Last Updated : 29 Apr, 2019 12:50 PM

 

Published : 29 Apr 2019 12:50 PM
Last Updated : 29 Apr 2019 12:50 PM

சபாஷ் சாணக்கியா: வெற்றிக்கான திறவுகோல்...

‘ஹாரி பாட்டர்’ எனும் குழந்தைகள் நாவல்கள் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். மந்திரம், தந்திரம், பேய் எல்லாம் இவற்றிலும் உண்டு. ஆங்கிலேய எழுத்தாளர்  ஜேகெ ரௌலிங்கின் படைப்புக்களான  இவை, 70க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன! எவ்வளவு பிரதிகள் விற்று இருக்கின்றன தெரியுமா? நம்புங்கள்.

சுமார் 50 கோடி! ஆனால், இவர் ஆரம்ப காலத்தில் பட்ட சிரமங்கள் சொல்லி மாளாதவை! தற்பொழுது உலகமே தலையில் வைத்துக்கொண்டாடும் ‘ஹாரி பாட்டர்' நாவலின் முதல் மூன்று அத்தியாயங்களை எழுதும்பொழுது, அந்த அம்மையாரின் நிலை மிகப் பரிதாபமாக இருந்திருக்கிறது.  திருமண முறிவு. தாயார் இறந்துவிட்டார்.

ஏழ்மையில் உழன்று அரசாங்க மானியங்களில் தன் குழந்தையை வளர்க்க வேண்டிய கட்டாயம்! தனியொருத்தியாக அவ்வளவையும் எதிர் கொண்டுள்ளார் இந்த இரும்புப் பெண்மணி! ‘உங்கள் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றிற்கும் நீங்கள் பொறுப்பேற்கும் அந்தத் தருணம் தான், உங்கள் வாழ்க்கையில் நடக்கப் போவது எதையும் நீங்கள் மாற்றக் கூடிய தருணம்!' என்று சொல்கிறார் அதிசயக் காலை (The Miracle Morning) நூலை எழுதிய ஹல் எல்ராட்! ரௌலிங், தனது ஹாரி பாட்டர் கதையின் கையெழுத்துப் பிரதியை எடுத்துக்கொண்டு பல பதிப்பகத்தாாரின் படிகளை ஏறி இறங்கியிருக்கிறார்.

ஆனால் யாருமே அதை வெளியிடத் தயாராக இல்லையாம்! இதையெல்லாம் யார் படிப்பார்கள், விற்காது, எனும் அச்சமாம்! பின்னர் அப்புதினம் பிரசுரமானது ஒரு தனிக்கதை! ப்லூம்ஸ்பரி பதிப்பகத்தாரின் எடிட்டரின் 8 வயது மகள்  அக்கதையின் முதல் அத்தியாயத்தைப் படித்துவிட்டு, மீதிக் கதையை உடனே படிக்க வேண்டும் என நச்சரித்தாளாம். அப்பொழுது புரிந்து கொண்டார்களாம்  அந்தக் கதை குழந்தைகளிடம் ஏற்படுத்தக் கூடிய தாக்கத்தை; அதன் வியாபார பரிமாணங்களை! அன்று தொடங்கியது பாட்டரின் வெற்றிப்பயணம்.

இன்று அதன் திரைப்பட வடிவங்களும் வந்துவிட்டன. புத்தகம் எழுதியே பல நூறு  கோடிகளுக்கு அதிபதியாகி விட்டார் ரௌலிங்!ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ரௌலிங் பேசியதைப் பாருங்கள். ‘தோல்வி என்பது நம்மிடமிருந்து தேவையற்றவைகளை நாம் எடுத்து எறிவது ஆகும். தோல்வியைக் கண்டு துவளாமல், எனது சக்தியையெல்லாம் எனது குறிக்கோளின் திசையில் செலுத்தினேன்; வெற்றிகண்டேன். என்னிடம் இருந்தது எல்லாம் ஒரு பழைய தட்டச்சு எந்திரமும் ஏகப்பட்ட கற்பனைத் திறனும் தான்.

தோல்வி உங்களை அதள பாதாளத்துக்குக் கொண்டு சென்று விடலாம். ஆனால் நீீங்கள் அதையே பலமான அடித்தளமாக அமைத்துக் கொண்டு உங்கள் வெற்றிக் கோட்டையைக் கட்டி விடுங்களேன்' என்கிறார் அவர்! 1976-ல் சில்வெஸ்டர் ஸ்டோலன் நடித்து வெளியாகி சக்கைபோடு போட்ட அமெரிக்கத் திரைப்படம் ‘ராக்கி'. குத்துச்சண்டை வீரரின் போராட்டங்களைச் சொல்லும் கதை அது. சில்வெஸ்டர் அதில் நடிக்கப் போராடி யது ஒரு சோகக் கதை. 1970-ல் தனது திரையுலகக் கனவுகளுடன் நியூயார்க் வந்தாராம். ஆனால், வாய்ப்பே கிடைக்கவில்லையாம்.

விரக்தியின் உச்சிக்குச் சென்றவர், அந்த ‘ராக்கி' கதையை எழுதி விற்க முயன்றுள்ளார். ஆனால் அதைப் படமாக்கத் தயாரிப்பாளர்கள் போட்ட நிபந்தனை, அப்படத்தில் அவர் நடிக்கவே முடியாதென்பது. மனிதர் அசராமல் போராடியிருக்கிறார். இறுதியில் தன் பணத்தை வெகுவாகக் குறைத்துக் கொண்டு நடித்திருக்கிறார்.

படம் மிகப்பெரிய வெற்றி கண்டது! அவர் அகில உலக நட்சத்திரமானார்! ‘வாழ்க்கையில் நீங்கள் ஒன்று நடப்பதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லது அவற்றை மாற்றுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்கிறார் ஆங்கிலேய எழுத்தாளர் டென்னிஸ் வெயிட்லே!

ஐயா, நமது வாழ்க்கை ஓர் அதிசயக் கோட்டை போன்றது! அதற்குப் பல பூட்டுக்கள் உண்டு. அப்பூட்டுக்களைத்  திறக்க நம்மிடம் சரியான சாவிகள் வேண்டும். ஒவ்வொரு  சாவியும் ஏதாவது ஒரு பூட்டைத் திறக்கும். பொறுமை, ஊக்கம், கல்வி,  நட்பு, போன்றவை அதற்கான சில சாவிகள்!

அப்படிப் பார்த்தால், நமக்கு ஒரு மந்திர சாவிக் கொத்தையே கொடுத்துள்ளார் நம்ம திருவள்ளுவர். சாணக்கியரும் இதற்கான பல சாவிகளை, யதார்த்தமான யோசனைகளைத் தந்துள்ளார். அவற்றைக் கடந்த 100 வாரங்களாகப் பார்த்து வந்தோமல்லவா? இந்த தொடரை நிறைவு செய்ய அவரின் இந்தப் பொன்மொழியைக் கேளுங்கள்.

‘ஒருவரது வெற்றி தோல்விகளுக்குக் காரணம் வேறு யாரும் இல்லை; அவரே தான். ஒருவர் தன் வாழ்க்கையில் அவ்வப்போது செய்யும் தேர்வுகளே அவரது வெற்றியை முடிவு செய்கின்றன' என்கிறார் சாணக்கியர்! உண்மை தானே? சற்றே சிந்தியுங்கள். நம் வாழ்க்கை என்பது நாம் நம்மைப்பற்றி நாமே எழுதும்  கதை போன்றது. அந்தக் கதையின் முடிவு சுபமாகச் சிறப்பாக இருப்பது அதை எழுதும், கொண்டு செல்லும் நம் கையில் அல்லவா இருக்கிறது?

நம் வாழ்க்கையை, நம்மை நாமே செதுக்கிக் கொள்ளும் சிலை எனவும் கொள்ளலாம். எனவே, அந்தச்  சிலை  எவ்வளவு நேர்த்தியாக வருகின்றது என்பது மற்றவர்கள் கையில் இல்லை. நம் கையில் தான் இருக்கிறது!

- நிறைவு பெற்றது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x