Published : 27 May 2019 11:37 am

Updated : 27 May 2019 11:37 am

 

Published : 27 May 2019 11:37 AM
Last Updated : 27 May 2019 11:37 AM

பாஜகவின் சரித்திர வெற்றி சாத்தியமானது எப்படி?

‘2014 தேர்தலில் மோடி அலை. ஆனால் 2019 தேர்தலில் மோடி எதிர்ப்பு அலை’ என்ற ஆரூடங்களை எல்லாம் பொய்யென நிரூபித்த தேர்தல் முடிவுகள் வரலாறு காணாத வெற்றியை பாஜகவுக்குத் தந்திருக்கிறது.

சொல்லப்போனால், சென்ற தேர்தலை விட இந்தத் தேர்தலில் அதிக எண்ணிக்கையில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற சரித்திரக் கட்சியாக பாஜக விசுவரூபம் எடுத்துள்ளது. இந்த வெற்றிக்குப் பல்வேறு காரணங்களை பல்வேறு தரப்பினர் கூறிவந்தாலும், பொருளாதாரம், வளர்ச்சி ஆகியவற்றின் பின்னணியில் பாஜகவின் வெற்றியைச் சற்றே ஆராய்வோம்.


ஊழல் கறை அறவே இல்லாத தலைமை, நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம், உலக நாடுகளிடம் பரஸ்பரம், குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு மருத்துவக் காப்பீடு, இட ஒதுக்கீட்டு சலுகை, மானியங்கள் நேரடியாகச் சென்றடையும் திட்டம், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும், “நாட்டின் வளர்ச்சியே பிரதான நோக்கம்” என்பதுதான் மோடி அரசின் உறுதிப்பாடு என்று மக்கள் புரிந்து வாக்களித்திருப்பது போல தெரிகிறது. இதற்கு முன் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக நான்கு முறை இருந்த மோடி “குஜராத் வளர்ச்சி” என்கிற ஒரேபிரதான மந்திரத்தை பிரயோகித்து மீண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார்.

நிறைவான திட்டங்கள்

ஆயூஷ்மான் பாரத் எனப்படும் 50 கோடி இந்தியர்களுக்கு பயனளிக்கும் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அளித்தது, உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ் கிராமப்புற பெண்களுக்கு குறிப்பாக பின் தங்கிய வகுப்பினருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு கொடுத்தது, ஸ்வச்பாரத் திட்டத்தின்கீழ் பல்வேறு கிராமங்களில் 5 கோடி குடும்பங்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுத்தது, நேரடி மானியத் திட்டத்தின் தொகையைப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தியது போன்றவை குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சங்கள்.

சமையல் எரிவாயு இணைப்பைத் தாமாக முன்வந்து பணக்காரர்கள் திருப்பி அளித்தால், அது ஏழைகளுக்கு உதவும் என்ற கோரிக்கை, நல்ல பலனைக் கொடுத்தது. சிறந்த முன்முயற்சியாகவும் பார்க்கப்பட்டது.

இந்தியா சற்றே முரண்பட்டிருந்த உறவுகளை புதுப்பித்த வகையில் சீனா, மாலத்தீவு, இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதார மற்றும் புவி சார்ந்த அரசியலில் தெற்காசிய மற்றும் மேற்காசிய நாடுகளின் உறவுமுறையை வலுப்படுத்தியதில் மோடி வெற்றிபெற்றார். அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்து வலுப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய நபரின், குறிப்பாக ஒரு இரும்பு மனிதரின் கைகளில் உள்ளதாக மக்கள் நம்புகின்றனர். இதனால் அண்டை நாடுகள் இந்தியாவை ஒரு வலுவான நாடாகப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ் ரயில்வே, துறைமுகங்கள், சாலை மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து, வாகனங்கள், சுற்றுலா, உயிரி தொழில்நுட்பம், கட்டுமானம், மின் உற்பத்தி சாதனங்கள், மின்னனு பொருட்கள் உற்பத்தி, இரசாயனம், இராணுவத் தளவாடங்கள், ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பம், மருந்துகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, சுரங்கங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், ஜவுளித் துறை, நலவாழ்வு, உணவு பதப்படுத்துதல், தோல் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், அனல் மின்சாரம் ஆகிய 25 துறைகளுக்கான முதலீடுகளை ஈர்த்து, இந்திய உற்பத்தித்துறையை மேம்படுத்தி அதன்மூலம் அதிக வேலைவாய்ப்பை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. மேலும் மோடி ஆட்சியில் நாட்டில் தொழில்களுக்கான கடன் பெறுவது எளிதாக்கப்பட்டதன் காரணமாக உள்நாட்டுக் கடன்கள் 50% அதிகரித்துள்ளன.

பொருளாதார சீர்திருத்தங்கள்

பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளில் முக்கியமான ஒன்று ஜிஎஸ்டி. பல்வேறு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாமல் இருந்த ஜிஎஸ்டியை அமல்படுத்தியது, திவால் சட்டம் (Insolvency in bankruptcy code), பினாமி சட்டம், கருப்புப்பண ஒழிப்புச்சட்டம், தாமாக முன்வந்து அறிவிக்கும் திட்டம் (Voluntary disclosure Scheme) போன்ற பல்வேறு பொருளாதார சீர்திருத்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடுவதாக அமைந்தன.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்கப் பொருளாதாரம் சுறுசுறுப்பாக இருப்பதாலும் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தி இருப்பதாலும் அதிபர் ட்ரம்ப் மீண்டும் ஆட்சியை பிடிக்க சிரமம் இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

எந்த ஒரு ஆட்சியிலும் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் மக்கள் மற்ற எந்த விஷயங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டார்கள். தங்களுக்கான வெற்றித் தலைவரை தக்கவைத்துக் கொள்வார்கள். இந்தியாவுக்கும் இது பொருந்தும். இந்தத் தேர்தல் வெற்றிக்கு மற்ற காரணங்களைவிட பொருளாதார சீர்த்திருத்தங்கள்தான் முக்கிய காரணம் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.

பணமதிப்பு நீக்கம் தேவையற்றது, ஜிஎஸ்டி சரியான முறையில் அமல் படுத்தவில்லை. இதனால் பல்வேறு குறுந்தொழில்கள் அழிந்து விட்டன, வேலைவாய்ப்பு அதிகம் ஏற்படுத்தப்படவில்லை என்பவை யெல்லாம் எதிர்கட்சிகள் கூறும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் முக்கிய

மானவையாகும். மோடி, சில ஆயிரம் கோடி செலவில், பன்னாட்டு விளம்பர நிறுவனங்கள் போட்டுத் தந்த பாதையில் பயணிக்கிறார் என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டன.

இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், மக்களிடம் வானொலி, தொலைக்காட்சி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதும், தேடிச் சென்று பேசுவதும் அவருக்கான தனித்த செல்வாக்கைப் பெருக்கியது. இதனால், மக்கள் இந்த ஆட்சியில் குறைகளைவிட நிறைகள் அதிகம் இருப்பதாக நம்பினர்.

அதன் பலனே இந்த தேர்தல் முடிவுகளில் எதிரொலித்துள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டில் ஜிஎஸ்டியை குறைந்தபட்ச சிரமங்களோடு நடைமுறைப்

படுத்தியதே மிகப்பெரிய வெற்றிதான். ஜிஎஸ்டி கவுன்சில் கிட்டத்தட்ட மாதம் ஒருமுறை கூடி இதிலுள்ள குறைகளை நீக்கி, செவ்வனே செயல்பட்டு வருவதால் அவ்வப்போது ஜிஎஸ்டியில் எழுந்த பிரச்சினைகள் எல்லாம் களையப்பட்டன. நீண்ட காலத்தில் ஜிஎஸ்டி மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தமாக மாறும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பங்குச்சந்தை மாற்றங்கள்

சமீபத்தில் கருத்துக் கணிப்புகள் வெளியான தினத்துக்கு அடுத்த நாளில் பங்குச்சந்தை 10 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை ஒரே நாளில் எட்டியது. இது முதலீட்டாளர்கள் இந்த ஆட்சியின் மீது வைத்திருந்த நம்பிக்கையின் அஸ்திவாரத்தை உறுதிப்படுத்தியது. நாடு வளர்ச்சிப் பாதையில் பயணிக்கிறது என்கிற நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் முடிவுகள் வெளியான தினத்தன்றும் பங்குச்சந்தை குறியீடு முதன்முறையாக புதிய உச்சமான 40 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து வர்த்தகமானது. பங்குசந்தையில் முதலீடுகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ரூ.80ஐ தாண்டும் என்ற யூகங்கள் இருந்த நிலையில், ரூ.70-க்குள் சமீப காலமாக தக்கவைத்திருப்பது நாட்டின் ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது.

சரி, தேர்தலில் அமோக வெற்றி பெற்றாகிவிட்டது. அடுத்து என்ன? இந்த வெற்றி கொடுத்துள்ள கூடுதலான ஐந்து ஆண்டுகளை இந்த அரசு எப்படி பயன்படுத்திக்கொள்ளப் போகிறது என்பதுதான் மக்களின் அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பொதுவாக ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட பல திட்டங்கள் கைவிடப்படவும், மாற்றியமைக்கப் படவும் அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தற்போது மீண்டும் பாஜகவின் ஆட்சியே தொடர்வதால் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு தொலைநோக்குத் திட்டங்கள் எந்தவிதமான தடையுமின்றி தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.

இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.

“வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே” என்ற பாரதியின் வரிகளை வரமாகக் கேட்டுப் பெற்றது போல புத்துணர்வுடன் மீண்டும் மோடி ஆட்சி அமைகிறது. மக்களது எதிர்ப்பார்ப்புகளும் அதிக அளவு அதிகரித்துள்ளன.

உலக நாடுகளும் இந்தியாவை உற்றுநோக்குகின்றனர். இந்தியாவின் முழு சக்தியை உணர்ந்து அதை வெளிக்கொண்டு வரும் ஆற்றல் பெற்ற ஆட்சியாக மோடி அரசு அமையுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

ஆடிட்டர் ஜி. கார்த்திகேயன்

karthikeyan.auditor@gmail.com



பாஜகவின் சரித்திர வெற்றிமோடி அலை2019 தேர்தல்மோடி எதிர்ப்பு அலைசர்ஜிக்கல் ஸ்ட்ரைக்நிறைவான திட்டங்கள்மேக் இன் இந்தியா திட்டம்பொருளாதார சீர்திருத்தங்கள்Voluntary disclosure Schemeபங்குச்சந்தை மாற்றங்கள்பாஜகவின் ஆட்சிஇடைக்கால பட்ஜெட்மருத்துவக் காப்பீடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x