

இலங்கைக் குண்டுவெடிப்பு: 253 பேர் பலி
ஏப்ரல் 21 இலங்கையில் கொலம்போ, நிகோம்போ உள்ளிட்ட பகுதிகளிலுள்ள தேவாலயங்கள், ஹோட்டல்களில் 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. இந்தக் குண்டு வெடிப்புகளில் இந்தியர்கள் 11 பேர் உள்பட 253 பேர் பலியானார்கள். பலி எண்ணிக்கையில் மாறுபட்ட தகவல் வந்த நிலையில், அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் இந்த எண்ணிக்கையை உறுதி செய்திருக்கிறது. 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மூன்றாவது கட்டத் தேர்தல்
ஏப்ரல் 23 மக்களவைத் தேர்தலின் மூன்றாவது கட்டத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. கேரளம், கர்நாடகம், குஜராத், சட்டீஸ்கர், பிஹார், அசாம், கோவா, மஹாராஷ்டிரம், ஒடிஷா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களைச் சேர்ந்த 117 தொகுதிகளில் இத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக அசாமில் 80.73 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 79.63 சதவீத வாக்குகளும் பதிவாயின.
தங்கம் வென்ற கோமதி
ஏப்ரல் 23 தோஹாவில் நடைபெற்ற 23-வது
ஆசியத் தடகள சாம்பியன் ஷிப் போட்டிகளில், மகளிர் 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதன்முறையாக இந்தியாவின் சார்பில் தங்கப் பதக்கத்தை வென்றார் கோமதி மாரிமுத்து. இவர் திருச்சியைச் சேர்ந்தவர். இந்த ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், இந்தியா 17 பதக்கங்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது.
திறன் போட்டியிடும் தன்மையில் 80-வது இடம்
ஏப்ரல் 23 உலகளாவிய திறன் போட்டியிடும் தன்மைப் பட்டியல்-2019 (Global Talent Competitive Index) வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பட்டியலில், சென்ற ஆண்டைப் போலவே சுவிட்சர்லாந்து முதல் இடத்தில் இருக்கிறது. சிங்கப்பூரும் அமெரிக்காவும் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. 125 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் இந்தியா 80-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.
ராணா தாஸ்குப்தாவுக்கு தாகூர் விருது
ஏப்ரல் 23 பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளர் ராணா தாஸ்குப்தாவின் ‘சோலோ’ (2010) நாவலுக்காக ‘ரவீந்தரநாத் தாகூர் இலக்கிய பரிசு’ (10,000 அமெரிக்க டாலர் – ரூபாய் மதிப்பில் சுமார் 7 லட்சம், ஒரு தாகூர் சிலை, பாராட்டுச் சான்றிதழ்) அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிவு, பொருள் இருப்பின் தோல்வி பற்றி இவருடைய ‘சோலோ’ நாவல் பதிவுசெய்திருந்தது.
10 லட்சம் உயிரினங்களுக்கு ஆபத்து
ஏப்ரல் 23 மனிதர்களின் செயல்பாடுகளால் உலகில் உள்ள பத்து லட்சம் உயிரினங்கள் அழிவில் இருப்பதாக ஐ.நா. அறிக்கை தெரிவிக்கிறது. காற்று மாசு, குடிநீர்ப் பற்றாக்குறை, கரியமில வாயு
உலகின் 130 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதகள் பாரீஸ் நகரில் ஐ.நா. வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை தொடர்பாக விவாதித்தனர். 1,800 பக்கத்தில் அமைந்திருக்கும் இந்த அறிக்கை மே 6 அன்று வெளியிடப்படவிருக்கிறது.
ஃபேஸ்புக் பயனர்கள் 238 கோடி
ஏப்ரல் 24 உலகில் ஃபேஸ்புக் பயனாளிகளின் எண்ணிக்கை இந்தக் காலாண்டில் 238 கோடியாக உயர்ந்திருக்கிறது. அன்றாடம் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட 8 சதவீதம் அதிகரித்து 156 கோடியாகியிருக்கிறது. நாள்தோறும் 50 கோடிப் பேர் ஃபேஸ்புக் ஸ்டோரீ’ஸை பயன்படுத்துவதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் இயக்குநர் மார்க் ஸக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார்.
ஏப்ரல் 26 பிரதமர் மோடி பயணித்த ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பார்வையாளர் முகமது மோசினை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்ட தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நிறுத்திவைத்துள்ளது.
இதையடுத்து முகமது மோசினை அவருடைய சொந்த மாநிலமான கர்நாடகவுக்கு செல்ல தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஏப்.16 அன்று ஒடிஷாவுக்கு மோடி பிரசாரத்துக்கு சென்றபோது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டிருக்கிறதா என அவருடைய ஹெலிகாப்டரை சோதனையிட அதிகாரி முகமது மோசின் உத்தரவிட்டார்.