பயனுள்ள விடுமுறை: பாட அடிப்படைகளில் பலம் பெறுவோம்

பயனுள்ள விடுமுறை: பாட அடிப்படைகளில் பலம் பெறுவோம்
Updated on
2 min read

பொதுத் தேர்வுகள் முடித்த மாணவர்கள் உற்சாகமாக விடுமுறையைக் கழிக்கத் தயாராக இருப்பார்கள். நண்பர்களுடன் விளையாட்டு, கோடைக்காலப் பயிற்சி, குடும்பத்துடன் சுற்றுலா எனக் கைவசம் ஒரு பட்டியலை வைத்திருப்பார்கள். இவர்களுக்கு உதவும் வகையில் கோடை விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழிப்பதற்கான வழிகாட்டுதல்கள் சில:

பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறைகளுக்கு என நீளமான வீட்டுப் பாடங்களை வழங்கிவிடுவார்கள். தேர்வு முடிந்த சூட்டோடு அவற்றை முடித்து விடுவது நல்லது. நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம் என விளையாட்டில் மும்முரமானால், அந்த நாள் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.

இப்போதே வீட்டுப் பாடங்கள்

வீட்டுப் பாடங்களை எழுதும்போது எழும் ஐயங்களை மாணவர்கள் தனியாகக் குறித்து வைத்துக்கொள்ளலாம். அவற்றின் அடிப்படையிலும், அண்மையில் தேர்வுகளை முடித்ததன் அடிப்படையிலும் பாடரீதியில் தனக்கான நிறை குறைகளை அடையாளம் காண முடியும். அவற்றில் குறைகள் எனத் தோன்றுவதைச் சரி செய்யவும் முயற்சிக்கலாம்.

உதாரணத்துக்குக் கணக்குப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் போன்ற கணித அடிப்படையில் சிலருக்குத் தடுமாற்றம் இருக்கும். ஆனால், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாது அடுத்தடுத்த வகுப்புகளைச் சமாளித்துக் கடந்து வந்திருப்பார்கள். கூடவே அவர்களது தடுமாற்றங்களும் பெரிதாக வளர்ந்து வந்திருக்கும். அதை அப்படியே விட்டால், மேல் வகுப்புகளில் எத்தனை சிரமப்பட்டுப் படித்தாலும் எதிர்பார்த்த மதிப்பெண்களை எட்ட முடியாது போகலாம். ‘பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு..’ என்பது நகைச்சுவைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். நிஜத்தில் துயரம் மிகுந்தது.

வெட்கப்பட ஏதுமில்லை!

எனவே, இந்தக் கோடை விடுமுறை அவகாசத்தில் பலவீனப் பாடப் பகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றைக் கீழ் வகுப்புகளின் பாடங்களில் இருந்து கற்றுத் தேறலாம். உதாரணத்துக்கு 10-ம் வகுப்பு முடித்து பிளஸ் 1-ல் சேரக் காத்திருக்கும் மாணவர், 6, 7, 8 ஆகிய வகுப்புகளின் கணிதப் புத்தகங்களைச் சேகரித்து அதன் அடிப்படைச் செயல்பாடுகளில் பயிற்சி பெறலாம்.

இதில் தயங்கவோ வெட்கப்படவோ ஏதுமில்லை. கணிதம் போலவே அடிப்படையான அறிவியல் பாடக் கருத்துகளையும் குறிப்பெடுத்துக்கொள்ளலாம். இவை மேல் வகுப்பின் சிக்கலான பாடக்கருத்துகளைச் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவும்.

கூடவே, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிப் பாடங்களின் கீழ் வகுப்பு இலக்கணப் பகுதிகளையும் இந்தக் கோடை விடுமுறையில் அவ்வப்போது படித்துக் குறிப்புகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஒரு பாடத்தில் அடிப்படை பாடக் கருத்துகளைத் தெளிவாக அறிந்தவர்களுக்கு வினாக்களை எப்படி மாற்றிக் கேட்டாலும் பதிலளிப்பது எளிது.

ஐயம் போக்கும் இணையம்

payanulla-2jpgright

அடிப்படைகள் கற்றுத் தேர்வதில் பள்ளிப் பாடங்களையே மீண்டும் படிப்பதில் அலுப்பு தட்டும்போது வேறு உத்திகளை அணுகலாம். உதாரணத்துக்கு, அருகிலுள்ள நூலகங்களுக்குச் சென்று அங்குள்ள அறிவியல் இதழ்களை வாசிக்கலாம். நாளிதழ்களின் பாடம் சார்ந்த தொடர் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றையும் வாசிக்கலாம்.

நூலகத்தின் குறிப்புதவிப் பிரிவில் அறிவியல், வரலாறு, இலக்கியம் என விருப்பமான தலைப்பில் நூல்களை வாசிப்பதுடன் குறிப்புகளையும் எடுத்துக்கொள்வது பின்னாளில் உதவும். இவை தவிர இணையத்தில் பாடத் தலைப்புகளுக்குரிய வீடியோக்களையும் காணலாம்.

‘யுரேகா சயின்ஸ்’ (ureka science) என்ற செயலியை அலைபேசியில் பதிவிறக்கம் செய்து, அதன் வாயிலாக வீட்டிலிருந்தபடியே உபயோகமான பாடக்கருத்துகளைச் சுவாரசியம் குறையாது பெறலாம்.

மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை உதவியுடன் நடைபெறும் ஆன்லைன் ஆய்வகத்தில் (http://amrita.olabs.edu.in/) தியரி, வீடியோ, சிமுலேட்டர் என வகுப்பு, பாட வாரியாகத் தலைப்புகளை விருப்பம்போல பார்த்து, படித்துத் தெளிவு பெறலாம்.

- இரா.சக்திவேல், பட்டதாரி ஆசிரியர் (அறிவியல்), தஞ்சாவூர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in