

மத்திய அரசின் முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் (பாரத மிகுமின் நிறுவனம்) பொறியாளர், மனிதவள மேலாளர், நிதி மேலாளர் ஆகிய பதவிகளில் 145 காலி பணி இடங்களை நேரடி நியமன முறையில் நிரப்ப இருக்கிறது.
பொறியாளர் பதவியில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், கெமிக்கல் ஆகிய பாடப்பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. பொறியாளர் பதவிக்கு மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் பி.இ. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 27. எம்.இ. அல்லது எம்.பி.ஏ. பட்டதாரியாக இருந்தால் வயது வரம்பு 29.
மனிதவள மேலாளர் பணிக்கு மனிதவள மேம்பாடு, தொழிலாளர் மேலாண்மை, தொழில் உறவுகள், சமூகப் பணி, தொழிலாளர் நலம் ஆகியவற்றில் முழுநேர முதுகலை பட்டப் படிப்பு அல்லது டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நிதி மேலாளர் பதவிக்கு சி.ஏ. அல்லது ஐசிடபிள்யுஏஐ முடித்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 29. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (ஆன்லைன்), நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இறுதித் தேர்வின்போது எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணுக்கு 75 சதவீதமும் நேர்முகத் தேர்வுக்கு 25 சதவீதமும் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். எழுத்துத் தேர்வு மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெறும்.
தகுதியுள்ள பட்டதாரிகள் https://careers.bhel.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி மே 6-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பொறியாளர் பணிக்கு ஆரம்ப நிலையில் ரூ. 1 லட்சம் சம்பளம் கிடைக்கும். கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.