்டமின் ஏ நிறைந்த உணவுப் பொருட்களான கேரட், தக்காளி, கொய்யா, பரங்கிக்காய், மாம்பழம், தயிர் போன்றவை.

(நலம் நாடுவோம்)

கட்டுரையாளர், மகப்பேறு மருத்துவர்.

தொடர்புக்கு: mithrasfoundation@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x