Published : 29 Apr 2019 12:10 PM
Last Updated : 29 Apr 2019 12:10 PM

செயலிகளை அப்டேட் செய்வது அவசியமா?

இன்று பெரும்பாலானவர்களிடம் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. பெரும்பாலானோருக்கு உலகமே அதுதான். விளையாட்டு முதல் வங்கி சேவைகள் வரை அனைத்தும் இருந்த இடத்திலேயே லட்டு மாதிரி கிடைக்கிறது என்றால் சும்மாவா? அதேசமயம், ஸ்மார்ட்போன்களில் பொதுவாகச் சந்திக்கும் சில தொந்தரவுகள் நம் உயிரை வாங்கிவிடுவதையும் மறுக்க முடியாது. அதில் மிக முக்கியமானது என்று பார்த்தால் மொபைலில் உள்ள ஆப்கள் (செயலிகள்) அனைத்தும் அடிக்கடி அப்டேட்... அப்டேட்... என்று கேட்பது.

அதுவும் அவசரமாக ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும், அவசரமாக ஒரு இடத்துக்கு செல்ல டாக்சி புக் செய்ய வேண்டும் என்று ஓப்பன் செய்யும்போதுதான் ‘லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் செய்யவும்’ என்று சொல்லி கடுப்பேற்றும். சரி அப்டேட் செய்யலாம் என்று பார்த்தால், அதற்கு போதுமான மெமரி இல்லை என்று மேலும் நம் டென்ஷனை அதிகரிக்கும்.

விஷயத்துக்கு வருவோம், மொபைலில் உள்ள ஆப்களை அப்டேட் செய்யலாமா, வேண்டாமா? அப்டேட் செய்வது அவசியமா? மார்ச் 2019 நிலவரப்படி உலகில் 75.33 சதவீத மொபைல்கள் ஆண்ட்ராய்ட், 22.4 சதவீதம் தான் ஆப்பிள் ஐஓஎஸ். அப்டேட் கேட்பதில் ஆப்பிள் ஐஓஎஸ்ஸை காட்டிலும் ஆண்ட்ராய்டுதான் அதிகமாம். அப்டேட் கேட்பதற்கு சில காரணங்கள் உள்ளன.

மொபைலைப் பொருத்தவரை அதன் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அல்லது யூசர் இன்டர்ஃபேஸ் ஒரு ஆப்பின் செயல்பாட்டுக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அதற்கேற்ப சில மேம்பாடுகளை அந்தந்த ஆப்கள் தங்களை அப்டேட் செய்துகொள்ளும். பிற காரணங்களும் உள்ளன. ஒன்று, தொடர்ந்து அதிகரித்துவரும் இணைய தாக்குதல்கள் (cyber attacks); இரண்டு, போட்டியாளர்களை எதிர்கொள்ள தொடர்ந்து புதுப்புது அம்சங்களைப் புகுத்துவது.  இந்தக் காரணங்களினால்தான் ஆப்கள் அவ்வப்போது அப்டேட் செய்ய சொல்லுகின்றன.

இதில் முக்கியமானது ‘பக் ஃபிக்சிங்’. ஆப் நிறுவனங்கள் அந்தந்த ஆப்களில் உருவாகும்பிரச்சினைகளை பக் ஃபிக்சிங் மூலம் சரிசெய்யும். மேலும், சில நேரங்களில் அரசு கொள்கைகள் மூலமும் சில மாற்றங்கள் நிகழலாம். அதற்கேற்பவும் ஆப்களில் மாற்றங்கள் செய்யப்படும்.

ஒவ்வொரு அப்டேட்டுக்கும் ஆப் டெவலப்பர்கள் பல வரிகளுக்கு புரொகிராமிங் கோட் எழுதியாக வேண்டும். தொடர்ந்து அவர்கள் தங்களின் ஆப் செயல்பாட்டை கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதன் மூலம்தான் ஆப் செயல்பாட்டையும், பயன்படுத்தும் பயனாளரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

அப்டேட் செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால், அப்டேட் செய்யாமல் விட்டால், ஹேக்கர்களுக்கும், இணைய தாக்குதலுக்கும் நாமே வழிவகை செய்துகொடுப்பது போல் ஆகிவிடும் என்று மெக்கஃபி லேப் நிறுவனம் கூறியுள்ளது. எனவே, மொபைல் ஆப்களை அப்டேட் செய்வது என்பது அவசியமான ஒன்றுதான்.

அப்டேட் செய்யாத நிலையில் சில பிரச்சினைகள் உருவாக வாய்ப்புள்ளது. ஆனால், எல்லா ஆப்களையும் அப்டேட் செய்ய வேண்டியதில்லை. அவசியமில்லாத ஆப்களை அப்டேட் செய்ய வேண்டிய அவசியமில்லை. வங்கிச் சேவை, இ-காமர்ஸ், மேப், கல்வி சார்ந்த ஆப்கள் போன்ற தேவையான ஆப்களை அப்டேட் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால்,  பெரும்பாலும் மொபைல்களில் அத்தியாவசியமான ஆப்களை விட தேவையில்லாத ஆப்களையே வைத்திருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. எனவே ஆப் பயன்பாட்டில் ஸ்மார்ட்டாக இருப்பதும் அவசியம். தேவையில்லாத ஆப்களைத் தவிர்ப்பதன் மூலம் மொபைல் ஹாங் ஆகும் பிரச்சினை, மெமரி இடவசதி பிரச்சினை போன்றவை வராமல் பார்த்துக்கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டை  காட்டிலும் ஐஓஎஸ் ஆப்களை அப்டேட் செய்வதற்கு பல வலுவான விதிமுறைகள் உள்ளன. அவ்வளவு எளிதில் ஆப்பிள் ஐஓஎஸ் ஆப்களை அப்டேட்  செய் வதற்கு அனுமதிக்காது. அதனால் தான் ஆண்ட்ராய்டைக் காட்டிலும் ஆப்பிள் பாதுகாப்பான ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்று நம்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x