Last Updated : 07 Apr, 2019 11:09 AM

 

Published : 07 Apr 2019 11:09 AM
Last Updated : 07 Apr 2019 11:09 AM

வண்ணங்கள் ஏழு 49: வலிகளால் எழுப்பப்பட்ட சுவர்

“என் பெயர் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருநங்கையாகிய என்னைப் பேருந்து நிலையத்தில் சந்தித்த ஒருவர், அவரது வீட்டுக்கு வந்து பூஜை செய்யமுடியுமா எனக் கேட்டார். தன்னுடைய குடும்பத்தினரும் வீட்டில் இருப்பதால் பயப்பட வேண்டாம் என்று நம்பிக்கையுடன் பேசினார். பூஜை செய்வதற்குத்தானே கூப்பிடுகிறார் என்று நம்பி அவரது வீட்டுக்குப் போனேன். போனபிறகுதான் அவரது வீட்டில் அவரைத் தவிர யாருமே இல்லை என்பது புரிந்தது. என் விருப்பத்துக்கு மாறாக என்னை அவர் பாலியல் வல்லுறவு செய்தார்”.

இப்படிப் பூங்காக்களில், முட்டுச் சந்தில், பொதுக் கழிப்பிடங்களில் எனப் பல்வேறு இடங்களில் திருநங்கைகள் பலர் ஆண்களால் வல்லுறவுக்கு ஆளான கதைகளை தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருக்கும் திருநங்கைகள் அவர்களின் கைப்பட எழுதியதை ‘மீடூ ஃபைல்ஸ்’ எனும் பெயரில் ‘சகோதரி’ தன்னார்வ அமைப்பினர்  ஆவணப்படுத்தியிருக்கின்றனர்.

அந்தக் கடிதங்கள் தெலுங்கு, தமிழ், கன்னடம் என்று மொழியால் வேறுபட்டிருந்தாலும் அவற்றில் உறைந்திருக்கும் வலி ஒன்றுதான். ஆண்கள், பெண்களுக்கு எதிராக மட்டுமல்ல; மாற்றுப்பாலினத்தவருக்கும் எதிராக நிகழ்த்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகளின் சாட்சியாக அவை இருக்கின்றன.

மாற்றுப்பாலினத்தவருக்கான தன்னார்வ அமைப்பான   ‘சகோதரி’யில் பல திருநங்கைகளுக்கு ஓவியப் பயிற்சி அளித்திருக்கிறார் கல்கி. சமூகத்தின் பல அடுக்குகளிலும் மாற்றுப் பாலினத்தவர் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் பாலியல்ரீதியான சுரண்டல்களையும் அந்த ஓவியங்கள் உணர்த்துகின்றன.

கல்கியுடன் சௌந்தர்யா இணைந்து ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் சென்று பல்வேறு திருநங்கைகளின் வலிகளைப் பதிவு செய்திருக்கின்றனர். எழுதத் தெரியாத திருநங்கைகளின் வலிகளை அவர்கள் சொல்ல, அதை எழுத்தில் வடித்திருக்கின்றனர். இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மாற்றுப் பாலினத்தவர் உரிமை மசோதா குறித்தும் மாற்றுப் பாலினத்தவரின் உரிமை குறித்தும் கல்கியிடம் பேசினோம்.

 

மாற்றுப் பாலினத்தவர் குறித்து சமூகத்தில் நல்ல மாற்றங்கள் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?

மூன்றாம் பாலினத்தவருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். ரேஷன் அட்டை வழங்குவது, அடையாள அட்டை வழங்குவது, வீட்டைவிட்டு வெளியேறும் திருநங்கைகள் தங்குவதற்குத் தற்காலிக வீடுகளை ஏற்படுத்தித்தருவது போன்றவையெல்லாம் அரசின் கடமைகளே தவிர, மூன்றாம் பாலினத்தவருக்கான சலுகைகள் அல்ல. தங்களது வீடுகளிலிருந்தே திருநங்கைகள் வெளியேற்றப்படுவதை அரசு தடுக்க வேண்டும்.

மாற்றுப் பாலினத்தவர் பாதுகாப்பு மசோதாவில் வீட்டைவிட்டு ஒரு திருநங்கையை வெளியேற்றுபவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருக்கிறதே. இந்த அடிப்படையில் பாதுகாப்பு மசோதா வரவேற்கக் கூடியதுதானே?

மாற்றுப் பாலினத்தவர் பாதுகாப்பு மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த விஷயத்தை நான் வரவேற்கிறேன். அதேநேரம் திருநங்கைகள் பிச்சை எடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றும் பாலியல் தொழிலில் ஈடுபவது குற்றம் என்றும் அதில் இருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திருநங்கைகளின் வாழ்வாதாரத்துக்கு வேண்டிய திட்டங்களை, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை கல்வி, வேலைவாய்ப்புகளில் ஏற்படுத்திவிட்டு இதைச் சொன்னால் பரவாயில்லை. அவர்களுக்கான எதிர்காலமே கேள்விக் குறியாகத்தானே இருக்கிறது?

உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தச் சொல்கிறீர்கள். ஆனால், திருநங்கைகள் எல்லோரும் உச்ச நீதிமன்றம் சொல்லும் மூன்றாம் பாலினம் என்ற பொதுக் குடையின்கீழ் இல்லையே?

சிலர் ஆண் என்னும் அடையாளத்துடனும் இன்னும் பலர் பெண் என்னும் அடையாளத்துடன்தானே தங்களை அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். மூன்றாம் பாலினம் என்னும் பொது அடையாளத்தில் எல்லோரும் ஒன்றிணையும் போதுதானே உரிமைகள் கிடைக்கும்?

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் மூன்றாம் பாலினம் என்பதை ஒரு வசதிக்கு ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அதிலும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. முதல் பாலினம், இரண்டாவது பாலினம் யார்? இப்போது நான்காம், ஐந்தாம், ஆறாம் பாலினங்கள் எல்லாம் வந்துவிட்டன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அரசுகள் அமல்படுத்தினால் சமூக அங்கீகாரம் கிடைக்கும். அதன் மூலம் குடும்பங்களிலிருந்து மாற்றுப் பாலினத்தவரை வெளியேற்றுவது அடியோடு தடுத்து நிறுத்தப்படும். இதைத்தான் மாற்றுப் பாலினத்தவரின் வாழ்க்கை  மாற்றத்துக்கான வழியாகப் பார்க்கிறேன்.

மாறுபட்ட ஆண், பெண்

பால் புதுமையரில் மாறுபட்ட ஆண் என்றும் மாறுபட்ட பெண் என்றும் இருக்கிறார்கள். பெண்ணாகப் பிறக்கும் ஒருவர், தன்னுடைய பாலினத்தை முழுதாக உணர முடியாதவராக, குறைந்த அளவு பெண் என்று அடையாளம் கொள்பவர்களே ‘மாறுபட்ட ஆண்’ என்னும் நிலையில் இருப்பவர்கள்.

ஆணாகப் பிறக்கும் ஒருவர் தன்னுடைய செயல்களின் மூலம் தன்னை ஆண்போல் காட்டிக்கொண்டாலும், இயல்பில் தன்னைப் பெண்ணாகவே கருதுவர். தன்னைக் குறைந்த அளவில் ஆடவர் என்று உணர்வர். இவர்கள், ‘மாறுபட்ட பெண்’ என்ற வரையறைக்குள் அடங்குவார்கள்.

 

புரிந்துகொள்ள முயல்வோம்

கட்டுரையாளர் தொடர்புக்கு: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x