Last Updated : 25 May, 2019 11:45 AM

 

Published : 25 May 2019 11:45 AM
Last Updated : 25 May 2019 11:45 AM

காயமே இது மெய்யடா 34: இது குழந்தை பாடும் தாலாட்டு

என் நண்பரொருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள கொய்யா மரத்தின் கீழ் நின்று புகைப்பது வழக்கம். ஒருமுறை தேநீர் அருந்தி முடித்ததும் தோட்டக் கதவைத் திறந்து அந்தக் கொய்யா மரத்தை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

நண்பர், அரக்கப் பறக்க ஓடி வந்து என்னை மறித்து நின்றார். என்னவென்று கேட்க வாயைத் திறக்கும் முன் சட்டென்று என் வாயைத் தன் கையால் மூடி, ஓசையின்றி மெதுவாக என்னை அழைத்துச் சென்றார்.

கொய்யா மரக்கிளையில் இலைகள் அடர்ந்த இடத்தைக் காற்றுகூடச் சலனமுறாத படிக்குச் சுட்டிக்காட்டினார். அங்கே பறவைக் கூடு ஒன்று தெரிந்தது. கூட்டில் பஞ்சும் சருகும் மெத்தென்று பரப்பப்பட்டிருந்தன.

அதற்குள் ஒரு கருங்குருவி எங்கள் தலைக்கு நான்கைந்தடி உயரத்தில் நிம்மதி குலைந்து பதற்றத்துடன் சிறகடித்துக்கொண்டிருந்தது. பறவையைப் பார்த்து ‘சாரி சாரி’ என்றபடி நண்பர் கையைப் பற்றி ஓசைப்படாமல் நடத்திக்கொண்டு தொலைவுக்கு வந்தபின் முகத்தில் பரவசம் படரச் சொன்னது இது.

பிறப்பு தரும் பரவசம்

கருங்குருவி அங்கே கூடு கட்டி முட்டையிட ஏற்பாடு நடந்து கொண்டிருக்கிறது. நாம் பார்த்தது ஆண்குருவி. இங்கே வழக்கமாகப் புகைபிடிப்பதை நிறுத்திவிட்டேன். கருங்குருவிகளின் கூடு கட்டல், காதல், கூடல் முயற்சிகளைப் பார்ப்பதில் கவனம் செலுத்துகிறேன்.

என் வாழ்நாளில் காணாத பேரின்பம் கிடைக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் பெண் குருவி முட்டையிடும். குஞ்சு பொரிக்கும். எல்லாவற்றையும் இடையூறில்லாமல் முழுதாகப் பார்த்துவிட வேண்டும் என்று உறுதி மேற்கொண்டுள்ளேன்.

இந்த நிகழ்வு தொடங்கிய நாளிலிருந்து கவிதாவே கருக்கொண்டுவிட்டது போன்ற பரவசத்துக்கு உள்ளாகிவிட்டேன் (கவிதா - அவருடைய மனைவி. மணமாகி ஏழாண்டுகள் குழந்தையில்லை.) இந்தக் கூட்டில் குஞ்சுகள் பொரிந்து பறக்கும்வரை நான் பாதுகாத்துவிட்டால் இந்த வீடும் குழந்தை தவழும் இடமாகிவிடும் என்று கண்கள் பனிக்கக் கூறினார்.

இத்தனைக்கும் அவர் ஒரு நாத்திகர். பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பழகும் அந்த நண்பரிடம் அன்று நான் கண்டது முன்னெப்போதும் கண்டிராத பரவச உணர்வு. மனிதர், விலங்குகள், புள்ளினங்கள் என்றில்லை, ஈசலுக்கும்கூட இனப்பெருக்கம் முக்கியமானதுதான்.

பொறுப்பைச் சுமக்கும் பெண்

நம் பிறப்பின் பயன் என்று முதலாவதாகவும், ஆக இறுதியாகவும் சொல்லத் தகுந்த விடை இன்னொரு உயிரை உயிர்ப்பித்துத் தருவதுதான். உயிரைப் பிறப்பித்தலின் கடமையும் பொறுப்பும் பெண்களுக்கே அதிகமாக இருக்கிறது. மற்ற பல உயிரினங்களில் பெரும்பாலானவை இப்பொறுப்பைச் சமமாகவே ஏற்றுக் கொண்டுள்ளன.

சிங்கத்தைக் காட்டின் அரசன் என்கிறோம். ஆனால், ஆண் சிங்கம் படுசோம்பேறி. செருகிய அதன் கண்களையும் வாய்க்கு வாய் விடும் கொட்டாவிகளையும் பார்த்தாலே தெரியும். இருந்தும் சிங்க இனத்தில் குட்டிகள் பிறந்தால் அவை தனித்து வேட்டைக்குத் தயாராகும்வரை அவற்றைப் பராமரிப்பது, பாதுகாப்பது, பழக்குவது அனைத்தும் ஆண் சிங்கத்தின் பொறுப்பு.

ஈன்ற மடியோடு தாய் அங்கிருந்து விலகிவிடுவாள். அவ்வப்போது வந்து பால் கொடுப்பதோடு பெண் சிங்கத்தின் கடமை முடிந்தது. ஆனால், மனித இனத்தில் பெற்றெடுத்த நாள் முதலாய்த் தனது கண் இறுதியாக மூடும் நொடிவரைக்கும் தன் பிள்ளைகளின் உணவுப் பொறுப்பைச் சுமந்துகொண்டிருக்கிறாள் தாய்.

நமக்கும் பங்கு உண்டு

பிள்ளை பெறுவதைப் பெண்ணின் முதன்மைத் தகுதியாகக் கருதும் சூழலில் பெண் தனித்து முடிவெடுக்கும் துணிவை அடையும்வரை அவளைப் பிள்ளைப் பேற்றுக்குத் தகுதியுடையவளாக வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உண்டு.

கர்ப்பப் பை. சினைப் பை, பெண்மை ஆகியவை பிள்ளைப் பேற்றுடன் மட்டுமே தொடர்புடையவை அல்ல; பெண்ணின் முழு ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை.

தற்கால வாழ்க்கை, சிந்தனை, உழைப்பு, அன்றாட இயக்கம் ஆகியன பெண்களுக்கு உதிரப் போக்கு நிகழும் பதின்மம் தொடங்கிக் கிட்டத்தட்ட ஐம்பது வயதுவரை பெரும் உடலியல், உளவியல் சிக்கலாகக் கூடுதல் சுமை அளிப்பதாக இருக்கின்றன.

அக்காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகள் கோபமாகவும் நரம்பியல் சிக்கலாகவும் மாறுவதை எல்லோரும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பெண்ணுடலைப் பாதுகாக்கும் விஷயத்தில் அவ்வுடலுக்கு உரியவருக்கு மட்டுமல்லாமல்; பெற்றோருக்கும் சமூகத்துக்கும் சம அளவிலான பங்கு உண்டு.

சமநிலைக் குலைவு

பெண், தன்னை அழகுபடுத்திக்கொள்வதைக் காட்டிலும் கூடுதலான அக்கறையை உடல்நலனில் காட்ட வேண்டிய நெருக்கடியான கட்டத்துக்குப் பெண்ணுடல் மாறிக் கொண்டிருக்கிறது. பஞ்ச பூதத் தத்துவ அடிப்படையில் பெண்ணுடல் நீராதிக்கம் உடையது.

அந்நீருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் ஏற்படும் நீரின் சமநிலைக் குலைவே பெண்ணுடல் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம். குறிப்பாக, பூப்பெய்திய ஓரிரு ஆண்டுகளில் உதிரப் போக்கில் சீரின்மை தொடங்கிவிடுகிறது.

உதிரப்போக்கின் சீரின்மை வெறும் பிள்ளைப் பேற்றுடன் நின்று விடுவதில்லை.அது நாளமுள்ள சுரப்பிகளிலும் நாளமில்லாச் சுரப்பிகளிலும் பெரும் நிலைத் தடுமாற்றத்தை உருவாக்குகிறது. முகம், நாடி உட்பட விரும்பத்தகாத பகுதிகளில் முடி வளரவே செய்கிறது. பெண்ணுடலின் நலம் என்பது சமூகம் கவனங்கொள்ள வேண்டிய பிரச்சினை என்றாலும், தன்னளவில் தவிர்க்கச் சாத்தியமானவை குறித்து வரும் வாரங்களில் விரிவாகப் பார்ப்போம்.

(தொடரும்...)

கட்டுரையாளர்,

உடல்நல எழுத்தாளர்

தொடர்புக்கு: kavipoppu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x