

எவரெஸ்ட் சிகரம் தொடுவது என்பது சாதனைகளின் உச்சமாகக் கொண்டாடப்படுகிறது. ராக்கெட் பயணத்தில் நிலாவை அடைவதுகூட எளிதில் சாத்தியமாகும். ஆனால் எவரெஸ்ட் ஏற நினைப்பது உண்மையிலேயே மாபெரும் சாகசம்தான். அந்தச் சீதோஷண நிலையைச் சமாளித்து சிகரம் தொட்டவர்கள் சிலர்தான். அப்படிப்பட்ட சாதனையாளர்கள் பட்டியலில் ஒருவர்தான் அருணிமா சின்ஹா. ஆனால் இவர் அவர்களில் தனித்துவம் மிக்கவர்.
அருணிமா உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தின் கடைசிக் குழந்தை. இளம் வயதிலேயே கைப்பந்து விளையாட்டில் ஆர்வத்துடன் இருந்தார். தொடர்ந்து பயிற்சி எடுத்துத் தேசியப் போட்டிகளில் பங்கு பெறும் அளவுக்கு முன்னேறினார். விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் படைக்க வேண்டும் என்னும் வேகம் அவருக்கு இருந்தது. ஆனால் குடும்பச் சூழல் கருதித் தனது விளையாட்டுத் திறமையை வைத்து ஏதாவது அரசு வேலையில் சேர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். தொடர்ந்து அரசுத் தேர்வுகள் எழுதினார். ஆனாலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவருக்குள் கனன்றுகொண்டிருந்தது.
அப்படியாக அரசுப் பணிக்கான எழுத்துத் தேர்வில் அவர் வெற்றி பெற்றார். நேர்காணலுக்கான அழைப்பு அவருக்கு வந்தது. அது மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றுவதற்காக நேர்காணல். அதற்காக அவர் 2011-ம் ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி பத்மாவதி எக்ஸ்பிரஸில் லக்னோவில் இருந்து தலைநகர் டெல்லிக்குச் சென்றார். அந்தப் பயணம் அவர் வாழ்க்கையே புரட்டிப் போடப்போவது அவருக்கு அப்போது தெரியவில்லை. அரசுப் பணி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவர் பயணத்திற்குத் தயாரானார்.
காலை இழந்தார்
அருணிமா ஜெனரல் கம்பார்ட்மெண்டில்தான் பயணம் செய்தார். அந்த கம்பார்ட்மெண்டில் ஏறிய திருடர்கள் அருணிமா கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைப் பறித்தனர். கைப்பையையும் பிடுங்கினர். அருணிமா அவ்வளவு எளிதில் விட்டுத் தரத் தயாராக இல்லை. அவர் தொடர்ந்து போராடினார். திருடர்களுக்கு அருணிமாவின் எதிர்த் தாக்குதல் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. மூர்க்கமாக அவரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டனர். தன் வாழ்க்கையை மாற்றிய அந்தச் சம்பவத்தை அவர் நினைவுகூர்கிறார்: “முடிந்தளவு போராடிப் பார்த்தேன். ஆனால் அவர்கள் என்னைப் பலவந்தமாக ரயிலை விட்டு வெளியே தள்ளிவிட்டனர். என்னால் நகரவே முடியவில்லை. சட்டென்று என் கால் ரயில் சக்கரத்தில் சிக்கிச் சிதைந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது.”
அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நான்கு மாதச் சிகிச்சைக்குப் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியால் அவருக்குச் செயற்கைக் கால் பொருத்தப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் அவர் தற்கொலைக்கு முயன்றதாகக் குற்றம் சாட்டினர். அருணிமா துணிச்சலாகப் போலீசாரின் இந்த வாதத்தைப் பொய் என அழுத்தம் திருத்தமாக நீதிமன்றத்தில் கூறினார். தீர்ப்பு அவருக்குச் சாதகமாகவே வந்தது. அவருக்கு ரயில்வே நிர்வாகம் 5 லட்சம் ரூபாய் நிவாரணம் கொடுக்க அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் உத்தரவிட்டது. ஆனால் அருணிமாவை இந்த நிலைக்குத் தள்ளிய அந்தத் திருடர்கள் கண்டுபிடிக்கப்படவே இல்லை.
காலை இழந்த தவிப்பை விடத் தன் லட்சியம் முறிந்துவிட்ட தவிப்புதான் அவரை நிம்மதியிழக்கச் செய்தது. ஆனாலும் அவர் கலங்கவில்லை. ஏதாவது ஒரு விதத்தில் சாதித்தே ஆக வேண்டும் என உறுதிபூண்டார். அருணிமாவுக்கு இந்த உத்வேகத்தைத் தந்தது கிரிக்கெட் நட்சத்திரம் யுவராஜ் சிங்தான். கேன்சரை எதிர்த்துப் போராடி, மீண்டும் அவர் களம் கண்ட செயல் அருணிமாவுக்குள் பெரும் நம்பிக்கையை விதைத்தது.
தன் அண்ணன் மூலம் எவரெஸ்ட் சிகர ஏற்றப் பயிற்சியாளர் பாலேந்திர பாலைத் தொடர்புகொண்டார். எவரெஸ்ட் ஏற்ற பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அவருக்கு ராமகிருஷ்ணா மிஷின் உதவ முன்வந்தது. செயற்கைக் காலுடன் இரண்டு ஆண்டுகள் கடினமான பயிற்சிகள் எடுத்தார். கடந்த ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் கால் பதித்தார். ஏப்ரல் 2013, 1-ம் தேதி டாட்டா மலையேற்ற வழிநடத்துனர் சூசன் மாக்டோவுடன் அருணிமா தன் சாதனைப் பயணத்தைத் தொடங்கினார்.
சிகரம் தொட்டார்
52 நாட்கள் மிகக் கடுமையான பயணத்திற்குப் பிறகு மே 21-ம் தேதி அவர் தன் இலக்கை அடைந்தார். காலை இழந்து எவரெஸ்டில் கால் பதித்த முதல் பெண் என்னும் சாதனையையும் படைத்தார். இப்போது அரசு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருகிறார். இந்தச் சாதனை மூலம் அவருக்குப் பல லட்சம் ரூபாய் பரிசுகள் வந்து குவிந்தன. தனக்கு வந்த பெரும் பணத்தை வைத்துச் செல்வச் செழிப்பான வாழ்க்கை வாழ அவர் விரும்பவில்லை. தன்னைப் போல் சாதனை படைக்க நினைத்து அதற்கான வழிகள் தெரியாமல் தவிப்போருக்கு உதவ நினைத்தார். அந்தப் பணத்தில் பண்டிட் சந்திரசேகர ஆசாத் பெயரில் இலவசப் பயிற்சி அளிக்கும் பொருட்டு ஒரு விளையாட்டு மையத்தை நிறுவியுள்ளார்.
“லட்சியத்தை நோக்கிப் படிபடியாக முன்னேறுங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கு வசப்படும்” என்று சொல்லும் அருணிமாவின் ஒவ்வொரு செயலும் இளைஞர்களுக்குப் பாடங்களைச் சொல்லும்.