Published : 03 Apr 2019 02:11 PM
Last Updated : 03 Apr 2019 02:11 PM

கதை: ஆபத்து… ஆபத்து…

சுந்தரவனத்தில் சிங்கம் நடந்து வருவதைப் பார்க்கவே கம்பீரமாக இருக்கும். காட்டின் அரசனாக இருப்பதால் மட்டுமின்றி, சிங்கத்தின் நல்ல குணத்துக்காகவே காட்டு உயிரினங்கள் மதிப்பு வைத்திருந்தன.

அன்று சிங்கம், கரடியுடன் வன உலாவுக்குக் கிளம்பியது. எதிரில் தென்படும் விலங்குகளையும் பறவைகளையும் நலம் விசாரித்துக்கொண்டே சென்றது சிங்கம். அப்போது ஓர் ஆலமரத்தின் அடியில் நரிகள் சண்டை போட்டுக்கொண்டிருந்தன.

“சண்டையை நிறுத்துங்கள். நம் வனத்தில் யாரும் சண்டையிடக்  கூடாது என்று சட்டம் இருக்கிறதே, மறந்துட்டீங்களா? உங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்றால், உங்களால் எப்படி மற்ற விலங்குகளுடன் ஒற்றுமையாக இருக்க முடியும்?” என்று குரலில் கொஞ்சம் கடுமையைக் காட்டியது சிங்கம்.

நரிகள் பயத்தில் அந்த இடத்தைவிட்டு ஓடின.

“மந்திரியாரே, இன்று மாலை அனைத்து விலங்குகளையும் மலைமேட்டுக்கு  வரச் சொல்லுங்கள்” என்றது சிங்கம்.

உடனே தகவல் தெரிவிக்கக் கிளம்பியது கரடி.

சூரியன் மறையும் மாலை நேரம். முயல், மான், புலி, நரி என்று விலங்குகள் மலை மேட்டுக்கு வந்து சேர்ந்தன.

“அரசர் ஏன் நம்மைக்  கூப்பிட்டிருக்கார்? மாதத்துக்கு ஒரு முறைதானே கூப்பிடுவார்? என்ன விஷயம்?” என்று விலங்குகள் தங்களுக்குள் பேசிக்கொண்டன.

சில நிமிடங்களில் சிங்கம் வந்து சேர்ந்தது. “என் அருமை சுந்தரவனக் குடிமக்களே, மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. நமது சட்டங்களைச் சிலர் மீறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒற்றர்கள் மூலமாகவும்,  இன்று நேரிலும் கண்டேன். இது நல்லதல்ல. யாரும் யாருடனும் சண்டை போடக் கூடாது. ஒருவருடைய எல்லைக்குள் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது.

அரசாங்கம் வழங்கும் உணவைத் தவிர, தனியாக வேட்டையாடக் கூடாது. அதன்படி வாழ்ந்துகொண்டிருக்கும் உங்களில், ஓநாய்க் கூட்டத்தினர் மட்டும் அடிக்கடி அருகில் உள்ள சந்தனவனத்திலுள்ள மான் கூட்டத்தினரைத் தாக்குவதாகக் கேள்விப்படுகிறேன். நரிக்கூட்டத்தினரோ காடுகளை விட்டுவிட்டு, அருகிலுள்ள கிராம மக்களிடம் இருக்கும் ஆடு, மாடுகளைக் கொன்று தின்றுகொண்டிருக்கின்றன.

இது அவர்களுக்கு மட்டுமல்ல,  இந்தக் காட்டிலுள்ள அனைத்து விலங்குகளுக்கும் ஆபத்தை  உண்டாக்கும்.  இனி இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அதற்கு ஏற்படும் இழப்புகளுக்கு நான் பொறுப்பல்ல.   எல்லோரும் கவனமாக நடந்துகொள்ளுங்கள். நீங்கள் அனைவரும் செல்லலாம்”  என்று பேச்சை முடித்தது சிங்கம்.

விலங்குகள் கலைந்து சென்றன. இரு நரிகள் மட்டும், “அரசர் என்ன சொன்னாலும் கேட்கணுமா? அரசாங்க உணவைச் சாப்பிடுவதில் சுவாரசியமே இல்லை. யாருக்கும் தெரியாமல், கிராமத்துக்குள் புகுந்து ஆடு, கோழி என்று சாப்பிடுவதில் எவ்வளவு சுவாரசியம் இருக்கிறது என்று அரசருக்குத் தெரியாது” என்று பேசிக்கொண்டன.

முன்னால் சென்றுகொண்டிருந்த நரிகளின் தலைவன், “அடப்பாவிகளா, நீங்க ரெண்டு பேரும் செய்யற வேலைதானா இது? உங்களால எங்க எல்லாத்துக்கும் பிரச்சினை வரப் போகுது. இதோட நிறுத்திக்குங்க. அரசர் கோபப்பட்டு நீங்க எல்லாம் பார்த்ததில்லை. அப்புறம் யாராலும் உங்களைக் காப்பாத்த முடியாது” என்று எச்சரிக்கை செய்தது.

“ஐயோ… தலைவரே, நாங்க அப்படி எல்லாம் செய்வோமா?” என்று ஒரே குரலில் இரண்டு நரிகளும் பதில் சொல்லிவிட்டு ஓடின.

அன்று அமாவசை. இரண்டு நரிகளும் கிராமத்துக்குள் நுழைந்தன.

“இதுதான் சரியான நேரம். நேத்து ஒரு ஆட்டைதான் அடிச்சி சாப்பிட்டோம். இன்னிக்கி ஆளுக்கு ஒரு ஆட்டைச் சாப்பிட்டுடணும் ” என்றது ஒரு நரி.

பெரிய ஆடு ஒன்றை இரண்டும் பிடிக்கப் போனபோது, முதுகில் மூங்கில் கம்புகள் இடியாக இறங்கின. இரண்டும் சுதாரிப்பதற்குள் பலத்த காயம் ஏற்பட்டுவிட்டது. உயிர் பிழைத்தால் போதும் என்று இரண்டும் ஓட முடியாமல் ஓடின.

ஐந்து பேர் தடிகளோடு நரிகளைத் துரத்திக்கொண்டே வந்தனர். கொஞ்சம் மெதுவாக ஓடினால் மாட்டிவிடுவோம் என்பதால், மூச்சை பிடித்துக்கொண்டு நரிகள் ஓடின.

அப்போது சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. ஓடிவந்தவர்கள் சட்டென்று நின்றனர். பயத்தில் வந்த வழியே திரும்பி ஓட ஆரம்பித்தனர். நரிகளுக்கு இப்போதுதான் உயிர் திரும்பிவந்தது.

“பெரியவங்க சொன்னதைக் கேட்காமல் இருந்ததுக்கு நல்ல பாடம் படிச்சிட்டோம். இனி இப்படி ஒரு நாளும் செய்யக் கூடாது” என்றது ஒரு நரி.

“உயிர் பிழைச்சதே பெரிய விஷயம். அரசர் மட்டும் வராமல் இருந்திருந்தால் இந்நேரம் அவ்வளவுதான். காயம் சரியாக ரெண்டு மாசம் ஆகும்” என்றது மற்றொரு நரி.

- மோ. கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x