Published : 01 Apr 2019 12:11 PM
Last Updated : 01 Apr 2019 12:11 PM

வேலையில்லா திண்டாட்டமும் புதிய வாய்ப்புகளும்!

இது தேர்தல் காலம். வளர்ச்சி, வேலை வாய்ப்பு இந்த வார்த்தைகளெல்லாம் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்களில் இல்லாமல் இருக்காது. ஆனால், வெறுமனே இத்தனை லட்சம் வேலை வாய்ப்பு களை உருவாக்குவோம், அத்தனை லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கினோம் என்று அறிவிக்கின்றனவே தவிர, களநிலவரம் எப்படி இருக்கிறது என்பதை அரசியல் கட்சிகள் கவனத்தில்கூட எடுத்துக்கொள்வதில்லை.

இந்தியாவில் வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது? என்ன மாதிரியான மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது? இளைஞர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? இவையெல்லாம் அலசப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.  

கடந்த வாரம், 2008-ல் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைப் பெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் பால் கஃரக்மான், இந்தியத் தொழில்துறையில் சரியான பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்கவில்லையென்றால் மிகப்பெரிய வேலையில்லாத் திண்டாட்டத்தை இந்தியா சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காத்திருக்கும் சவால்

காரணம், இந்தியத் தொழில் துறை தொடர்ந்து பல்வேறு பரிணாம மாற்றங்களை அடைந்துவருகிறது. ஒரு காலத்தில் உற்பத்தி துறை பெரும்பான்மை சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது சேவைத் துறை அந்த இடத்தைப் பிடித்துள்ளது. எனவேதான் மென்பொருள், செயற்கை நுண்ணறி

வூட்டப்பட்ட ரோபோக்கள் போன்றவைகளின் சேவைகளை உள்நாட்டிலேயே பெறுவதற்கு போதிய கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் பட்சத்தில் இந்திய சேவைத் துறை மிகப்பெரிய சரிவைச் சந்திக்க நேரிடும் என்று பால் கஃரக்மான் குறிப்பிடுகிறார்.

அதாவது, சமீபத்திய தொழில்நுட்ப முன்னேற்றங்களாகக் கருதப்படும் பணியிட எந்திரமயமாக்கல் (workplace automation), செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட எந்திரங்கள் (artificial intelligence), வலவனிலா வானூர்திகள் (drones), ரோபோமயமாக்கல் (robotization), மெய்நிகர் உதவி (virtual assistance) மற்றும் பிளாக் செயின் (block chain) போன்ற அறிவியல் வளர்ச்சிகள் வேலையின்மையை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

புதிய தொழில்நுட்பங்கள் தொழில் துறையில் ஆதிக்கம் செலுத்தும்போது இதுபோன்ற அச்சங்கள் எழுவது ஒன்றும் புதிதல்ல, காலங்காலமாக இருப்பதுதான்.

தொழில் துறையில் தொழில்நுட்ப ஆதிக்கம்

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் தொழிற்புரட்சியின் காரணமாக தொழில் துறையில் மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றங்கள் உருவாகின. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்சு போன்ற ஐரோப்பிய நாடுகளில் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொருளாதார வளர்ச்சி அடைந்ததோடு, நாகரிக மாற்றங்களும் நடந்தேறின.

இது வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. பின்னர், தொழில்துறையை இயந்திரமயமாக்கியபோது பலரது வேலைவாய்ப்புகள் பறிபோயின. இது இப்படியே தொடர்ந்தால் வேலையில்லாத் திண்டாட்டம் என்கிற நிலைதான் உருவாகும் என்று அஞ்சினர். ஆனால், இயந்திரமயமாதலின் காரணமாக தொழில் துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியது மட்டுமல்லாமல், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. அதன்பிறகு, கணினிகளின் ஆதிக்கம்.

கணினி கண்டுபிடிக்கப்பட்டு மனிதர்கள் செய்ய வேண்டிய சில கடினமான வேலைகளைக் கணினிகள் செய்யத் தொடங்கிய போதும், வேலை பறிபோகும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனால், இன்று கணினி மற்றும் மென்பொருள்கள் தொடர்புடைய தொழில்களே அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

கணினி போன்ற மின்னணு சாதனங்களின் அளப்பரிய பங்களிப்பு இல்லாத இடங்களை பார்க்கவே முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. இன்று விண்கலங்கள், செயற்கைகோள்கள் மற்றும் ஏவுகணைகளை இயக்குவதற்கு உதவியாக இருப்பதிலிருந்து வறண்ட பூமிக்குக் கீழே நீர் இருக்கிறதா என்று சோதனை செய்வது வரைக்கும் இந்தக் கணினிகள் பேருதவியாக இருக்கின்றன.

அச்சுறுத்தும் ஆட்டோமேஷன்

இந்த வரிசையில் சமீபத்திய வரவாக இருப்பதுதான், ஆட்டோமேஷனும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும். இன்று கூகிள் அசிஸ்டன்ட் (Google Assistant)-ன் உதவியுடன் நமது அன்றாட நிகழ்வுகளைப் பட்டியலாக்கி வரிசைப்படுத்தி நினைவுறுத்தச் செய்ய முடிகிறது. அருகிலுள்ள காபி, சிற்றுண்டி, உணவகங்கள், சினிமா தியேட்டர்கள், பெட்ரோல் ஸ்டேஷன், மருத்துவமனைகள் போன்றவைகளை இருந்த இடத்திலிருந்தே அணுக முடிகிறது.

அரிஸ்டாட்டில் என்கிற ஒரு ரோபோ வீட்டில் குழந்தைகளுக்கு படுக்கை நேர கதைகளை சொல்கிறது. ஸ்டீவ் என்கிற ஒரு பாதுகாப்பு ரோபோ தெருக்களை வலம் வந்து தீ பரவும் இடங்களை கண்டுபிடிக்கிறது. நாணி என்கிற ரோபோ கோழி வளர்ப்பு இடங்களில் கோழிகளுக்கு வரும் சுகாதார சீர்கேடுகளைக் கண்காணிக்கிறது.

இதுபோன்று மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகளை ரோபோக்கள் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் எதிர்காலத்தில் காத்திருக்கின்றன. இந்த தொழில்நுட்பங்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2025-ல், ரோபோடிக்ஸ் 67 பில்லியன் டாலர் துறையாக மாறும் என்று புள்ளியில் விவரங்கள் தெரிவிக்கின்றன. இப்போதும் அதே அச்சம்.

கள நிலவரம் என்ன?

ஒவ்வொரு முறை தொழில் துறை மாற்றத்தை வரவேற்கும்போதும், அதன்மீது பழியைச் சுமத்துவதை விட, வேலைவாய்ப்புகளில் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை ஆராய்வதுதான் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். அந்த வகையில் இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வுகளையும் புள்ளிவிவரங்களையும் பார்க்கும்போது சில விஷயங்கள் புலப்படுகின்றன. 

இந்தியாவைப் பொறுத்தமட்டில் கடந்த ஆண்டுகளில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரப்படி 2015-16ல் 48 கோடி மக்கள் பல்வேறு துறைகளில் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களில் 42% வேளாண் துறையிலும், 14% கட்டுமானத் துறை

யிலும், 12% பேர் வர்த்தகம் மற்றும் ஹோட்டல் துறையிலும், 12% பேர் தொழில் துறையிலும், 11% சமூகம் மற்றும் தனிப்பட்ட சேவை சார்ந்த துறையிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால், புதிய வேலைவாய்ப்புகள் என்பது கடந்த காலங்களில் சில குறிப்பிட்ட துறைகளில் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன. 2010-11 மற்றும் 2015-16க்கு இடையில் 1.5 கோடி பேர் மட்டுமே புதிய வேலைகளில் சேர்ந்துள்ளனர்.

இதில் வணிக சேவைதான் அதிகபட்ச வேலைவாய்ப்பினை (23%) உருவாக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து தொழில் துறை, கல்வித் துறை, வர்த்தகத் துறை, மற்றும் போக்குவரத்து  துறை போன்றவை முறையே 17%, 12%, 11%, 11% வேலைவாய்ப்பினை உருவாக்கியுள்ளன. மாறாக இதே காலகட்டத்தில் 12 லட்சம் பேர் ஜவுளி மற்றும் தோல் தொழில்களிலும், 9 லட்சம் பேர் மரம் மற்றும் மரச்சாமான்கள் சார்ந்த தொழில்களிலும் வேலையை இழந்துள்ளனர்.

சமகாலத்தில் உச்சத்தில் உள்ள துறைகளான மின்னணு, ஆப்டிகல் உபகரணங்கள், உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு போன்றவைகளும் மிகச் சிறிதளவே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவி செய்துள்ளன.

மேலும் இந்த 5 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வேளாண் சார்ந்த தொழில்களிலிருந்து வெளியேறியுள்ளனர். ஆனால், அதேயளவு மக்கள் கட்டுமானத் தொழில்களில் அமர்ந்துள்ளனர் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றமே வேளாண் தொழிலில் அதிக கூலி உயர்வுக்கும் மற்றும் விவசாயிகளின் துயருக்கும் ஒருவகையில் காரணமாகும்.

இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் தரவுகள்படி 2014-லிருந்து 2018-க்குள் விவசாயக் கூலி 27%மாக உயர்ந்துள்ளது, குறிப்பாக விளைபொருட்களைப் பறிப்பதற்கான கூலியானது 41%மாக அதிகரித்துள்ளது. இது சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை பெருமளவு பாதித்தது.

பிறக்கும் புதிய வாய்ப்புகள்

விவசாயத் தொழிலோடு ஒப்பிடுகையில், மற்ற துறைகளில் வருமானம் அதிகமாக இருப்பதால் எதிர்காலத்திலும் இப்போதுபோல வேளாண்மையிலிருந்து மற்ற துறைகளுக்கு வேலையாட்கள் செல்வது தொடர வாய்ப்பிருக்கிறது.

2018 டிசம்பரில் விவசாய வேலையாட்களுக்கு சராசரியாக ரூபாய் 299/- ம், கட்டிட வேலையாட்களுக்கு ரூபாய் 332/-ம், மர வேலையாட்களுக்கு ரூபாய் 429/-, கொல்லருக்கு ரூபாய் 351/- ம், கொத்தனார்க்கு ரூபாய் 472/- ம், பிளம்பர்க்கு ரூபாய் 443/- ம், எலெக்ட்ரிசியனுக்கு ரூபாய் 427/- ம் கூலியாக வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பெரும்பாலான இந்த வேலைகளைக் கற்றுக்கொள்வதற்கு அதிக மெனக்கெடல் தேவையில்லை.

மிகச் சுலபமாகவே கற்றுக்கொள்ளலாம். கள நிலவரம் இப்படி இருக்கையில் வேளாண்மையில் பெரும்பாலான நேரங்களில், நாட்களில் தொழிலாளர்கள் பகுதி நேரம் மட்டுமே வேலையில் இருப்பது அவர்களை வேளாண் சாரா தொழில்துறைகளை நோக்கிச் செல்வதற்கு மேலும் ஒரு உந்துசக்தியாக விளங்குகின்றது.

எண்ணிக்கையில் பார்த்தோமென்றால், 70% (5 கோடி). இப்படி 10 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு வேளாண்மையில் சரியான வேலை கிடைக்காதபட்சத்தில் அவர்கள் மற்ற துறை வேலைகளுக்கு இடம்பெயர்வதைத் தடுக்கவே முடியாது.

எனவே தொழில் துறையைப் பொருத்தவரை, புதிய மாற்றங்கள் வேலையில்லா நிலையை உருவாக்குவதுபோன்ற ஒரு தோற்றம் இருந்தாலும், மறுபக்கம் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவே செய்கிறது என்பதும் உண்மை. ஆனால், அந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளும் திறன் நம்மிடம் இருக்கிறதா என்பதில்தான் சிக்கல் இருக்கிறது. ஒரு மென்பொருளையோ அல்லது ரோபோவையோ உருவாக்கக்கூடிய அல்லது கையாளக்கூடிய அறிவு நமக்கு தேவைப்படுகிறது.

பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் செயற்கை நுண்ணறிவூட்டப்பட்ட ரோபோக்கள் நிதி, போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு துறை போன்றவற்றில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப மக்களும் தங்களை மேம்படுத்திக் கொள்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தமட்டில், இந்தப் புதிய தொழில்நுட்பங்களில் 7% க்கும் குறைவான மக்களே வேலை செய்கின்றனர். இந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், திறன் பற்றாக்குறையும் ஆட்கள் தட்டுப்பாடும் உண்டாகின்றன.

திறன் வளர்ப்பும் தகுதியும்

இந்தத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கு அடிப்படைக் கட்டமைப்புகள் மிகவும் அவசியம். குறிப்பாக உயர்க்கல்வி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும். ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் தொழில்துறையில் வெறும் 10% பேர்தான் தாங்கள் செய்யும் வேலைக்கான தகுந்த பயிற்சியைப் பெற்றுள்ளனர். மற்றவர்கள் அரையும் குறையுமாக காலத்தைத் தள்ளுகின்றனர்.

எனவே திறன் வளர்ப்பு என்பது இன்றைய காலகட்டத்தின் அத்தியாவசியமாக மாறியுள்ளது. ஏனெனில், பன்முகத்தன்மையுள்ள பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், அதை முழுமையாகப் பயன்படுத்துவதும் ஒரு கடுமையான சவாலே. 

எனவே, அரசும் தொழில்துறை அமைப்புகளும், புதிய வேலைவாய்ப்புகளை வரவேற்பு முழுத்திறமையுடன் செயலாற்றி பொருளாதாரத்தை மேம்படுத்தும்படியான திறமைசாலிகளை உருவாக்க வேண்டும். இந்த இடைவெளியை நிரப்பினால் மட்டுமே இந்தியா மேலும் சிறப்பான வளர்ச்சியை எட்டும். இல்லையெனில், வேலைவாய்ப்பினைப் பொறுத்தமட்டில் தொடர்ந்து குண்டும் குழியும் நிறைந்த சாலைகளில்தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கும்.

- விஞ்ஞானி எஸ். ஜே. பாலாஜி, balaji.sj@icar.gov.in,
பேராசிரியர்  ம. உமாநாத், umanath@mids.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x