Published : 08 Sep 2014 03:03 PM
Last Updated : 08 Sep 2014 03:03 PM

சிவில் நீதிபதி காலிப் பணியிடங்கள்

தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள 162 சிவில் நீதிபதிப் பணியிடங்களைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நிரப்ப உள்ளது. உரிய தகுதியுடையோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். இதற்கான விண்ணப்பங்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் தயார்நிலையில் உள்ளன. செப்டம்பர் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

வயது: 01.07.2014 அன்று, வழக்கறிஞர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் விண்ணப்பதாரர்களில் பொதுப்பிரிவினர் 25-35 வயதுக்குள்ளும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி உள்ளிட்ட இட ஒதுக்கீட்டுச் சலுகை கொண்டோர் 25-40 வயதுக்குள்ளும், புதிதாக சட்டம் முடித்துள்ளவர்கள் 22-27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டத் துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன், வழக்கறிஞராக மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற்ற அனுபவம் வேண்டும். சட்டம் முடித்துப் பயிற்சியில் ஈடுபடாத விண்ணப்பதாரர்களில் பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், பிற பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருப்பதுடன் பார் கவுன்சிலில் பதிவு செய்யும் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு 18.10.2014 மற்றும்

19.10.2014 ஆகிய நாள்களில் நடைபெறும். சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட ஒன்பது மையங்களில் தேர்வு நடத்தப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்ப கட்டணம் ரூ. 50, தேர்வுக் கட்டணம் ரூ. 125. மொத்தக் கட்டணம் ரூ. 175. இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் மட்டும் கட்டினால் போதும். டி.என்.பி.எஸ்.சி.யில் ஒன்-டைம் ரிஜிஸ்ட்ரேஷன் முறையில் பதிவு செய்துவைத்திருப்போர் தேர்வுக் கட்டணம் மட்டும் கட்டினால் போதுமானது. கட்டணத்தை ஆன்லைனிலோ, ஆஃப்லைனிலோ கட்டலாம். ஆஃப்லைனில் தபால் நிலையம், வங்கிகளில் விண்ணப்பித்ததிலிருந்து இரு நாள்களுக்குள் கட்ட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

உரிய தகுதியுடையோர் www.tnpsc.gov.in என்னும் இணையதளத்திலோ www.tnpscexams.net என்னும் இணையதளத்திலோ செப்டம்பர் 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய நாள்கள்:

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21.09.2014

ஆஃப்லைனில் விண்ணப்பக் கட்டணம் கட்டக் கடைசி நாள்: 23.09.2014

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்கள் மற்றும் நேரம்: 18.10.2014 மற்றும் 19.10.2014. நேரம் காலை 09:00-12:00 மற்றும்

மாலை 02:00-05:00

அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் காலியிடங்கள்

அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் முன்னுரிமை வகுப்பினரைச் சேர்ந்த பிரிவினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிப்போரின் வயது 32 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அடிப்படை கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சியும், தொழிற்நுட்ப கல்வித் தகுதியாக கம்மியர் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இத்தகைய தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், குன்னூர்-1, நீலகிரி மாவட்டம் என்ற முகவரிக்கு செப்டம்பர் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும், இதுதொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 0423-2231759 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு: >www.tnpsc.gov.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x