Last Updated : 07 Apr, 2019 10:22 AM

 

Published : 07 Apr 2019 10:22 AM
Last Updated : 07 Apr 2019 10:22 AM

பெண்கள் 360: குழந்தைகளின் தேவதை

மாஸ்கோவில் இசை நிரம்பி வழிந்த ஒரு வீட்டில் 1903-ல் சோஃபியா மொகிலேவ்ஸ்கயா பிறந்தார். தந்தை புகழ்பெற்ற இசைக்கலைஞர். குழந்தைப் பருவத்திலேயே சோஃபியாவுக்கு பியானோ வாசிக்க அவர் கற்றுக்கொடுத்தார். இசையின் மீதான அவரது விருப்பமும் காதலும் பதின் பருவத்தில் எழுத்தின்மீது திரும்பியது.

பத்திரிகையாளராக எழுத்துலகில் நுழைந்தவர், இலக்கியவாதியாக விஸ்வரூபமெடுத்தார். மாஸ்கோவில் பள்ளிப்படிப்பை முடித்தபின்,  கட்டுரைகள், தேவதைக் கதைகளின் மொழிபெயர்ப்புகள், புனைகதைகள் போன்றவற்றை எழுதிக் குவித்தார். கிட்டத்திட்ட 40 ஆண்டுகள், அவருடைய அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாக எழுத்து இருந்தது. 

Mark of the Country Gondelupy எனும் குழந்தைகளுக்கான அவரது முதல் புத்தகம் 1941-ல் வெளியானது. அந்தப் புத்தகத்துக்குக் கிடைத்த வரவேற்பு, குழந்தைகளுக்கான கதை உலகில், அவரைத் தவிர்க்க முடியாத ஆளுமையாக்கியது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் அனாதை ஆசிரமத்தில் பணிபுரிந்த அனுபவத்தைக்கொண்டு அவர்  எழுதிய ‘House in Tsybiknur’ எனும் புத்தகம் 1949-ல் வெளிவந்து உலகின் ஆன்மாவை உலுக்கியது.

அவர் எழுதிய ‘கேர்ள்ஸ், திஸ் புக் இஸ் ஃபார் யு’, ‘டேல் ஆஃப் தி லௌட் டிரம்’ போன்றவை இன்றும் கொண்டாடப்படுகின்றன. சோஃபியாவின் 116-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக ஏப்ரல் 3 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

b56bbf0dP2158325mrjpgright

காலத்தில் கலந்த பன்முக எழுத்தாளர்

பரிபூரணமானவர், நேர்த்தி மிக்கவர், தற்பெருமையற்றவர், அறிவார்ந்த அணுகுமுறையாளர் என்று சிலாகிக்கப்படும் ‘இந்தியா டுடே’யின் முதல் ஆசிரியரான உமா வாசுதேவ் கடந்த மார்ச் 27-ல் மறைந்துவிட்டார். எழுத்துலகிலும் பத்திரிகை உலகிலும்

மிகப் பெரும் ஆளுமை அவர். இந்திரா காந்தியைப் பற்றி இரண்டு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை எழுதியிருக்கிறார். உள்ளதை உள்ளபடியே பதிவுசெய்யும் விதமாக நேர்மையான எழுத்தால் கட்டமைக்கப்பட்ட அந்த இரண்டு புத்தகங்களும் அவரது எழுத்தின் மேன்மைக்கும் உண்மைக்கும் சான்று. அவரது எழுத்தும் வாழ்வும் ஒன்றாக இருந்தன. இசையின் பெரும் ரசிகர் அவர்.

இசையில் அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பெரிதும் போற்றப்படுகின்றன.  எழுத்தாளராக அவர் அடைந்த உயரம் யாரும் எளிதில் அடைய முடியாதது. எண்ணற்ற ஆவணப் படங்களையும் தொலைக்காட்சித் தொடர்களையும்  எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். ‘தி சாங் ஆஃப் அனசுயா’, ‘வேர் தி சைலன்ஸ் ஸ்பீக்ஸ்’, ‘பெயிண்ட்டிங்க்ஸ்’ போன்ற புத்தகங்கள் அவரது சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றன. மனிதத்தைக் கொண்டாடும் அவரது எல்லை பரந்து விரிந்தது.

 

b56bbf0dP2158324mrjpgrightஎண்ணமும் சொல்லும்:

நான் பொய் சொல்ல மாட்டேன்

நியாய் திட்டம் மூலம் ஏழைக் குடும்பத்தில் உள்ள பெண்களின் வங்கிக்  கணக்கில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் நேரடியாகச் செலுத்துவோம். இதன்மூலம் கோடிக்கணக்கான பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்பர். இந்தப் பணத்தின் மூலம் மக்கள் பொருட்களை வாங்குவர். இதன் மூலம் நாட்டின்  பொருளாதாரம் மேம்படும். நான் பொய் சொல்ல மாட்டேன். நான் ஏழ்மையின் மீது கண்டிப்பாக ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ நடத்துவேன். ஐ.மு. கூட்டணி ஆட்சிக்கு வரும்போது நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடம் ஒதுக்கப்படும். மத்திய அரசுப் பணிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு சதவீதம் கல்விக்கு ஒதுக்கப்படும். புதிய கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் கட்டப்பட்டு மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

- ராகுல் காந்தி, அகில இந்தியக் காங்கிரஸ் பொதுச் செயலாளர்

 

b56bbf0dP2158322mrjpgrightஅமெரிக்காவின் அவலம்

அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்தபோது 2009 முதல் 2017வரை துணை அதிபராகப் பதவி வகித்தவர் ஜோ பிடென். இவர் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராகக் களம் இறங்குவதற்குப் பரிசீலித்துவருகிறார். இந்நிலையில் பெண்கள் சிலர் ஜோ பிடென் மீது அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்திவருகின்றனர். நெவாடா மாகாண சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினரான லூசி புளோரஸ் (39), ஜோ பிடெனின்  முன்னாள் உதவியாளரான எமி லாப்போஸ் (43) உள்பட நான்கு  பெண்கள் ஜோ பிடென் மீது பாலியல் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்கள்.

இந்நிலையில் வெள்ளை மாளிகையின் முன்னாள் ஊழியரான வைல் கோனெட், ஜனநாயகக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் யாலி கோல், சோபி காரசிக் ஆகிய மூன்று பெண்கள் ஜோ பிடென் தங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னாள் துணை அதிபர் மீது அடுத்தடுத்து ஏழு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

b56bbf0dP2158323mrjpgrightமிசோரமின் முதல் பெண் வேட்பாளர்

1972-ல் அசாமிலிருந்து பிரிக்கப்பட்டு, மிசோரம் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு இதுவரை 12 முறை தேர்தல்கள் நடந்துள்ளன. அந்தத் தேர்தல்களில் ஒரு முறைகூட, பெண்கள் வேட்பாளர்களாகப் போட்டியிடவில்லை. இத்தனைக்கும் மிசோராமில், ஆண் வாக்காளர்களைவிடப் பெண் வாக்காளர்களே அதிகம்.

இந்நிலையில், இப்போது முதன்முறையாகப் பழங்குடியினப் பெண், லலித் லாமுவானி சுயேச்சையாகப் போட்டியிடுகிறார். பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர், தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். “என்னைப் போன்ற படிக்காதவர்களே, எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தும்போது, படித்த இளம் பெண்கள் அரசியலுக்கு வந்தால், என்னைவிடச் சிறப்பாகச் செயல்படலாம்” என அந்த 63 வயது வேட்பாளர் நம்பிக்கையோடு சொல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x