Published : 10 May 2019 11:06 AM
Last Updated : 10 May 2019 11:06 AM

தரைக்கு வந்த தாரகை 12: பொம்மைக் கல்யாணம்

“இவ்வளவு நாளாக நான் சொல்லிக்கொண்டு வந்த என் வாழ்க்கைக் சம்பவங்களில் ஒரு பொதுவான அம்சம் இருக்கிறதே கவனித்தீர்களா?” என்று கேட்டார் பானுமதி.நான் விழித்தேன்.

“நான் சாதாரண விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ரொம்பச் சாதாரணச் சம்பவங்கள், சாமானிய மனிதர்களை நாம் கவனிப்பதே கிடையாது.

உண்மையில் இவை தருகிற ஆனந்தத்துக்கு ஈடு இணையே கிடையாது. இப்படி ரொம்பச் சாதாரண விஷயங்களை நாம் ரசிக்கக் கற்றுக்கொண்டால் பெரிய விஷயங்களுக்கு ஏங்க வேண்டிய தேவையே இருக்காது! இயற்கை இப்படி நம்மிடம் ஏராளமான விஷயங்களைக் கொட்டி வைத்திருக்கிறது.

கடிதத்தில் வந்த அழைப்பு

நான் அமெரிக்கா போயிருந்தபோது என் பேரக் குழந்தைகள் பனிக்கட்டிகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

ஆஹா! அவர்களின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி! பனிக்கட்டிகளுக்கும் பஞ்சமில்லை. அவர்களின் மகிழ்ச்சிக்கும் பஞ்சமில்லை! என்ன எழுத்தாளர் சார் நான் சொல்றது சரிதானே?” பானுமதி அம்மையார் சிரித்தார்.

“குச்சு வீடுதான். ஆனால், சொந்தமாக நீல வான் உண்டே!” என்ற கவிஞர் திருலோக சீதாராமின் கவிதையை நினைத்துக்கொண்டேன். பானுமதி தொடர்ந்தார்.

அப்பா உடம்பு தேறிய உடன் பம்பாயிலிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்தது. அவருடைய நண்பர்தான் எழுதியிருந்தார். கடிதம் இப்படிப் போயிற்று.

அன்புள்ள வெங்கட சுப்பையா, இங்கே பம்பாயில் பிரபல டைரக்டர் பி. புல்லையா ‘தர்மபத்தினி’ என்ற படம் எடுக்கிறார். அதில் பானுமதி கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார். சம்மதமானால் உடனே வரவும்.

அப்பா யோசனையில் ஆழ்ந்தார். இந்த பி. புல்லையா, சி.புல்லையா போன்று பொறுமைசாலி இல்லை. முன்கோபக்காரர். படப்பிடிப்பின்போது நடிகர்களை மிகவும் மோசமாகத் திட்டுவாராம்.

அப்பா ஒரு நிபந்தனை விதித்தார். “என் மகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்” என்ற நிபந்தனை ஏற்கப்பட்டது. அப்பா, அம்மாவுடன் பம்பாய் போய்ச் சேர்ந்தோம்.

புல்லையா சந்தேகம்

பம்பாய் ஸ்டேஷனுக்கு கார் வந்தது. கார் புறப்படுகிற நேரம் “டிரைவர் கொஞ்சம் நில்லப்பா” இன்னும் எடுத்து வைக்க வேண்டிய லக்கேஜ் இருக்கு என்றேன்.

அப்பா டிரைவரை வியப்புடன் பார்த்துவிட்டு, “அம்மா! அவர்தான் டைரக்டர் பி.புல்லையா!” என்றார் என்னிடம். நீங்கள் இவ்வளவு எளிமையாக இருப்பீர்கள் என்று தெரியாமல் போய்விட்டது என்றார் மன்னிப்பு கோரும் பாவனையில்.

புல்லையா சிரித்துவிட்டு “உங்களுக்கு என்னைப் பற்றிச் சந்தேகம் தீர்ந்துவிட்டது அல்லவா. அது போதும்” என்றார்.

நாங்கள் தங்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தோம். அங்கே என் வயதுகொண்ட பெண் என்னிடம் ஓடிவந்து உன் பெயர் பானுமதிதானே? இந்தப் படத்தில் உன் மாமனாராக நடிக்கப் போகிறவர் என் அப்பாதான்! என் பெயர் நாகமணி என்று சொல்லிவிட்டு நான் கேட்காமலேயே பல விஷயங்களையும் என்னிடம் கொட்டித் தீர்த்தாள்!.

பிறகு ஓடி விட்டாள். இதற்குள் என் அம்மா குளித்துவிட்டு பூஜைக்குத் தயாராகிவிட்டார். எங்கிருந்தாவது பூக்கள் கொண்டுவருமாறு என்னிடம் சொன்னார்.

நான் அறையைவிட்டு வெளியே வந்தேன். பக்கத்து அறையிலிருந்து நாகமணி என் பின்னாலேயே ஓடிவந்தாள்.

“ஏ பொண்ணே! நில்லு எங்கே போறே?” என்றாள்.

“அம்மா பூஜைக்கு பூ கேட்டாங்க. இங்கே ஏதாவது கிடைக்குமா?”

“பூ வேண்டுமானால் டவுனுக்குத்தான் போகணும்!. இதோ பக்கத்தில்தான் அக்கா சாஹிப் பங்களா இருக்கிறது. அங்கே ஒரு பூந்தோட்டம் இருக்கு. அதில் பெருசு பெருசான ரோஜாப்பூக்கள் பூத்திருக்கு. நாம் போய்த் திருட்டுத்தனமாகப் பறித்துக்கொண்டு வரலாம்.

அக்கா சாஹிப் யார் தெரியுமா? அவர்தான் ‘தர்மபத்தினி’ படம் எடுக்கும் ஸ்டுடியோ சொந்தக்காரர். அவர் பெண் ஷாலினி பெயரைத்தான் ஸ்டுடியோவுக்கு வைத்திருக்கிறார். நீ வந்தால் அந்த பங்களாவைக் காட்டுகிறேன். நாம் ரோஜாப் பூக்களை யாருக்கும் தெரியாமல் பறித்துவரலாம்” என்றாள்.

இப்படித் திருட்டுதனமாக ரோஜாப்பூக்களைப் பறிக்க எனக்குப் பிடிக்கவில்லை.

விளையாட்டுப் பொம்மைகள்

“வேண்டாம் நாகமணி. இங்கே இருக்கிற ஏதோ காட்டுப்பூக்கள் கொஞ்சம் பறிச்சுட்டுப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அங்கே ஏரிக்கரை ஓரம் பூத்திருக்கும் மஞ்சள் அரளிப் பூக்களைப் பறித்துக் கொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்தேன்.

பொம்மைக்-கல்யாணம்

நானும் நாகமணியும் அந்த ஏரிக்கரைக்கு வேடிக்கை பார்க்கப் போனோம்.

அங்கிருந்து ஷாலினி ஸ்டுடியோ தெரிந்தது. அக்கா சாஹிப் பங்களா, கோலாப்பூர் நகரம் எல்லாம் தெரிந்தன. அந்தக் காட்சி என்னுள் உறங்கிக்கொண்டிருந்த ஓவிய ஆர்வத்தைத் தூண்டிவிட்டது. அதை அப்படியே படமாக வரைய கைகள் பரபரத்தன.

(பல ஆண்டுகள் கழித்து பேயர்ல் எஸ்.பக் எழுதிய ‘எனது பல்வேறு உலகங்கள்’ என்ற புத்தகத்தைத் தெலுங்கில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தபோது இயற்கையின் அழகை அவர் அவ்வளவு அற்புதமாக விவரித்திருப்பதற்கு அவர் கண்ட காட்சியே காரணம் என்று உணர்ந்தேன்) அப்போது நான் கோலாபூரைத்தான் நினைத்துக் கொண்டேன்.

எங்கே பார்த்தாலும் மாமரங்கள், ஆலமரங்கள். பெயர் தெரியாத பிரம்மாண்ட விருட்சங்கள். விதவிதமான செடிகொடிகள்.

நான் கையோடு கொண்டுபோயிருந்த சிறு பெட்டியைத் திறந்து நாகமணிக்குக் காட்டினேன்.

“ஹையா! பொம்மைக் கல்யாண விளையாட்டுப் பொம்மைகள்” என்று நாகமணி குதித்தாள்.

(அந்தக் காலத்தில் ஆந்திராவைச் சேர்ந்த சிறுமிகள் பொம்மைக் கல்யாண விளையாட்டில் மிகவும் ஆர்வம் காட்டினார்கள்)

விளையாட ஆசை

“நான்தான் பெண் வீட்டு பார்ட்டியாம். நீ மாப்பிள்ளை வீட்டாராம். வரதட்சிணை தர முடியாது. நாங்கள் ஏழைகள். பெண்ணுக்கு எங்களால் முடிந்ததைப் போட்டு அனுப்புகிறோம்” என்றாள் நாகமணி, பாட்டி மாதிரி.

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. ‘வரவிக்ரேயம்’ கதைதான் நினைவுக்கு வந்தது.

“எனக்கு வரதட்சிணை வேண்டாம்! வரதட்சிணை கொடுப்பவர்களும் வேண்டாம்! என்றேன் நெஞ்சை நிமிர்த்தி.

“ஏய்! இது பொம்மைக் கல்யாணம்!” என்று சிரித்தாள் நாகமணி.

நாங்கள் புறப்பட்டோம். “மறுபடி எப்போது பொம்மைக் கல்யாணம் விளையாடலாம்?” என்று கேட்டேன்.

“ஏய், இங்கே பொம்மைக் கல்யாணம் விளையாட வந்தாயா? சினிமாவில் நடிக்க வந்தாயா என்று கேலிசெய்தாள் நாகமணி.

“ஆமாம்! நாளைக்கு ஷூட்டிங் இருக்கில்ல.”

நாங்கள் அறைக்குத் திரும்பினோம். அப்போது புல்லையா அனுப்பியதாக ஒரு ஆள் வந்தார். நாளைக்கு ஷூட்டிங் வைத்துக்கொள்ளலாமா என்று டைரக்டர் கேட்டதாகச் சொன்னார்.

“இதுவரை எடுத்த படத்தை” ரஷ் பார்த்துவிட்டு அதில் என் மகளின் கதாபாத்திரம் எப்படிச் செய்ய வேண்டும் என்று பார்க்க வேண்டி இருக்கு. நாளை மறுநாள் வைத்துக் கொள்ளலாமே” என்றார் அப்பா.

நான் நாகமணியின் அறைக்கு ஓடினேன்.

“நாகமணி! நாளைக்கு ஷூட்டிங் இல்லை!. நாளைக்குப் பொம்மைக் கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டேன்.

பானுமதி அம்மையார் வீட்டு காட்சி அலமாரியில் வைக்கப்பட்டிருந்த இரண்டு ராஜாராணி பொம்மைகளும் அம்மா சொல்வதை ஆமோதிப்பது போல் தலையாட்டின.

(தாரகை ஒளிரும்)

கட்டுரையாளர் தொடர்புக்கு:- thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x