Published : 22 Apr 2019 11:43 AM
Last Updated : 22 Apr 2019 11:43 AM

அதிர்ஷ்டம் சார்ந்த ஐபிஓ சந்தை

நிறுவனங்களின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ), சிறு முதலீட்டாளர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பு என்பதில் சந்தேகமில்லை. கடந்த வாரம் பாலிகேப் இந்தியா மற்றும் மெட்ரோபொலிஸ் ஆகிய நிறுவனங்கள் பொதுப் பங்குகளை வெளியிட்டன. இவ்விரு நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளுக்கும் எதிர்பார்த்ததை விட கூடுதல் விண்ணப்பங்கள் (ஓவர் சப்ஸ்கிரிப்ஷன்) வந்தன. ஆனால் சிறு முதலீட்டாளர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பங்குகள் கிடைத்தனவா என்றால் இல்லை என்றுதான் பதில் கிடைக்கிறது.

அதற்கான காரணம் என்ன? பொது பங்குகளுக்கு கூடுதல் வரவேற்பு கிடைத்தாலும், சிறு முதலீட்டாளர்களுக்கு குறைந்த அளவிலான பங்குகளே ஒதுக்கப்படுகின்றன. பங்குச் சந்தையில் பட்டிய லிடும்போது அவற்றின் விலை அதிகரிக்கும் போது ஆர்வம் மேலிடத்தான் செய்கிறது. ஆனால் ரூ. 2 லட்சம் என்ற வரம்புதான் சில்லரை வர்த்தகர்களுக்கான அளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஐபிஓ ஒதுக்கீட்டில் நிலவும் இந்த பாரபட்சமான நிலையை முதலில் நீக்க வேண்டியது அவசியமாகும்.

குறைந்தபட்ச ஒதுக்கீடு

2012-ம் ஆண்டுக்கு முன்பு வரை, சிறு முதலீட்டாளர்களுக்கு அவர்கள் கோரிய விலை அடிப்படையில் பங்குகள் ஒதுக்கப்பட்டன. அதாவது சில்லரை முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கிய அளவில் அவர்கள் கேட்கும் விலை அடிப்படையில் பங்குகள் ஒதுக்கப்பட்டன. ஒரு வேளை சில்லரை வர்த்தகத்துக்கான ஒதுக்கீட்டு அளவைக் காட்டிலும் இரு மடங்கு விண்ணப்பங்கள் வந்திருந்தால், நீங்கள் 200 பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தால் உங்களுக்கு 100 பங்குகள் ஒதுக்கப்படும்.

ஆனால் இத்தகைய ஒதுக்கீடு முறை பிற பிரச்சினைகளுக்குக் காரணமானது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக 2012-ம் ஆண்டில் பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) பங்கு ஒதுக்கீட்டில் புதிய முறையைக் கொண்டுவந்தது. அதாவது முதலீட்டாளர் கேட்கும் விலை அடிப்படையில் பங்குகளை ஒதுக்காமல், சில்லரை முதலீட்டாளர்களுக்கான பங்குகளை ஒதுக்குவதில் குலுக்கல் முறையை பின்பற்றலாம் என்றும், இதன்படி அனைத்து சிறு முதலீட்டாளர்களது கோரிக்கை விண்ணப்பங்களையும் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய உத்தரவிட்டது.

இதன்படி அனைத்து சிறு முதலீட்டாளர்களும், அதாவது குறைந்தபட்ச பங்குகளுக்கு விண்ணப்பித்தவர்களும் இந்த குலுக்கலில் இடம்பெறுவர். ஒவ்வொரு சிறு முதலீட்டாளர்களும், அவர்கள் எத்தனை பங்குகளுக்கு விண்ணப்பித்திருந்தாலும், பங்குகள் இருப்பதைப் பொருத்து அவர்களுக்கு கிடைக்கும். இதன்படி குறைந்தபட்ச முதலீடானது ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை என நிர்ணயிக்கப்பட்டது. முன்னர் இது ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை என இருந்தது. ஐபிஓ வெளியிடும் நிறுவனங்கள், இதற்கேற்ப குறைந்தபட்ச விண்ணப்ப அளவை நிர்ணயித்து, செபி விதிமுறையை பூர்த்தி செய்தன.

இதன் அடிப்படையில் சமீபத்தில் வெளியான இரண்டு ஐபிஓ-க்களை பார்க்கலாம். மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் ஐபிஓ நிர்ணயித்த விலை ரூ. 877 முதல் ரூ. 880 வரையாகும். இதன்படி 17 பங்குகள் ரூ. 14,960-க்கு வாங்க முடியும். அதேபோல பாலிகேப் இந்தியா நிறுவன பங்கு விலை ரூ. 533 முதல் ரூ. 538 என நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி 27 பங்குகளை ரூ. 14,526-க்கு வாங்கலாம். பங்கு வெளியீடுகளை பரிசீலிக்கும் போது சிறு முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் பங்குகளையாவது பெற முடியும்.

ஆனால் மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் மற்றும் பாலிகேப் இந்தியா நிறுவனத்தைப் பொருத்தமட்டில் இரு நிறுவனங்களுக்கும் எதிர்பார்த்ததற்கும் மேலாக விண்ணப்பங்கள் குவிந்தன. பாலிகேப் இந்தியாவைப் பொருத்தமட் டில், சில்லரை முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு 86.96 லட்சம் பங்குகளாகும். ஆனால் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை 383.64 லட்சமாகும்.

மொத்தம் ஒதுக்கியுள்ள 8.96 லட்சம் பங்குகளில் ஒரு ஒதுக்கீட்டுக்கு 27 பங்குகள் என்ற அடிப்படையில் 3.2 லட்சம் ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும். ஆனால் நிறுவனத்துக்கு வந்த அபரிமிதமான விண்ணப்பங்களின் (383.64 லட்சத்தில் ஒருவருக்கு 27 பங்கு என்பதாக) அடிப்படையில் பார்த்தால் 14.2 லட்சம் ஒதுக்கீடுகள் செய்ய வேண்டியிருக்கும்.

நிறுவனம் 11 லட்சம் ஒதுக்கீடுகளை மறுத்துவிட்டு 3.2 லட்சம் ஒதுக்கீடுகளுக்கு குலுக்கல் நடத்தும் இதேபோல மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் நிறுவனமும் ஒதுக்கீடு செய்தது. இதன்படி அதிர்ஷ்டசாலி முதலீட்டாளர்கள் சிலருக்கு மட்டுமே பங்கு ஒதுக்கீடு கிடைத்தது. இருந்தாலும் ஐபிஓ-க்களில் பெருமளவு விண்ணப்பங்கள் கோரியவர்களுக்கு, பங்குகள் பட்டியலிடப்படும் போது அதிக லாபம் கிடைத்தது. குறைந்த பங்குகள் கிடைத்தால் உங்களுக்கான வருவாயும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது.

என்ன செய்யலாம்?

பங்குகள் கிடைப்பதில் உங்களது வாய்ப்புகளை அதிகரித்துக் கொள்வதற்கான வழிகளும் உள்ளன. பொதுப் பங்குகளுக்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் விண்ணப்பம் செய்யலாம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவேளை கூடுதல் விண்ணப்பங்கள் வரப்பெற்று குலுக்கல் முறை நடத்தப்பட்டால் உங்களுக்குக் கிடைக்காவிட்டாலும், குடும்ப உறுப்பினர்களில் எவருக்காவது அதிர்ஷ்டமிருந்தால் ஒதுக்கீடு கிடைக்கலாம்.

rajalakshmi.nirmal@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x