

எல்.ஐ.சி. என அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் தென்மண்டலம் 1,257 பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளை (Apprentice Development Officers) போட்டித் தேர்வு மூலம் தேர்வுசெய்து பணியமர்த்த இருக்கிறது.
எல்.ஐ.சி. பாலிசி வர்த்தகப் பணிகளை மேற்பார்வை செய்வது வளர்ச்சி அதிகாரிகளின் தலையாய பணி. எல்.ஐ.சி. ஏஜெண்டுகளை நியமிப்பது, அவர்களுக்கு முறையாகப் பயிற்சி அளிப்பது, பணியின்போது ஏஜெண்டுகளுக்குத் தேவையான ஆலோசனை, உதவிகள் செய்வது போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.
தகுதி
பொதுப் பிரிவுக்கான காலியிடங்களுக்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். காப்பீட்டு வர்த்தகத்தில் அனுபவம் உடையவர்கள், எம்.பி.ஏ. பட்டதாரிகள், மேலாண்மையில் டிப்ளமா முடித்தவர்கள் போன்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும், ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர்.
தேர்வுமுறை
எழுத்துத் தேர்வில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு உண்டு. இரண்டுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வில் ரீசனிங், அடிப்படை கணிதத் திறன், பொது ஆங்கிலம் ஆகிய 3 பகுதிகளில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் 100 கேள்விகள் இடம்பெறும்.
தேர்வு 1 மணி நேரம் நடைபெறும். முதல்நிலைத் தேர்விலிருந்து, ஒரு காலியிடத்துக்கு 20 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்யப்படுவர்.
முதன்மைத் தேர்வில் ரீசனிங், அடிப்படை கணிதம், பொது அறிவ, பொது ஆங்கிலம், காப்பீடு, நிதி விழிப்புணர்வு (ஆயுள்காப்பீடு, நிதிச்சேவை) ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 150 கேள்விகள் கேட்கப்படும். இதற்கு 150 மதிப்பெண், இரண்டரை மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும்.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். இதற்கு 37 மதிப்பெண். இறுதியாக முதன்மைத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும்.
ஊதிய விவரம்
தேர்வுசெய்யப்படும் பயிற்சி வளர்ச்சி அதிகாரிகள் ரூ.21,865 அடிப்படை ஊதியத்தில் பணியமர்த்தப்படுவர். அவர்களுக்கு ஆரம்ப நிலையில் பல்வேறு படிகளைச் சேர்த்து ரூ.37,358 ஊதியம் கிடைக்கும். மேலும், பங்களிப்பு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, மருத்துவ உதவி, குழு காப்பீடு, வாகன முன்பணம், செயல்பாடு சார்ந்த ஊக்க ஊதியம் எனப் பல்வேறு பணப் பயன்களும் கூடுதலாகக் கிடைக்கும்.
தகுதியுடைய பட்டதாரிகள் எல்.ஐ.சி. இணையதளத்தை (www.licindia.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையம், பாடத்திட்டம், சம்பளம், இட ஒதுக்கீடு வாரியான காலியிடங்கள், பணிநியமன முறை உள்ளிட்ட விவரங்களை எல்.ஐ.சி. இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
முக்கிய தேதிகள்: விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 9 ஜூன் 2019 ஹால்டிக்கெட் பதிவிறக்கம்: 29 ஜூன் 2019 முதல்நிலைத் தேர்வு: 6 மற்றும் 13 ஜூலை 2019 முதன்மைத் தேர்வு: 10 ஆகஸ்டு 2019 |