Published : 31 May 2019 11:36 AM
Last Updated : 31 May 2019 11:36 AM

முன்பொரு காலத்தின் முரட்டு கௌபாய்

கிளிண்ட் ஈஸ்ட்வுட் 88-வது பிறந்த தினம்

அது 1966-ம் வருடம். இத்தாலிய இயக்குநரான செர்ஜியோ லியோன் இயக்கத்தில் இத்தாலி மொழியில் தயாரான அந்தப் படம் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அமெரிக்காவில் வெளியாகிறது. அந்தப் படத்தின் நாயகன் அணிந்திருக்கும் கௌபாய் தொப்பிக்குக்குக் கீழே படு இறுக்கமான முகம். கையில் சற்று நீளமான பிஸ்டல்.

வாயில் சதா புகைந்து கொண்டிருக்கும் சுருட்டு. கோட்டுக்கு மேலே அணிந்திருக்கும் போன்சோ மேலங்கி. கண் இமைப்பதற்குள் மின்னல் வேகத்தில் எதிரிகளைச் சுட்டு வீழ்த்தும் துப்பாக்கி வன்முறை எனக் கதாநாயகன் செய்யும் அமளிகள் திரைப்பட விமர்சகர்களை வெறுப்பேற்றுகின்றன.

‘இதுபோன்ற ஒரு வன்முறைக் குப்பையைப் பார்ப்பது நேரக் கொலை’ என்று கடுமையான விமர்சனங்கள் அச்சேறுகின்றன. ஆனால், மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய் அந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டாடுகிறார்கள்.

அதுவரை துணைவேடங்களில் நடித்து, அந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அந்த 34 வயது இளைஞர் கிளிண்ட் ஈஸ்ட்வுட். நாயகனுக்கு பெயர் ஏதும் இல்லாத அந்தப் படம் ‘எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ்’ (A Fistful of Dollars).

இத்தாலியில் எடுக்கப்பட்ட அந்தப் படம், அமெரிக்காவில் வசூல் வேட்டை நடத்தியது மட்டுமல்ல; ஹாலிவுட்டையும் திரும்பிப் பார்க்க வைத்தது. தொலைக்காட்சித் தொடர்களிலும் துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்துவந்த ‘கிளிண்ட் ஈஸ்ட்வுட்’டிடமா இத்தனை ஸ்டைல்?! என்னதான் கௌபாய் கதாநாயகன் என்றாலும் ஒரு வினாடிக்குள் மூன்று பேரை ஒரேயொரு பிஸ்டல் கொண்டு சுட்டுக்கொல்வதை நம்பும்விதமாகப் படமாக்கியிருக்கிறாரே; யாரிந்த இயக்குநர்?! ஹாலிவுட் பாணி பின்னணி இசைக் கோப்பிலிருந்து முற்றிலும் வெறோர் இசையைத் தந்து, வடமேற்கின் பாலைவனப் பகுதிகளுக்கும் செவ்விந்திய பூர்வக் குடிகள் வசிக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் குடியேற்றங்கள் வளர்ந்துவரும் காலனிகளுக்கும் அழைத்துச் செல்கிறதே என்று என்னியோ மாரிக்கோனியின் இசையைக் கேட்டு ஆச்சரியப்பட்டார்கள்.

பெயரற்ற கதாநாயகன்!

‘எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ்’படத்துக்கு இயக்குநர் செர்ஜியோ லியோன் கதாநாயகனைத் தேடியபோது அவருக்கு கிளிண்ட் ஈஸ்ட்வுட்டைப் பரிந்துரைத்தவர் தயாரிப்பாளர் திரைக்கதை எழுத்தாளருமான ரிச்சர்ட் ஹாரிசன்.

படத்துக்கான ஆடிசனின்போது, முன்கோபியான கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு வசனம் ஏதும் கொடுக்காமல் நடிக்கச் சொன்னதால் “கதாநாயகனே என்றாலும் இந்தப் படவாய்ப்பு எனக்குக் தேவையில்லை” என்று துடுக்காக எடுத்தெறிந்து பேசினார். ஆனால், அதுவே இயக்குநர் செர்ஜியோ லியோனுக்குப் பிடித்துப்போய்விட்டது.

காரணம், கதாநாயகனின் முன்கோபம் அவனது கதாபாத்திரத்தின் முக்கியக் குணமாக இருந்தது. புகைப்பதை அடியோடு வெறுத்த கிளிண்ட் ஈஸ்ட்வுட், ‘எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ்’ படப்பிடிப்பில் சுருட்டுப் பற்றவைக்கத் தெரியாமல் சிரமப்பட்டார்.

ஒருவர் சுருட்டைப் பற்றவைத்து கிளிண்டின் வாயில் வைக்க, வெறுக்கும் சுருட்டை விருப்பத்துடன் புகைப்பதுபோல் காட்சிமுடியும்வரை புகையை இழுத்து நடித்துக் கொடுத்தார். ஆனால், ரசிகர்கள் படத்தைப் பார்த்துவிட்டு  ‘இத்தனை ஸ்டைலாக இதற்குமுன் எந்த நடிகரும் புகைக்கவில்லை’ என்று புகழ்ந்தார்கள்.

மெக்சிக - அமெரிக்க எல்லையில் இருக்கும் சிறு நகரில் இரு குற்றக் குழுக்களுக்கு இடையே நடைபெறும் குழு மோதல்களைப் பயன்படுத்தி இரு தரப்பையையுமே ஒழித்துக்கட்டி ஆதாயம் தேட முயலும் துப்பாக்கி வீரனின் சாகசங்கள்தாம் ‘எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ்’.

அடையாளமோ பின்னணியோ இல்லாத  சாகச கௌபாய் வீரனின் கதாபாத்திரம் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ‘எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ்’ படத்தைத் தொடர்ந்து செர்ஜியோ லியோன் இயக்கத்தில் அடுத்தடுத்து உருவான ‘ஃபார் எ ப்யூ டாலர்ஸ் மோர்’ (For a Few Dollars More), இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளைக் கடந்து உலகம் முழுவதும் பிரபலமான ‘தி குட், தி பேட், தி அக்லி’ (The Good, The Bad and The Ugly) ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்த கிளிண்ட் ஈஸ்ட்வுட், ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனார்.

முரட்டு-கௌபாய்

செர்ஜியோ லியோன் ஹாலிவுட்டுக்குக் குடிபெயர்ந்தார். என்னியோ மாரிக்கோனியின் இசையோ ஹாலிவுட்டின் பின்னணி இசைப் பாணியில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

மீண்டும் பிறந்த நட்சத்திரம்

‘டாலர் ட்ரையாலஜி’ என்று அழைக்கப்படும் செர்ஜியோ லியோனின் முதல் மூன்று ‘வெஸ்டர்ன்’ படங்களுக்குப் பின் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உருவானார்கள். அதிரடி ஆக்‌ஷன் நாயகனாக அவர் வழிபடப்பட்டார். தொடர்ந்து தாம் நடித்துவந்த கௌபாய் படங்கள் விமர்சகர்களால் வறுத்தெடுக்கப்படுவதைக் கூர்ந்து கவனித்து வந்தார்.

‘தலைக்கு இவ்வளவு பணப்பரிசு என்று ஷெரீப்பால் அறிவிக்கப்பட்ட கொள்ளை மற்றும் கொலைக் குற்றவாளிகளைச் சுட்டுக்கொன்று உடலை ஒப்படைப்பது, புதையலைத் தேடி அலையும் வில்லன்களோடு மோதுவது, பழிக்குப்பழி வாங்குவது, துப்பாக்கியைத் தாறுமாறாகப் பயன்படுத்தி அது ஆயுதக் கலாச்சாரமாக மாற வழிவகுப்பது ஆகியவற்றைத்தானே கிளிண்ட்டின் கௌபாய் படங்கள் செய்துகொண்டிருக்கின்றன.

இவைதாம் இன்றைய அமெரிக்காவின் வாழ்க்கையா?’’என்று ஒரு விமர்சகர் காட்டமாகக் கேட்டு எழுதியது கிளிண்ட் ஈஸ்ட்வுட் எனும் மாபெரும் நட்சத்திரத்தின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. கிளிண்ட் தனது கௌபாய் சாகச நாயகன் பிம்பத்திலிருந்து விடுபட விரும்பிய அந்தத் தருணத்தில் அவரிடமிருந்து வேறொரு நட்சத்திரம் பிறந்தார். அவர்தான் இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்.

உலகம் வியக்கும் படங்கள்

கிளிண்ட் ஈஸ்ட்வுட் இயக்கி, நடித்த பெரும்பாலான படங்கள் உலக சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவை. அவற்றில், அவர் டிஸ்க் ஜாக்கியாக தோன்றும் ‘பிளே மிஸ்டி ஃபார் மீ ’ (Play Misty for Me), தொடர்கொலைகளைத் துப்பறிந்து குற்றவாளியை நெருங்கும் சான் பிரான்ஸிஸ்கோ நகரக் காவல் அதிகாரியாகத் தோன்றும் ‘ டர்ட்டி ஹாரி’ (Dirty Harry) ஆகிய படங்கள் அவரை நவீன அமெரிக்காவின் நாயகனாகக் காட்டின.

ஆனால், ‘ டர்ட்டி ஹாரி’ படக் கதாபாத்திரத்தை  மையமாக வைத்து உருவான ‘மேக்னம் போர்ஸ்’ (Magnum Force), ‘தி என்போர்ஸர்’ (The Enforcer), ‘சடன் இம்பேக்ட்’ (Sudden Impact) உள்ளிட்ட பல படங்கள் அவருக்குப் பெரும் தோல்வியாக அமைந்தன. இந்த நேரத்தில், எந்த கௌபாய் பிம்பத்தை உதறித் தள்ளினாரோ அதையே மீண்டும் கையிலெடுத்து அவர் கொடுத்த படம்தான் 1992-ல் வெளியாகி நான்கு ஆஸ்கர்களை வென்றுகொடுத்த ‘அன்ஃபர்கிவன்’ (Unforgiven).

‘செர்ஜியோ லியோனின் வெஸ்டன் படங்களுக்குச் சற்றும் குறைந்ததல்ல’ என்று உலக வெஸ்டர்ன் பட ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்தப் படத்தின் பின்னர், இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் ஆஸ்கர் வேட்டை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனால், அவை கௌபாய் கதைகள் அல்ல; சாதாரண, அசாதாரண மனித வாழ்க்கையைப் பேசும் படங்கள்.

முன்பொரு காலத்தின் முரட்டு கௌபாய் நடிகரின் அத்தனை படங்களும் இன்று ‘கிளாசிக்ஸ்’ என்ற வகைமையில் அமெரிக்க, இத்தாலிய சினிமாவின் பண்பாட்டுத் தொன்மங்கள்போல் ஆகிவிட்டன. தாம் இயக்கும் படங்களில் தனது வயதுக்கேற்ற படங்கள் அமைந்தால் மட்டுமே நடிக்கும் கிளிண்ட், இந்த 88 வயதிலும் உற்சாகம் குறையாத இயக்குநர்.

‘தி பிரிட்ஜஸ் ஆஃப் மாடிஸன் கவுண்டி’ என்ற காதல் காவியத்தை இயக்கி, நடித்துத் தயாரிக்க என்ன காரணம் என்று கிளிண்டிடம் கேட்கப்பட்டபோது “ வாழ்க்கைக்கு நெருக்கமான படங்களின் மூலமே நான் நினைவுகூரப்படவேண்டும்” என்று தனது விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x