Published : 04 May 2019 08:04 PM
Last Updated : 04 May 2019 08:04 PM

சூழல் காப்போம்: கடைகளுக்கு இல்லையா கட்டுப்பாடு?

நான் என்னால் முடிந்தவரை பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து வருகிறேன். வெளியில் காபி, டீ குடிக்கும்போது, பிளாஸ்டிக் அல்லது காகிதக் குவளையில் கொடுத்தால் தவிர்த்துவிடுகிறேன். ஹோட்டலுக்கு உணவு வாங்கச் செல்லும் போது கையோடு பாத்திரங்களை எடுத்துச் செல்கிறேன்.

வீட்டில் பிளாஸ்டிக் தட்டுகளை அறவே ஒழித்துவிட்டோம். விருந்தினர்கள் வந்தால் வாழையிலையில் பரிமாறுகிறோம். சோறு வடிக்கவும் தண்ணீர் ஊற்றிவைக்கவும் மட்பாண்டங்களைப் பயன்படுத்துகிறேன்.

குழந்தைகளுக்குக் கொடுத்து அனுப்பும் மதிய உணவு சூடாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பெரும்பாலான பெற்றோர் ஹாட் பாக்ஸ் போன்ற பிளாஸ்டிக் டப்பாக்களில் போட்டுத் தருவார்கள். சூடாகக் கொடுப்பதைவிட பிளாஸ்டிக் டப்பாவை ஒழித்து ஆரோக்கியத்தைக் கொடுப்பதுதான் நல்லது. பெரும்பாலான கறிக்கடைகளில் இலைகளில் சுற்றித் தருகிறார்கள்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்பதில் முன்பைவிட மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். என்னுடைய மகளுக்கும் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கும்படி அறிவுறுத்தி வருகிறேன். வீட்டில் நம்மால் முடிந்த அளவுக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்துவருகிறோம். ஆனால் கடைகளில் கிடைக்கிறவற்றை எப்படிக் குறைப்பது?

பால் பாக்கெட், எண்ணெய், பிஸ்கட், சாக்லெட், பொடி வகைகள், மளிகைப் பொருட்கள் எனப் பல்வேறு பொருட்களும் பிளாஸ்டிக் பேப்பரில் அடைக்கப்பட்டே வருகின்றன. இதுபோன்ற அத்தியாவசியப் பொருட்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தால் மட்டுமே பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் சாத்தியம்.

-டி.ஜி. பூங்கோதை, சென்னை.

 

பிளாஸ்டிக் ஒழிப்பில் என் பங்கு

பிளாஸ்டிக் ஒழிப்புக்கு உதவும் வகையில் நீங்கள் பின்பற்றும் நடைமுறைச் செயல்பாட்டைத் தகுந்த ஒளிப்படங்களுடன் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். மின்னஞ்சலும் அனுப்பலாம். உங்கள் ஆலோசனை இயற்கையைப் பாதுகாப்பதுடன்  மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x