Published : 28 Apr 2019 11:08 am

Updated : 28 Apr 2019 11:08 am

 

Published : 28 Apr 2019 11:08 AM
Last Updated : 28 Apr 2019 11:08 AM

அமைதி அறைகூவல்: பெண்களே ஒன்றுசேருங்கள்!

பெண்கள் தங்களை வலிமையானவர்களாக மாற்றிக்கொள்ள விரும்பினால், உலகின் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் மீதும் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வாழ்க்கையைப் பற்றி மட்டும் சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள். உலகப் பாதுகாப்பில் உங்களுடைய பங்களிப்பு பற்றியும் சிந்தியுங்கள்” என்கிறார் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற ஜோடி வில்லியம்ஸ்.

அமெரிக்கா, வியட்நாம் மீது தொடுத்த போருக்கு எதிராக, 1970-ல் முன்னெடுத்த ‘போர் எதிர்ப்பு இயக்கம்’தான் ஜோடி வில்லியம்ஸின் முதல் களச்செயல்பாடாக அமைந்தது. “எனக்கு 17 வயதாகும் வரை, ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவரைக்கூடச் சந்தித்ததே கிடையாது. கொடூரமான இன அழிப்பில் இருந்துதான் நாங்கள் பிறந்திருக்கிறோம்.

இந்த உண்மையைப் பற்றி அமெரிக்கா ஒருபோதும் பேசியதே இல்லை. பூர்வகுடி அமெரிக்கர்களை நாங்கள் அழித்தெறிந்தோம். அது இனப் படுகொலை அல்லாமல் வேறு என்ன?” என்று தன் சொந்த நாட்டுக்கு எதிராகக் கேள்வி எழுப்புகிறார் இவர்.

அமெரிக்கா சுதந்திரத்தின், சுதந்திர மானவர்களின் நிலம். துணிவு மிக்கவர்களின் உறைவிடம். எந்த மனிதரையும் அமெரிக்கர்கள் ஏற்றுக்கொள்கிறவர்கள் என்றெல்லாம் புனையப்பட்டிருந்த கதைகளை அவரும் நம்பியிருந்ததாகவும் வியட்நாம் போர் மூண்டபோதுதான் தன் சொந்த நாட்டின் உண்மை முகத்தை அறிந்துகொண்டதாகவும் ஜோடி வில்லியம்ஸ் சொல்கிறார்.

பெண்களே-ஒன்றுசேருங்கள்

“19 வயதில் எனக்கு எல்லாம் புரிந்தவுடன் வியட்நாம் போர் எதிர்ப்புப் போராளியாக மாறினேன். அமெரிக்காவைப் பற்றிய என் மனத்திலிருந்த பிம்பம் சுக்குநூறாக உடைந்தது. அந்த நேரத்தில்தான் பெண்களின் இயக்கமும் மனித உரிமை இயக்கமும் மீண்டும் உயிர்த்தெழுந்தன. அந்தப் போர் முடிந்துவிட்டது. ஆனால், அங்கே எந்த மாற்றமும் நிகழவில்லை.

காரணம், அமைப்புரீதியான மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு அங்கு எந்த முயற்சியுமே மேற்கொள்ளப்படவில்லை. ‘வியட்நாமை விட்டு வெளியேறுங்கள்’ என்பதை மட்டும் அங்கே கேட்க முடிந்தது. அந்த ஒட்டுமொத்த அனுபவமும் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புவாதக் கொள்கைக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள என்னை உந்தித் தள்ளியது” என்கிறார் ஜோடி வில்லியம்ஸ்.

மத்திய அமெரிக்காவில் எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் முழுமையாகப் போர் எதிர்ப்பு இயக்கப் பணிகளில் அவர் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு, நிலத்தடியில் கண்ணிவெடிகள் புதைக்கப்படுவதற்கு எதிராக ஓர் அரசியல் பரப்புரை இயக்கத்தை மக்கள் சமூகம் முன்னெடுக்க வேண்டுமென்பதற்காக ஜோடி வில்லியம்ஸ் அழைக்கப்பட்டார்.

அமெரிக்காவில் இருந்த வியட்நாம் போர் எதிர்ப்பியக்கப் போராளிகள், ஜெர்மனியின் ‘மெடிக்கல் இன்டர்நேஷனல்’ ஆகிய இரு அரசுசாரா அமைப்புகளின் ஒன்றிணைந்த குழுவினர், கண்ணிவெடிகளைத் தடை செய்ய வேண்டுமென்ற இயக்கத்தை முன்னெடுத்தனர்.

“இரண்டு அரசுசாரா அமைப்புகளில் இருந்தவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரே அமைப்பாக உருவெடுத்தோம். 1,300 பணியாளர்களுடன் 90 நாடுகளில் நாங்கள் பணியாற்றத் தொடங்கினோம். ஐந்து ஆண்டுகளில் கண்ணிவெடிகளைத் தடைசெய்யும் ஒப்பந்தத்தில் அந்த நாடுகளைக் கையெழுத்திட வைக்க எங்களால் முடிந்தது. நாங்கள் செய்த முயற்சியும் பணியும் அமைதிப் பரிசுக்குத் தகுதியானது என்றே நினைக்கிறேன்.

பொதுவான விஷயத்துக்குத் தொலை நோக்குப் பார்வையுடையவர்கள் ஒன்றிணைந்து செயலாற்ற முன்வந்தால், உலகை மாற்றியமைக்க முடியும் என்பதை நாங்கள் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம். கடினமாக உழைத்தால் எதையும் சாத்தியப் படுத்திவிடலாம்” என்று சொல்லும் ஜோடி வில்லியம்ஸின் பெற்றோர் தங்கள் மகளை நினைத்துப் பெருமைகொள்கிறார்கள்.

டிரோன் எனும் கொலைகார இயந்திரன்

1901-ம் ஆண்டிலிருந்து ஜோடி வில்லியம்ஸ் உட்பட இதுவரை 18 பெண்கள் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறார்கள். கொலைகார இயந்திரன்களுக்கு (ரோபோட் கில்லர்) எதிரான ஓர் இயக்கத்தை 2013-ம் ஆண்டில் இவர் தொடங்கினார். இந்தக் கொலைகார இயந்திரன்களை ஒரு விமானி திரைக்கு முன்னால் உட்கார்ந்து இயக்குவார். கட்டளைகளைப் பிறப்பிப்பார்.

இயந்திரன் அவற்றைச் செயல்படுத்தும். யாராவது ஒரு மனிதரை ‘பயங்கரவாதி’ என்று அந்த விமானி முடிவு செய்துவிட்டாலே போதும். தன் எதிரேயுள்ள ஒரு பொத்தானை அவர் அழுத்துவார். அந்த நபரை இயந்திரன் தாக்கி அழித்துவிடும். இந்தக் கொலைகார இயந்திரன் செயல்பாட்டால், மானுடப் பண்புக்கூறு முற்றிலுமாக அகற்றப்பட்டுவிடுகிறது.

நோபல் பரிசு பெற்ற ஆறு பெண்கள் ஒன்றிணைந்து, 2004-ம் ஆண்டு ‘நோபல் பெண்களின் முன்னெடுப்பு’ (The Nobel Women’s Initiative) என்ற அமைப்பைத் தொடங்கினர். ஜோடி வில்லியம்ஸ் அதன் தலைமைப் பொறுப்பை வகித்துவருகிறார்.

இந்த அமைப்பினர் தங்களின் அனுபவம், பணிகள் மூலம் உலகம் முழுவதிலும் பெண்கள் குழுக்களை உருவாக்கி, நெறிப்படுத்தி மேம்படுத்துகிறார்கள். போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலையான அமைதிக்கும் நீதிக்கும் சமத்துவத்துக்கும் இந்தக் குழுக்கள் பாடுபட்டுவருகின்றன.

நன்றி ‘தி இந்து’ ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில்: கமலாலயன்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அமைதி அறைகூவல்பெண்களே ஒன்றுசேருங்கள்பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள்அமெரிக்கா சுதந்திரம்மத்திய அமெரிக்காடிரோன் எனும் கொலைகார இயந்திரன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author