Last Updated : 01 Apr, 2019 11:24 AM

 

Published : 01 Apr 2019 11:24 AM
Last Updated : 01 Apr 2019 11:24 AM

சபாஷ் சாணக்கியா: தங்க கூண்டு!

விருந்தாளியாய் வந்தவரே, எப்பொழுது போவாயப்பா?' (அதீதி,தும் கப் ஜாயெகே?) என ஓர் இந்திப்படம் 2010-ல் வந்தது. ஒரு விருந்தாளியாய் வந்தவர் வீட்டின் உரிமையாளர்களை எப்படியெல்லாம் படுத்துகிறார் என்பதை நகைச்சுவையாகவும், சிந்திக்கும்படியும் அழகாய்ச் சொல்லியிருப்பார்கள்.

பரேஷ் ராவல், கிராமத்திலிருந்து நகரத்தில் இருக்கும் அஜய் தேவ்கன் வீட்டுக்கு வந்து தங்கும் தூரத்து உறவுக்காரராக நடித்து இருப்பார். ராவல் வரவால், தேவ்கன் மனைவியும், மகனும் படும் இன்னல்கள் சொல்லி மாளாது. குடியிருப்பில் நுழைந்தவுடனேயே காவலாளியுடன் தகராறு செய்து அந்தக் காவலாளிக்கு இரண்டு அறையும் விடுவார்! யாரைப் பார்த்தாலும், ‘வாங்க என் காலைத் தொட்டுக் கும்பிடுங்க, என்னிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளுங்கள்' எனப் படுத்துவார்.

வந்த வீட்டில், சும்மா இருக்க மாட்டார். அங்கு நடக்கும் ஒவ்வொன்றிலும் தன் மூக்கை நுழைப்பார்! வீட்டைக் கூட்டிப் பெருக்கும் பணிப்பெண் பின்னாடியே சென்று இவர், ‘இங்கே குப்பையைத் தட்டு, அங்கே குப்பையைக் கூட்டு' என்பார். அந்த அம்மாவோ கோபித்துக் கொண்டு, துடைப்பத்தைப் போட்டு விட்டு, ‘இந்த ஆள் இங்கு இருக்கும் வரை, நான்  வேலைக்கே வர மாட்டேன்' என்று சொல்லி போயே போய் விடுவாள்!

சாப்பாடு விஷயத்தில், ராவலின் அளப்பறை அளவில்லாமல் இருக்கும். மற்றவர்களுக்குச் சமைப்பதைத் தானும் சாப்பிடுவோமே என விட்டுக் கொடுத்துப் போக மாட்டார். வேளா வேளைக்குப் பரோட்டா, இரண்டு காய்கறிகள், சாதம், தயிர்ப்பச்சடி என சமைக்கச் சொல்லி, தேவ்கன் மனைவியைப் பாடாய்ப் படுத்துவார். இந்தப் படத்தை யூடியூபிலும் பார்க்கலாம். வசனம் புரிந்தால் இன்னும் ரசிப்பீர்கள்.

‘மீனை அதிக நேரம் வைத்திருந்தால் துர்வாசனை தாங்காது. விருந்தினர்களும் அப்படித்தான்' எனப் பெஞ்சமின் பிராங்க்ளின் சொல்வது உண்மை தானே?

2014-ல் வெளிவந்த மஞ்சப்பை தமிழ்ப்படத்திலும் இப்படித்தான். ராஜ்கிரண் விமலின் தாத்தா. விருந்தாளியாய் வந்த அவர் நிறையக் கலாட்டா பண்ணுவார். விமலின் காதலியான லட்சுமி மேனன் ஆசை ஆசையாய் வாங்கிக் கொடுத்த சட்டையைத் தூக்கி விமலைப் பார்க்க வந்தவனிடம் தாராளப் பிரபுவாய் தானம் செய்து விடுவார் ராஜ்கிரண்!

தம்பி, விருந்தாளிகளை வைத்துச் சமாளிப்பது சிரமம், தொந்தரவானது என்பது உண்மை தான். ஆனால் அதை விட வேதனை அளிப்பது, மற்றவர் வீட்டில் அழையாத, வேண்டாத விருந்தாளியாகத் தங்கும் நிர்ப்பந்தம் ஏற்படுவதுதானே?

கஜா புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களின் பொழுது உறவினர்கள், நண்பர்கள் அல்லது உதவிக்கரம் நீட்டிய நல்ல உள்ளங்களின்  வீடுகளில் தங்க நேரிட்டவர்களின் மனநிலையை நினைத்துப் பாருங்கள். நன்றி உணர்ச்சி இருந்திருக்கும். ஆனால், நம் நிலைமை இப்படி ஆகி விட்டதே எனும் ஆற்றாமை மேலோங்கியிருக்கும்.

60 வயதை நெருங்குபவர்கள், அல்லது அதைத் தாண்டி விட்டவர்களுடன் பேசிப் பாருங்கள். பொருளாதார சுதந்திரம் மிக முக்கியம் என்பார்கள் அவர்கள். அதற்குத் திட்டமிட்டு முன்னதாகவே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என்பார்கள். அத்துடன் எல்லோருக்கும் ஒரு தனிமை (personal space), தன் விருப்பம் போல் நடந்து கொள்ளக் கூடிய சுதந்திரம் வேண்டும் என்பார்கள். காலையில் எத்தனை மணிக்கு  வேண்டுமானாலும் எழுந்திரிக்கலாம், நினைத்த போது சாப்பிடலாம், பிடித்த தொலைக்காட்சி சானலைப் பார்க்கலாம்... இத்யாதி!

இதெல்லாம் சொந்த வீட்டில் மட்டுமே சாத்தியம் இல்லையா? மகன் வீடாக இருந்தாலும், மகள் வீடாக இருந்தாலும் அவர்கள் அலுவலகம் செல்லும் நேரம், உங்கள் பேரக் குழந்தைகளின் பள்ளி, கல்லூரி நேரம் போன்றவற்றை அனுசரித்து நீங்கள் உங்கள் காலைக் கடமைகளுக்கான நேரத்தை மாற்றிக் கொள்ளத்தானே வேண்டும்?

எனது நண்பர் ஒருவர். 73 வயது. மனைவியும் அவருமாக மகள் வீட்டில் தங்கி உள்ளார்கள். தாராளமாக ஓய்வூதியம் வருகிறது. செலவிற்குக் கவலையில்லை. மகளும் மாப்பிள்ளையும் அலுவலகம் சென்று விடுவதால், நண்பர் பேரனைப் பள்ளியில் விட்டுக் கூட்டி வருகிறார். அவர் மனைவி பேத்திக்குத் தலை பின்னி விடுகிறார். கணிதம் சொல்லிக் கொடுக்கிறார்.

இவர்கள் உதவி அவர்களுக்குத் தேவை. அவர்களது ஆதரவும் வயதான இவர்களுக்கு நல்லதே. இருப்பினும் அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘நாங்கள் பிள்ளைகளுக்கு உதவியாக இருக்கும் வரை மட்டுமே கூட இருப்போம். பின்னர் மகள் வீட்டுக்கு அருகில் தனி குடியிருப்புக்கு சென்று விடுவோம். உதவிக்கு ஆள் வைத்துக் கொள்வோம். அடிக்கடி ஏன் தினமும் கூட மகள் குடும்பத்தைச் சந்திப்போம். ஆனால் எங்கள் வீடு தனி. எங்கள் சுதந்திரம் தனி' என்றார்!

‘மற்றவர் வீட்டில் தங்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், அது யாருக்கும் மிகுந்த துன்பம் கொடுக்கும்' என்கிறார் சாணக்கியர்! உண்மை தானே? யோசித்துப் பாருங்கள்! கூடிய வரை தவிர்த்து விடுங்கள்!

- somaiah.veerappan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x