Published : 15 Apr 2019 12:49 pm

Updated : 15 Apr 2019 12:49 pm

 

Published : 15 Apr 2019 12:49 PM
Last Updated : 15 Apr 2019 12:49 PM

யு டர்ன் 15: டி.டி.கே. குழுமம் – எதிர்நீச்சல்

15

ஜகன்னாதனுக்குத் தோன்றிய முதல் யோசனை, எல்லாக் கம்பெனிகளையும் விற்றுக் கடன்களை அடைத்துவிடலாம். மும்பை போனார். பல கம்பெனிகளை, இடைத்தரகர்களைச் சந்தித்தார். கடன் சுமை கொண்ட அவர் கம்பெனிகளைச் சீண்ட ஒருவருமே தயாராக இல்லை. வேறு வழியில்லை. கம்பெனிகளை நடத்தியே ஆகவேண்டும். எதிர்நீச்சல் போட்டே ஆகவேண்டும்.

குழுமத்தின் அத்தனை கம்பெனிகளின் பிரச்சினைகளுக்கும் ஒரே நேரத்தில் தீர்வு காண நினைப்பது பகல்கனவு. ஒவ்வொரு கம்பெனியாகக் கைகளில் எடுக்க முடிவெடுத்தார். எங்கே, நஷ்டமும், கடன்சுமையும் அதிகமோ, அங்கே முதல் முயற்சி.


அப்படித் தேர்வானது, மேப்ஸ் அண்ட் அட்லஸஸ் நிறுவனம். வருடம் 60 லட்சம் நஷ்டம். குழுமத்தின் மொத்தக் கடனான ரூ.10 கோடியில், ரூ.2.5 கோடி இங்கேதான். ஜெர்மன் கூட்டுறவில் 1965 ல் தொடங்கப்பட்டது.

அன்றைய இந்தியாவின் மக்கள் தொகை 80 கோடி; பள்ளி செல்லும் சிறுவர், சிறுமிகள் 30 கோடி. இந்த அடிப்படையில், உலக அடிப்படையில், ஆண்டுக்கு 6 கோடி அட்லஸ் களும், 30 கோடி தேசப்படங்களும் விற்பனையா கும் என்று கணித்தார்கள்.

 எவரெஸ்ட் ஏற நினைத்தவன் பரங்கிமலை உச்சிக்குப் போன கதை. விற்பனை எண்ணிக்கை லட்சங்களில். 2 லட் சம் சதுரஅடிப் பிரம்மாண்டத் தொழிற்சாலையில் இருந்த நவீன எந்திரங்கள் குறட்டை விட்டன. நாளுக்கு நாள் எகிறும் வட்டிச்சுமை, நஷ்டம்.

அட்லஸ்களையும், தேசப்படங்களையும் மட்டுமே நம்பியிருந்தால், கம்பெனிக்குப் பூட்டுத்தான் என்று ஜகன்னாதன் உணர்ந்தார். என்ன செய்யலாம்? கையில் இருப்பவை அச்சு எந்திரங்கள். இவற்றில் எதையும் அச்சிடலாமே? இது கம்பெனிக்கு வாழ்வா, சாவா கேள்வி. தமிழ்நாட்டு அரசின் பாடநூல்களை அச்சிடும் ஆர்டர் வாங்கினார்.

தொடர்ந்து, சிறியவை, பெரியவை என்று பாகுபாடில்லாமல், பணம் வரும் அத்தனை ஆர்டர்களையும் ஏற்றார்கள். அடுத்து, குழுமத் தயாரிப்பான உட்வேர்ட்ஸ் கிரைப் வாட்டர் பாட்டிலின் லேபில்கள் அச்சிடும் பணி. மேப்ஸ் அண்ட் அட்லஸஸ் தீயை ஜகன்னாதன் அணைத்துவிட்டார். முதல் முயற்சி சக்ஸஸ்!

ஜகன்னாதன் குழுமத்தில் இருந்த நஷ்டக் கம்பெனிகளை ஆராய்ந்தார். அங்கே, முக்கிய காரணம் உயர் அதிகாரிகளின் நேர்மையின்மை, ஊழல். ஏகதேசம் எல்லோர் கைகளிலும் கறை. தவறு செய்தோரைத் தண்டித்தால், அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பவேண்டிய கட்டாயம்.

ஆகவே, அதிரடி நடவடிக்கைகள் எடுக்க முடியாது. முள்ளில் விழுந்த சேலையை எடுப்பது போல், ராஜதந்திரமாகக் கையாள வேண்டும். நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவர் தேவை. யார் அவர்?

அப்பா ஏற்கெனவே பிசினஸிலிருந்து விலகிவிட்டார். அண்ணன் மதுவின் அடிமை. அண்ணி அண்ணனை மீட்கும் பணிகளில். தம்பி சிறுவன். மிச்சம் அம்மா. பிசினஸ் அனுபவமே இல்லாத குடும்பத் தலைவி. அம்மா அலுவலகம் வரலாமா என்று அப்பாவிடம் அனுமதி கேட்டார். அவர் சம்மதிக்க, பத்மா நரசிம்மன் 1974 முதல் தினமும் அலுவலகம் வரத் தொடங்கினார்.

 தனக்கு இட்ட பணியை அம்மா கனகச்சிதமாகச் செய்தார். தவறு செய்தவர்களில் சிலரைத் திருத்தினார், சிலரை வேலையிலிருந்து துரத்தினார். குடும்ப வளையம் தாண்டி வெளியே வராத அம்மாவிடம் இத்தனை திறமை தூங் கிக் கிடந்ததா என்று ஜகன்னாதனுக்கே ஆச்சரி யம்! வீட்டுக்கு மட்டுமே வெளிச்சம் தந்த குத்து விளக்கைக் குன்றிலிட்ட தீபமாக்கிய பெருமிதம்.

1975. வந்தது புதிய சவால். டி.டி.கே. குழுமம் பெங்களூருவில் பிரெஸ்டிஜ் என்னும் பிராண்டில் பிரெஷர் குக்கர்கள் தயாரித்தார்கள். லாபம் பார்த்துக்கொண்டிருந்த ஒரே கம்பெனி இதுதான். இங்கே நிர்வாக இயக்குநராக இருந்தவர் இந்தத் தொழிற்சாலையைத் தன் சொந்த சாம்ராஜ்ஜியமாக நடத்திக்கொண்டிருந்தார்.

நரசிம்மனும், அவர் குடும்பத்தினரும் பிரெஸ்டிஜ் ஊழியர்கள் உழைப்பில் வரும் லாபத்தைச் சுரண்டி, சென்னையில் இருக்கும் நஷ்டக் கம்பெனிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்று தூபம் போட்டார். தொழிலாளிகள் முழுக்க அவர் பக்கம். குடும்பத்தின்மீது தொழிலாளிகளுக்கு வெறுப்பு.

நரசிம்மன் அந்த நிர்வாக இயக்குநரை பதவியிலிருந்து துரத்தினார். பெங்களூரு போய் அந்தப் பொறுப்பை ஏற்குமாறு ஜகன்னாதனை அனுப்பினார். தொழிற்சாலைக்குப் போன ஜகன்னாதனுக்கு அதிர்ச்சி. செக்யூரிட்டி அவரை உள்ளே விட மறுத்தார். ஆமாம், சொந்தக் கம்பெனிக்குள்ளேயே நுழைய அனுமதி இல்லை. போலீஸுக்கு ஃபோன்.

அவர்கள் பாதுகாப்புடன் உள்ளே போனார். தொழிலாளர்களின் எதிர்ப்புக் கோஷ வரவேற்பு. நிர்வாக இயக்குநர் அறையில் அவர் உட்காரக்கூடாது என்று தடுத்தார்கள். அவர்கள் என்று சம்மதம் தருகிறார்களோ, அன்றுதான் அந்த அறைக்குள் காலெடுத்து வைப்பேன் என்று உறுதிமொழி தந்தார்.

காலியாக இருந்த ஒரு சிறிய அறையிலிருந்து செயல்படத் தொடங்கினார். ஒரு சிலர் தவிர மற்ற எவருடனும் பேச்சு வார்த்தை கிடையாது. ஒருவிதச் சிறை வாழ்க்கை. இப்படியே நகர்ந்தன சில மாதங்கள்.

பிரெஷர் குக்கரில் ஏராளமான பாகங்கள் அலுமினியத்தாலானவை. இந்தியாவில் அலுமினியத் தட்டுப்பாடு. அரசாங்கம் ரேஷன் முறையில் வழங்கியது. முந்தைய நிர்வாகம் செய்த ஒரு தவறால், கம்பெனிக்கு அலுமினியம் கிடைக்கவில்லை.

தொழிற்சாலையை மூடினார்கள். 400 ஊழியர்கள் வீட்டில். ஜகன்னாதன் டெல்லி போனார். அங்கே நான்கு மாதங்கள் தங்கினார். உற்பத்திக்குத் தேவையான மாதம் 35 டன் சப்ளைக்கான அரசாணையோடு திரும்பினார்.

கம்பெனியையும், வேலையையும் காப்பாற்றிய அவரைப் புது மதிப்போடும், மரியாதையோடும் தொழிலாளிகள் பார்க்கத் தொடங்கினார்கள். நிர்வாக இயக்குநர் அறையில் அவர்களே உட்கார வைத்தார்கள்.

தொழிலாளர் நல்லுறவும், உற்பத்தியும் சீராகிவிட்டன. கம்பெனி முன்னேற்றத்தில் ஜகன்னாதன் கவனம் காட்டினார். வந்தது ஒரு அபாய அறிவிப்பு. உத்தரப்பிரதேச லக்னெள நகர் விநியோகஸ்தரிடமிருந்து ஃபோன். பல வீடுகளில் பிரெஸ்டிஜ் பிரஷர் குக்கர் வெடிப்பு. நல்லகாலமாக, உயிர்ச்சேதம் எதுவும் நிகழவில்லை. ஆனால், பொதுமக்கள் மனங்களில் பயம். பிரெஸ்டிஜ் பிரஷர் குக்கர் வாங்குவதை நிறுத்தினார்கள். விற்பனை சரிந்தது.

சேதி கிடைத்தவுடன் ஜகன்னாதன் லக்னோ பறந்தார். இந்தமாதிரிப் பிரச்சினைகளுக்குக் கம்பெனிகள் சர்வீஸ் எஞ்சினீயரைத்தான் அனுப்புவார்கள். சி.இ.ஓ வே வந்திருக்கிறார். கஸ்டமர் சேவைக்கு இத்தனை முக்கியத்துவம் தருகிறார்களா? இந்தியா முழுக்க இருந்த விநியோகஸ்தர்களிடம் பிரமிப்பு. உறவுச் சங்கிலியில் அதிக நெருக்கம்.

குக்கர் வெடிப்புக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டுபிடித்து வேரோடு களையவேண்டும் என்று அவர் ஐ.ஐ.டி. எஞ்சினீயரிங் மூளை சொன்னது. ஆராய்ந்தார். .

பிரஷர் குக்கரின் அடிப்படைத் தத்துவம் அதன் உட்பாத்திரத்தில் நீராவியை உருவாக்கி, அதன் அழுத்தத்தைப் பயன்படுத்திச் சமையல் செய்வது. இந்த அழுத்தம் அளவுக்கு அதிகமாகும்போது, குக்கரின் மேலிருக்கும் வால்வ் (Valve) திறக்கும். இதன்மூலம் நீராவி வெளியாகி, குக்கரின் உட்பக்க அழுத்தத்தைக் குறைக்கும்.

சில சமயங்களில் ஏதேனும் உணவுப்பருக்கையோ, காய்கறியோ, மாமிசத் துண்டோ வால்வை அடைத்துக்கொண்டால், உள்ளிருக்கும் நீராவி வெளியேற முடியாது. குக்கர் வெடிக்கும்.

குக்கரில் காஸ்க்கெட் (Gasket) என்னும் ரப்பர் வளையம் இருக்கிறது. வால்வ் அடைத்துக்கொண்டாலோ அல்லது உள் அழுத்தம் அதிகமானாலோ, இந்தக் காஸ்க்கெட் தானாகவே உயர்ந்து, நீராவியை வெளியேற்றும் காஸ்க்கெட் ரிலீஸ் சிஸ்டம் (Gasket Release System சுருக்கமாக GRS) என்னும் பாதுகாப்பு முறையை எல்லா பிரெஸ்டிஜ் பிரஷர் குக்கர்களிலும் ஜகன்னாதன் அறிமுகம் செய்தார். வேறு எந்தப் பிரெஷர் குக்கரிலும் இல்லாத இந்தப் புதுமையால், மக்கள் நம்பிக்கை மீண்டது. விற்பனை முந்தியது.

பிரெஸ்டிஜ் கம்பெனி, குக்கரைத் தாண்டி, பல அடுக்களை உபகரணங்களைச் சந்தைக்குக் கொண்டுவந்தார்கள். இல்லத்தரசிக்கு உதவும் நம்பர் 1 கம்பெனியாகப் பிரெஸ்டிஜின் விஸ்வரூபம் ஆரம்பம். வளர்ச்சி தொடரவும், தாங்கள் அறிமுகம் செய்யும் GRS போன்ற புதுமை அம்சங்கள் போன்றவை மக்களைச் சென்றடையவும் விளம்பரம் மிக முக்கியம் என்பதை ஜகன்னாதன் உணர்ந்தார். 2001 ல் விளம்பரங்கள் தொடங்கின.

‘‘மனைவியை நேசிக்கிறவங்க பிரெஸ்டிஜை எப்படி வேண்டாம்ன்னு சொல்லுவாங்க?” என்னும் தொலைக்காட்சி விளம்பர வாக்கியம் மக்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்டது. 1994. பிரெஸ்டிஜ் கம்பெனியைப் பொதுநிறுவனமாக்கி, பங்குகளைச் சந்தையில் இறக்கினார். கேட்டதைவிட 13 மடங்கு அதிக முதலீடு தரும் விண்ணப்பங்கள் (Over-subscription).

இதே சமயம், சென்னையிலும் ஜகன்னாதன் தன் கவனத்தை வைத்திருந்தார். குழுமத்தில் 18 நிறுவனங்கள் இருந்தன. தீவுகளாகச் செயல்பட்டார்கள். இதனால், ஒரே பணிகளைப் பல்வேறு நிறுவனங்களில் செய்தார்கள்.

வீண் உழைப்பு, பண விரயம், நிர்வாகக் குழப்பங்கள். ஜகன்னாதன் பணிகளை ஒருங்கிணைத்து ஐந்து நிறுவனங்களாக்கினார். ஒவ்வொரு அமைப்பின் பொறுப்புகளையும் தெளிவாக வரையறுத் தார்.

இதற்குப் பிறகும், பல தவறுகள், சறுக்கல்கள். ஆனால், கீழே விழுந்தபோதெல்லாம், புது உத்வேகத்தோடு எழும் விடாமுயற்சி. இன்று டி. டி. கே. பிரஸ்டீஜின் ஆண்டு விற்பனை ரூ.1,700 கோடிக்கும் மேல்; சந்தை மதிப்பு 10,000 கோடிக்கும் அதிகம்.

குழுமத்தின் டி.டி.கே. பிரிட்டீஷ் ஹோல்டிங்ஸ் லிமிட்டெட், டி.டி.கே. ஹெல்த்கேர் லிமிட்டெட், டி.டிகே. சர்வீசஸ் பிரைவேட் லிமிட்டெட், ஸிக்னா டி.டி.கே. ஹெல்த் இன்ஷூரன்ஸ் லிமிட்டெட் ஆகிய நான்கு நிறுவனங்களும் ஆரோக்கியமாய்.

இந்தச் சாதனையெல்லாம் சரி. பாதியில் படிப்பை நிறுத்தி, அமெரிக்காவிலிருந்து ஜகன்னாதனை அவர் அம்மாவும், அப்பாவும் எதற்காக இந்தியா அழைத்து வந்தார்கள்? குழுமத்தின் கடன்களை அடைக்க. இந்தக் கடமையைச் செய்து முடித்தாரா?

ஆமாம். 2002 ல், அதாவது 30 வருடங்களில் முழுக்கடன்களையும் தீர்த்துவிட்டார். ஆனால், இதில் ஜகன்னாதனுக்குத் தீராத ஒரு சோகம் உண்டு. அவர் அம்மாவும் அப்பாவும் இந்தப் பொன்னான நாளைப் பார்க்க இருக்கவில்லை. இருவரும் 2000 ம் ஆண்டிலேயே மறைந்துவிட்டார்கள்.


எஸ்.எல்.வி.மூர்த்தி தொடர்நிர்வாகத் திறன்வெற்றிக் கதைகள்நம்பிக்கைக் கதைதன்னம்பிக்கை கதைடி.டி.கே. குழுமம்யு டர்ன்TTK GroupTTK historyStory of TTKஎதிர்நீச்சல்Over-subscriptionGasketGasket Release System GRSமேப்ஸ் அண்ட் அட்லஸஸ் நிறுவனம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x