Published : 05 May 2019 09:56 AM
Last Updated : 05 May 2019 09:56 AM

படிப்போம் பகிர்வோம்: பெரியார் போட்ட பாதை

திருமணம் முடிந்து கணவருடன் தனிக்குடித்தனம் சென்ற வீட்டில், அவர் தன் புத்தகங்களை அலமாரியில் அடுக்கியபோது உதவி மட்டுமே செய்தேன். மற்றபடி புத்தங்களைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. வீட்டுவேலை செய்வது, நேரம் கிடைத்தால் தொலைக்காட்சி பார்ப்பது எனப் பொழுதைக் கழித்தேன்.

சில நாட்கள் கழித்து, “அலமாரியில் என்னென்ன புத்தகங்கள் உள்ளன எனப் பார்த்தாயா? அவற்றை சும்மா எடுத்தாவது பார்த்தாயா?” எனக் கணவர் கேட்டார். வாசிப்பில் ஆர்வம் இல்லை எனச் சொன்னேன். அவரோ விடுவதாக இல்லை. தொலைக்காட்சி நம் கண்களை நிறைக்குமே தவிர, சிந்தனைத் தளத்தை விரிக்காது; சுய சிந்தனைக்கும் அதில் வழியில்லை என்றார். வாசிப்புதான் சிந்தனையைச் செழிக்கவைக்கும் என்று சொன்னதோடு என்னை முயன்றுபார்க்கும்படியும் சொன்னார்.

தந்தை பெரியார் எழுதிய ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகம்தான் அவர் எனக்கு முதன்முதலில் கொடுத்தது. முதலில் படித்தபோது அதிலிருந்த கருத்துகள் எனக்குப் புரியவில்லை. மீண்டும் வாசித்தபோது மூடிக்கிடந்த சிந்தனைக் கதவுகள் திறந்ததைப் போல் உணர்ந்தேன். மனம் விசாலமடைந்தது. என் வாழ்வின் முக்கியமான தருணம் அது.

பெரியார் தந்த உந்துதலில் அடுத்தடுத்துப் பல புத்தகங்களைத் தேடித் தேடி வாசித்தேன். மு.வரதராசனார் தொடங்கி கல்கி, புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், ஜெயகாந்தன், இந்துமதி, வாஸந்தி, சிவசங்கரி, சுஜாதா, பிரபஞ்சன் என வாசிப்புத் தளம் விரிவடைந்தது. பகல் பொழுதுகள் பயனுள்ளவையாயின.

வாசிப்பில் அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை என் கணவர் தீர்த்துவைப்பார். திருமண நாள், பிறந்த நாள் போன்ற கொண்டாட்டங்களின்போது எனக்குப் புத்தகங்களையே பரிசாகத் தருவார். சென்னைப் புத்தகக்காட்சிக்கு என்னை அழைத்துச் சென்றபோது புதியதோர் உலகுக்குள் நுழைந்த அனுபவம்.

துணிக்கடை, நகைக்கடை, திரையரங்கு, கோயில்கள் போன்றவற்றுக்கு மட்டுமே சென்றுவந்த எனக்குப் புத்தகங்களை வாங்குவதற்கென்று வந்துகுவிந்த மனிதர்களையும் புத்தக வேட்டைக்காகக் கையில் பையுடனும் வயிற்றில் பசியுடனும் அலையும் என் கணவரையும் பார்க்கப் பார்க்க பிரம்மிப்பாக இருந்தது.

அதற்குப் பிறகு நானும் வாசிப்புலகில் நுழைந்துவிட்டேன். வாசிப்பு என் சிந்தனைப் போக்கை மாற்றியதோடு வாழ்க்கையை அணுகும் விதத்தையும் மாற்றியமைத்தது. சக மனிதர்களைப் புரிந்துகொண்டு அன்பு செய்ய உதவியது.

தற்போது எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாருநிவேதிதா, வண்ணதாசன், வண்ணநிலவன், ச. தமிழ்ச்செல்வன் ஆகியோரது படைப்புகளைப் படித்துக்கொண்டிருக்கிறேன். சேகுவேராவைப் பற்றி அவருடைய மனைவி அலெய்டா மார்ச் எழுதிய, ‘என் நினைவில் சே - சேகுவேராவுடன் என் வாழ்க்கை’ என்ற புத்தகத்தைப் படித்துவருகிறேன். இதை ஆங்கிலம் வழித் தமிழில் நேர்த்தியாக மொழிபெயர்த்திருக்கிறார் அ. மங்கை.

வாசிப்பு அனுபவம் என்னை மென்மேலும் பண்படுத்தும் என நம்புகிறேன். என் மனக் காயங்களை ஆற்றுப்படுத்தி, உள்ளத்தில் மனிதநேயத்தை மலரச் செய்யும் என்ற நம்பிக்கையோடு வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

வி. கவிதா, சேலம்.

நீங்களும் சொல்லுங்களேன்

தோழிகளே, இந்தப் பகுதியில் நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். காய்கறி வாங்கிய அனுபவம் முதல் கடைசியாகப் படித்த புத்தகம்வரை எதுவாக இருந்தாலும் எங்களுக்கு எழுதுங்கள். நம் அனுபவம் அடுத்தவருக்குப் பாடமாக அமையலாம். குழம்பியிருக்கும் மனத்துக்குத் தெளிவைத் தரலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x