Published : 27 May 2019 12:12 PM
Last Updated : 27 May 2019 12:12 PM

ஜிஎஸ்டி மோசடி: தப்பிப்பது எப்படி?

மூன்று வாடிக்கையாளர்களில் ஒருவர் மட்டுமே ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட வரிக் குறைப்பின் பலனை அடைவதாக நம்புகிறார். ஏனெனில் பலர் ஜிஎஸ்டி  பெயரில் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வழிகளையும் செயல்படுத்தி வருகின்றனர்.

ஜிஎஸ்டி கவுன்சிலின்கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய அதிக லாபத் தடுப்பு ஆணையத்தின் மூலமாக எடுக்கப்பட்ட ஆய்வுகளிலும் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டியில் நடக்கும் மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

பெரும்பாலான அதிக லாபம் ஈட்டும் வழக்குகளில் அடிப்படை குற்றச்சாட்டாக வைக்கப்படுவது, குறைவான ஜிஎஸ்டி வரம்புகளில் கிடைக்கும் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என்பதுதான். ஜிஎஸ்டி சட்டத்தின்படி வரிக் குறைப்பின் மூலமாக கிடைக்கும் பலனை தொழிலதிபர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்குப் பகிர்ந்து வழங்க வேண்டும். 

ஜிஎஸ்டியில் வரிக் குறைப்பு என்பது இரண்டு விதங்களில் நடைபெற்றது. ஒன்று  ஜிஎஸ்டிக்கு பிந்தைய வரியானது,ஜிஎஸ்டிக்கு முந்தைய வரியைக் காட்டிலும் குறைவாக இருந்தது. இரண்டாவது, ஆரம்பக்கட்ட ஜிஎஸ்டி விகிதத்தைக் காட்டிலும் மாற்றியமைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் குறைவாக இருந்தது.

அந்த வகையில் பல பொருட்கள் ஜிஎஸ்டி அமலுக்குப் பின் ஜிஎஸ்டிக்கு முந்தைய வரியை விடக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. அதேபோல் 2017 ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டதிலிருந்து ஜிஎஸ்டி வரம்புகள் பல முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக நவம்பர் 2017, ஜூலை 2018 மற்றும் ஜனவரி 2019 ஆகிய காலகட்டங்களில் பெரிய அளவில் வரி வரம்புகள் குறைக்கப்பட்டன. மேலும், ஜிஎஸ்டியில் உள்ளீட்டு வரி திரும்பப்பெறல் மூலம் கிடைக்கும் பலனையும் விற்பனையாளர் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

விற்பனையாளர் பொருட்களை வாங்கும் போது செலுத்திய வரியை, விற்பனையின் மீதான வரியைச் செலுத்தும்போது குறிப்பிட்டு திரும்பப்பெற்றுக்கொள்ள முடியும். எம்ஆர்பி பொருளின் அதிகபட்ச விற்பனை விலையின் மீதே ஜிஎஸ்டி வரி என்று பல இடங்களில் விற்பனையாளர்கள் வாங்குவது நடக்கிறது.

எம்ஆர்பி என்பது அனைத்துவிதமான வரிகளையும் உள்ளிடக்கியது. இதன் மீது உற்பத்தியாளரோ, விற்பனையாளரோ எந்தவித வரியும் வசூலிக்க முடியாது. அப்படி கூடுதலாக வாங்கினால் அது குற்றமாகும்.

சில நேரங்களில் விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக எம்ஆர்பி விலையில் தள்ளுபடி அறிவிப்பார்கள். அதன் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி கடைசியில் தள்ளுபடி செய்யப்பட்ட பிறகான விலைக்கு ஜிஎஸ்டியும் வசூலிப்பார்கள்.

இதுபோன்ற சமயங்களில் ரசீதில் வசூலிக்கப்பட்ட மொத்த விலையானது பொருளின் எம்ஆர்பி விலைக்கு நிகராக இருக்கிறதா என்பதைப் பாருங்கள். மேலும் விற்பனையாளர்கள் பொருளுக்கான ரசீதில் எம்ஆர்பி விலையை பொருளின் விலை, அதற்கான வரிகள் எவ்வளவு என தனித்தனியே பிரித்துக்காட்ட வேண்டும்.

காம்போசிஷன் திட்டம் என்பது ஜிஎஸ்டி நடைமுறையில் ஒரு பிரிவினருக்கு வழங்கப்படும் மாற்று ஏற்பாடு ஆகும். இது ஆண்டுக்கு ரூ. 1.5 கோடி வரை விற்பனை செய்யும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்குப் பொருந்தும். இவர்களுக்கான ஜிஎஸ்டி என்பது மிகவும் குறைவு.

உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்களுக்கு ஒரு சதவீதம் மட்டுமே. உணவகங்களுக்கு 5 சதவீதமும், சேவை தொழில்களுக்கு 6 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பலனை அடையும் இவர்கள், தங்களுடைய வரியை தங்களுடைய வருமானத்திலிருந்தே செலுத்த வேண்டும்.

மாறாக, வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டியின் பெயரில் கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது. அதாவது, காம்போசிஷன் திட்டத்தின் கீழ் இருப்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வரி எதுவும் வசூலிக்கக் கூடாது.

இந்த விவரம் அவர் வழங்கும் அத்தனை ரசீதிலும் இடம்பெற்றிருக்க வேண்டும். மேலும், வாடிக்கையாளர்களுக்குத் தெரியும் வகையில் விற்பனை இடத்தில், அலுவலகத்தில் மற்றும் பெயர் பலகையில் “காம்போசிஷன் திட்டத்தின் கீழ் செயல்படுகிறோம்” என்பதை குறிப்பிட வேண்டும். 

அப்படியான விற்பனையாளரிடமிருந்து நீங்கள் பொருட்கள் வாங்கும் போது பொருளின் விலைக்கு மேல் எந்த வரியும் கொடுக்காதீர்கள். காம்போசிஷன் திட்டத்தின்கீழ் இயங்கும் பல உணவகங்களில் வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டி வரி வசூலிக்கப் படுவதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன.

ஜிஎஸ்டி குறித்து விழிப்புணர்வு இல்லாத சாமான்யர்களின் அறியாமையைப் பயன்படுத்தி அதிக லாபம் பார்க்க நினைக்கும் பல விற்பனையாளர்கள், ஜிஎஸ்டியின்கீழ் தங்களைப் பதிவு செய்துகொள்ளாமலேயே வாடிக்கையாளர்களிடமிருந்து ஜிஎஸ்டி வசூலிக்கிறார்கள்.

ஆண்டுக்கு ரூ. 40 லட்சத்துக்கு மிகாமல் விற்பனை செய்பவர்கள் ஜிஎஸ்டியின்கீழ் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. எனவே, வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கும்போது ரசீதுகளை கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம். ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்திருந்தால் ரசீதுகளில் ஜிஎஸ்டி எண் குறிப்பிடப்பட்டிருக்கும்.

அதேபோல் மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி பகிர்மான விவரங்களும் காட்டப்பட்டிருக்கும். ஜிஎஸ்டி எண் 15 இலக்க எண்ணாகும். அதன் முதல் இரண்டு இலக்கங்கள் மாநிலத்தின் குறியீடு, அதற்கு அடுத்துள்ள 10 இலக்கங்கள் விற்பனையாளரின் பான் எண், அதை அடுத்து நிறுவனத்துக்கு ஒரு எண்ணும், அதைத் தொடர்ந்து ஒரு எழுத்தும், இறுதியாக ஒரு எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும்.

ஜிஎஸ்டி எண் சரியானதுதானா என்பதை services.gst.gov.in/services/searchtp என்ற இணையதளத்தில் சோதித்துப் பார்க்கலாம். உங்களுடைய விற்பனையாளர் ஜிஎஸ்டியின் பலனை உங்களுக்கு வழங்கவில்லை எனில், அதை உங்களால் நிரூபிக்க முடியும் எனில் நீங்கள் மத்திய மறைமுக வரிகள் ஆணையத்தின் இணையதளத்தில் www.cbic.gov.in உள்ள ‘MyGST’ என்ற பக்கத்தில் புகா

ரைப் பதிவு செய்யலாம். உங்களுடைய புகார் உண்மையென உறுதிசெய்த பின்னர் விற்பனையாளர் உங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி பலனை வட்டியோடு உங்களுக்குக் கிடைக்க வழி செய்யப்படும்.

ஜிஎஸ்டி ஹெல்ப்டெஸ்கிலும் புகார் தெரிவிக்கலாம்.  helpdesk@gst.gov.in மின்னஞ்சல் முகவரிக்கோ, @askGST_GoI என்ற ட்விட்டர் பக்கத்

திலோ, புகாரைப் பதிவு செய்யலாம். மேலும் நுகர்வோர் அமைச்சகம் தொடங்கியுள்ள லோக்கல் சர்க்கிள் என்ற நுகர்வோர் ஆன்லைன் கம்யூனிட்டி தளத்திலும் புகாரைப் பதிவு

செய்யலாம். கூடுதலாக 1800-11-4000 என்ற தேசிய நுகர்வோர் உதவி எண்ணுக்கும் அழைத்து புகார் தெரிவிக்கலாம்.அதேசமயம் ஜிஎஸ்டி பெயரில் நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள் என்று பின்னாளில் குமுறுவதைவிட விற்பனையாளரிடமிருந்து ரசீது பெறும்போதே அதை சரியாக கவனித்து அவரிடம் விளக்கம் கேட்டு உங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ளுவதே சிறந்தது. எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பதை ஜிஎஸ்டி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் ஜிஎஸ்

டியைப் புரிந்துகொள்ள ரசீதுகளில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள், அதற்கான விளக்கம், ஜிஎஸ்டி பதிவு எண், காம்போசிஷன் திட்டத்தின்கீழ் பதிவு செய்தவரா இல்லையா போன்ற அனைத்து விவரங்களும் உங்களுக்காக ஜிஎஸ்டி இணையதளத்தில் வழங்கப் பட்டுள்ளன.

சத்யா சொந்தானம்

satya.sontanam@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x