Published : 27 May 2019 11:59 AM
Last Updated : 27 May 2019 11:59 AM

எண்ணித் துணிக!: எது ஸ்டார்ட் அப்?

இந்தியாவில் வருடத்திற்கு ஆயிரமாயிரம் தொழில்கள் தொடங்கப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் ஸ்டார்ட் அப்ஸ் லிஸ்டில் சேர்க்கமுடியாது. ஒரு சின்ன தெருவில் சின்ன சலூன் திறந்து அப்பகுதி மக்களை மட்டும் வாடிக்கையாளர்களாக பெற்று வருவது சின்ன தொழில். நல்ல தொழிலும் கூட.

ஆனால் அதை விரிவாக்காமல், அது வளர்ச்சியடையாமல் இருக்கும் பட்சத்தில் அதை ஸ்டார்ட் அப் என்பதற்கில்லை. ஆனால் அதே சலூனை பிராண்ட் செய்து, வித்தியாசப்படுத்தி, சிஸ்டங்களை நேர்படுத்தி ஃபிரான்சைசிங் மூலம் நூற்றுக்கணக்கான இடங்களில் கிளை திறந்து  அதைவிட அதிகமாக பணியாளர்களை அமர்த்தி விஸ்தாரமாய் வளரும் ‘சலூன் டிலைட்’ ஒரு ஸ்டார்ட் அப்.

சக்சஸ்ஃபுல் ஸ்டார்ட் அப் துவங்க மூன்று விஷயங்கள் முக்கியம். மக்களுக்குத் தேவையான பொருளை தேடிப்பிடித்து தயாரிப்பது, ஸ்மார்ட்டாக உழைக்கும் ஊழியர்களைப் பெறுவது, தேவையான அளவில் முதலீடு செய்து தோதான செலவுகளை மட்டுமே செய்வது. வெற்றி பெறும் ஸ்டார்ட் அப்ஸ் இந்த மூன்றையும்தான் செவ்வனே செய்கின்றன. பல ஸ்டார்ட் அப் தோல்வியடையக் காரணம் இம்மூன்றில் ஏதாவது ஒன்றில் கோட்டைவிடுவதுதான்.

அமரர் சுஜாதா பாணியில் கூற வேண்டுமென்றால் இம்மூன்றையும் செய்வது அப்படியொன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல. செய்ய சற்று பிரயத்தனம் வேண்டும். ஆனால் செய்ய முடியும். பலர் செய்திருக்கிறார்கள். வெற்றி பெற்று நமக்கு முன்மாதிரியாக ஆகியிருக்கிறார்கள். செய்யாமல் தோற்றவர்கள் நமக்குப் பாடமாகியிருக்கிறார்கள்!

ஸ்டார்ட் அப் தொடங்க ஐன்ஸ்டீனின் புத்திசாலித்தனம் தேவையில்லை. மக்களின் சாதாரண தேவையை தெளிவாகப் புரிந்துகொண்டு அதற்கு ஸ்மார்ட்டான தீர்வு கண்டாலே போதும். இல்லை இருக்கும் தீர்வை விட கொஞ்சம் பெட்டரான தீர்வு கண்டால் எதேஷ்டம். உலகின் சிறந்த ஸ்டார்ட் அப்ஸ் இதைத்தான் செய்தன. செய்கின்றன. ஒரு உதாரணம் தருகிறேன்.

எதற்கு செய்வது என்று தெரியாமல், புரிந்தோ புரியாமலோ எல்லாரும் கூறுகிறார்கள் என்று திருமணம் செய்துகொள்கிறோம். கண்ணும் கண்ணும் கலந்து, காதல் வயப்பட்டு கருத்தொருமித்து கல்யாணம் செய்துகொள்ளும் கதையெல்லாம் மற்றவர்களுக்குத்தான் நடந்து தொலைக்கிறது. பலருக்கு அப்பாக்கியம் வாய்ப்பதில்லை. சுயம்வரம் சென்று சுமாரான பெண்ணை பெறும் வழியும் இருப்பதில்லை.

அதனால்தான் கல்யாண புரோக்கர்களைத் தேடி அலைகிறோம். பாதி வாழ்க்கையை துணை தேடுவதிலேயே கழிக்கிறோம். பேப்பரில் விளம்பரம் தந்து விதிவிட்ட வழி என்று வாழ்ந்த காலத்தில் விடியலாய் பிறந்து நமக்கு வழிகாட்டிய ‘பாரத் மேட்ரிமோனி’ ஒரு சக்சஸ் ஸ்டார்ட் அப். வாழ்க்கைத் துணையை இணையம் மூலம் தேட இந்த கம்பெனி செய்தது அப்படியொன்றும் பெரிய தொழில்நுட்ப சாதனை இல்லை.

வெப்ஸைட் திறந்து நம்மை பற்றிய தகவல்களை அதில் பதிய வைத்து, பலரையும் பார்க்க வைத்து அதில் பிடித்தவற்றை தேடிப் பிடித்து கரம் பிடிக்க ஒரு ஈசியான வழியை காட்டியது. காசு பண்ணியது. பண்ணுகிறது. பண்ணப் போகிறது!

அதோடு நின்றதா இக்கம்பெனி. பதமாக பிறந்து விதமாக வளர்ந்து இன்று ஸ்டேட் வாரியாக, மதம் வாரியாக, ஜாதி வாரியாக பிரிந்து, சீமை வரை விரிந்து அதுவும் போதாதென்று `மேட்ரிமோனி பஜார்’, ’மேட்ரிமோனி மண்டபங்கள்’, ‘மேட்ரிமோனி ஃபோட்டோகிராஃபி’, என்று திருமணம் சம்பந்தப்பட்ட புது தொழில்கள் தொடங்கி தான் நடத்தி வைத்த திருமணங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ இக்கம்பெனி படு சௌக்கியமாக வெற்றி பெற்றிருக்கிறது.

ஸ்டார்ட் அப்ஸ் மகத்துவம் இதுவே! ஸ்டார்ட் அப் ஐடியா கிடைக்க பெரியதாக எதுவும் செய்ய வேண்டாம். மக்களைப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் தேவையை அறிந்துகொள்ளுங்கள்.

அதைத் தீர்க்கும் வழியை தெரிந்து கொள்ளுங்கள். இதை சாமர்த்தியமாக செய்தால் ஸ்டார்ட் அப் ரெடி. ஸ்டார்ட் அப்ஸ் பற்றி, தொழில் தொடங்குவது பற்றி இதுபோன்ற கட்டுரைகள் புத்தகங்கள் படித்தால் போதுமா என்று சிலர் கேட்கிறார்கள். கதை புத்தகங்கள் படிப்பதால் மட்டுமே கதை எழுத வராது.

டீவியில் மேட்ச் பார்ப்பதால் மட்டுமே கிரிக்கெட் ஆடிவிட முடியாது. உங்களுக்குள் ஒரு தீ கொழுந்துவிட்டு எரிய வேண்டும். இக்கட்டுரை, புத்தகம் என்றில்லை, எதுவுமே உங்களுக்கான வெற்றி ஃபார்முலாவைத் தராது. அதை நீங்கள்தான் தேட வேண்டும். உங்கள் தேடலை இவை எளிதாக்க உதவலாம். அவ்வளவே. அதைத்தான் இப்பகுதி செய்ய நினைக்கிறது!

வெளியிலிருந்து பார்க்கும்போது ஸ்டார்ட் அப்ஸ் உங்களுக்குப் பெரிய அப்பாட்டக்கராக தோன்றும். தொழிலதிபர்களின் வெற்றி புரியாத மர்மமாகக் கூட திகழும். இப்படியெல்லாம் நமக்கு பிசினஸ் செய்ய வருமா என்று சற்று பயமாக கூட இருக்கும்.

நமக்கு இதெல்லாம் சாத்தியப்படுமா என்று ஒருவித விரக்தி கூட வரும். மீண்டும் சொல்கிறேன். ஸ்டார்ட் அப் ஒரு பெரிய மேட்டரே இல்லை. மக்களுக்குத் தேவையான ஒரு பொருளை செய்து, அதை அவர்களிடமே நல்ல விலையில் விற்று, பிசினஸை பரப்பி பரவலாக்கி, வரவை விட செலவை குறைக்க முடிந்தால் போதும். இதை உங்களாலும் செய்ய முடியும்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x