Published : 02 Apr 2019 11:22 am

Updated : 02 Apr 2019 11:22 am

 

Published : 02 Apr 2019 11:22 AM
Last Updated : 02 Apr 2019 11:22 AM

அந்த நாள் 36: பிற மதங்களை மதித்த மன்னன்

36

“இடைக்காலச் சோழர்களின் தலையாய பேரரசர் ராஜராஜ சோழன். ராஜராஜன் குறித்த முக்கிய தகவல்களை இந்த முறை நானே பகிர்ந்துக்கிறேன் குழலி.”:

> பராந்தக சுந்தர சோழன்-வானவன் மகாதேவியின் மூன்றாவது மகன் ராஜராஜ சோழன். அவருடைய பூர்வ பெயர் அருள்மொழி வர்மன். ‘ராஜராஜ சிவபாத சேகரன்’ என்றொரு பெயரும் அவருக்கு உண்டு. சிவனின் காலடியே தனக்குக் கிரீடம் என்று அதற்குப் பொருள். அவருடைய அரசவைப் பெயர் ராஜராஜன் - அரசர்க்கெல்லாம் அரசன் என்று அர்த்தம்.

> ராஜராஜனின் அண்ணன் ஆதித்ய சோழன் / ஆதித்ய கரிகாலன் பொ.ஆ. 969-ல் கொல்லப்பட்டார். அதன்பிறகு பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்ட உத்தம சோழன் 15 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார். அதன் பிறகு ராஜராஜன் ஆட்சிப் பொறுப்பேற்றார். பொ.ஆ. 985-ல் ராஜராஜனுக்கு மூடிசூட்டப்பட்டது. அவருடைய ஆட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகப் பணிகளுக்கு அவருடைய சகோதரி குந்தவை உதவியாக இருந்ததாகக் கருதப்படுகிறது.

> சேர, பாண்டிய ஆட்சிப் பகுதிகளை வென்ற பிறகு ‘மும்முடிச் சோழன்’ என்ற பட்டத்தைப் பெற்ற ராஜராஜன், இலங்கை மன்னர் ஐந்தாம் மகிந்தவின் தலைநகர் அனுராதபுரத்தை வென்று இலங்கையின் வடபகுதியை ஆட்சி புரிந்தார். தென்னிந்தியாவின் பெரும்பகுதியைத் தன் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தார்.

> ராஜராஜ சோழன் எந்தப் போரிலும் தோற்றதில்லை.

> சைவ மதத்தைப் பின்பற்றிய ராஜராஜன், விஷ்ணு கோயில்களையும் கட்டியுள்ளார். நாகப்பட்டினத்தில் ‘சூடாமணி விஹாரம்’ என்ற பௌத்தக் கோயில் கட்டப்படவும் அவர் அனுமதி அளித்துள்ளார். அவருடைய இரண்டாவது மகள் மாதேவடிகள் பௌத்த மதத்தைப் பின்பற்றியவர்.

> ராஜராஜனுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் (ராஜேந்திரன்). முதல் மகளுக்கு ராஜராஜனின் சகோதரி குந்தவையின் பெயரே சூட்டப்பட்டது.

> ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் ‘ராஜராஜச்சரம்’ என்றே அழைக்கப்பட்டது. ‘பிரகதீஸ்வரர் கோயில்’ என்ற பெயர் பிற்காலத்தில் மராட்டியர்களால் சூட்டப்பட்ட ஒன்று. எப்படியிருந்தாலும் மக்கள் மனத்தில் ‘பெரிய கோயி’லாக நிலைபெற்றுவிட்டது.

> பெரிய கோயிலின் கருவறை உள்சுற்று மண்டபத்தில் ராஜராஜன் காலத்தில் வடிக்கப்பட்ட ஓவியங்கள் சமீபத்திய ஆண்டுகளில் கண்டறியப்பட்டன. இயற்கை வண்ணங்களால் வரையப்பட்ட இந்த ஓவியங்கள் அற்புதமான கலைநயத்தைக் கொண்டவை.

> பெரிய கோயிலுக்கும் மரபு நடனத்துக்கும் இடையிலான தொடர்பு மிக அதிகம். பெரிய கோயில் முதன்மை கோபுரத்தில் 81 நடன முத்திரைகள் (கரணங்கள்) வடிக்கப்பட்டுள்ளன. பெரிய கோயில் கட்டப்பட்ட காலம் தொடங்கி அங்கே நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்போதும் ‘சின்னமேளம்’ என்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

andha-2jpg

பொன்னியின் செல்வன்

எழுத்தாளர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சோழர்களைப் பற்றிய கற்பனைக் கதை. அதேநேரம், அதில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் நிஜத்தில் வாழ்ந்தவை. தமிழக வரலாற்று நாவல்களில் பெரும் புகழ்பெற்றது ‘பொன்னியின் செல்வன்’. ஐந்து தொகுதிகளைக் கொண்ட இந்த வரலாற்று

நாவல், தலைமுறைகளைத் தாண்டிப் புகழ்பெற்றது. பல முறை நாடகமாக நடத்தப்பட்டு வெற்றி பெற்றிருக்கிறது. எம்.ஜி.ஆரால் திரைப்படமாக எடுக்க நினைக்கப்பட்ட, தற்போது மணிரத்னம் எடுக்க நினைக்கும் புகழ்பெற்ற வரலாற்றுக் கதை இது.

காவிரி நதிக்குப் பொன்னி என்றொரு பெயர் உண்டு. அதன் அடிப்படையிலேயே ராஜராஜ சோழனை, ‘பொன்னியின் செல்வன்’ என்று விளித்து இந்த நாவலை கல்கி எழுதியிருந்தார். இந்த நாவலின் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஒன்று அருண்மொழிவர்மன். இவர் வேறு யாருமல்ல, சோழப் பேரரசின் பெரும் புகழ்பெற்ற மன்னன் முதலாம் ராஜராஜன்தான். இந்த நாவலின் முன்கதையாக ‘பார்த்திபன் கனவு’ம், அதற்கு முன்னர் ‘சிவகாமியின் சபதம்’ நாவலும் கருதப்படுகின்றன.

 

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

 

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author