Published : 22 Apr 2019 11:47 AM
Last Updated : 22 Apr 2019 11:47 AM

பஜாஜ் ‘க்யூட்’ கார் போல இருக்கும் ஆட்டோ!

மூன்று சக்கர ஆட்டோ ரிக்‌ஷா  வாகன சந்தையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பஜாஜ், நான்கு சக்கர ஆட்டோ ஒன்றை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது இந்தியாவின் முதல் குவாட்ரி சைக்கிள் என்ற பெருமையையும் கொண்டிருக்கிறது. தற்போது கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா உள்ளிட்ட சில மாநிலங்களில் விற்பனைக்கும் வந்துவிட்டது.

இந்த நான்கு சக்கர ஆட்டோவுக்கு பஜாஜ் கியூட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் 216 சிசி திறன் கொண்ட ட்வின்ஸ்பார்க், லிக்விட் கூல்ட், சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வெர்ஷன்கள் மட்டுமே உள்ளன.

விரைவில் எல்பிஜி மாடலும் அறிமுகப்படுத்த உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளன. கியர்பாக்ஸை பொருத்தவரை 5 கியர்கள் கொண்ட சீக்வன்ஷியல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர்களுக்காக உருவாக்கப்பட்டது இது. ஆட்டோக்களில் தொடர்ச்சியான ஸ்டியரிங் செயல்பாடு அவசியம் என்பதால் ஓட்டுநர்களுக்கு கைகள் சோர்ந்து போவதற்கான வாய்ப்புள்ளது. இந்த குவாட்ரி சைக்கிளில் ரவுண்ட் ஸ்டீயரிங் என்பதால் இயக்குவது எளிதாகிவிடுகிறது.

 மேலும் ஓட்டுவதற்கும் ஆட்டோவைக்காட்டிலும் நல்ல அனுபவத்தைத் தருகிறது என்று பல ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர். இருக்கைகள் ஓரளவுக்கு நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு சீட்டுக்கும் சீட் பெல்ட் வழங்கப்பட்டுள்ளது.

சிஎன்ஜி மாடலில் லிட்டருக்கு 45 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க முடிகிறது. இதனால், சாதாரண மோட்டார்சைக்கிளைக் காட்டிலும் எரிபொருள் செலவு இதில் குறைவாக உள்ளதைப் பார்க்க முடிகிறது.

நான்கு சக்கரங்கள், நான்கு கதவுகள் இருப்பதால் மட்டுமே இதை கார் என்று வகைப்படுத்த முடியாது. கிட்டதட்ட டாடா நானோ போலவே உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், நானோவாவது கார் என்ற வகையில் பலரும் வாங்கி பயன்படுத்தினர்.

அதில் பயன்படுத்தப்பட்ட இன்ஜின் 615சிசி திறன் கொண்டதாக இருந்தது.   ஆனால் பஜாஜ் க்யூட்டில் 216சிசி திறன் என்பது தற்போது புழக்கத்தில் உள்ள ஆட்டோக்களில் உள்ள 198 சிசி இன்ஜினைக் காட்டிலும் சற்று கூடுதல் திறன் அவ்வளவுதான். மேலும், இது முழுக்க பைபர் பாடி என்பதால் பாதுகாப்பு சற்று கேள்விக்குறிதான்.

தனிநபர் பயன்பாட்டுக்கும் இதை பயன்படுத்தலாம். ரொம்பவும் அதிக வேகம் செல்லாத, குறைவான பட்ஜெட்டில் ஓரளவுக்கு காரில் பயணிப்பது போன்ற அனுபவத்தைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது பிடிக்கலாம்.

இதன் விலை பெட்ரோல்மாடல் ரூ.2.48 லட்சம், சிஎன்ஜி மாடல் ரூ. 2.78 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்கு பஜாஜ் க்யூட் தகுதியானதா என்பதை அதன் விற்பனை தான் நிர்ணயிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x