Published : 12 Apr 2019 12:34 pm

Updated : 12 Apr 2019 13:19 pm

 

Published : 12 Apr 2019 12:34 PM
Last Updated : 12 Apr 2019 01:19 PM

இயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: மறக்க முடியாத மாமனிதர் மகேந்திரன்

ஒரு படம் வெள்ளிவிழாவோ, நூறாவது நாளோ கண்டால் உதவி இயக்குநர்களுக்கு எவர்சில்வர் குடம், டிஃபன் பாக்ஸ், வாட்ச், வால்கிளாக் இப்படி ஏதாவது ஒன்றைக் கொடுப்பதுதான் அப்போது வழக்கம்.

நான் பத்திரிகையாளனாய்ப் பணியாற்றியபோது, எம்.ஆர்.ஆர்.வாசு, நாகேஷ், ஜெயசித்ரா போன்றவர்களின் வீடுகளில் திரைப்பட வெற்றிவிழா ஷீல்டுகளைக் கண்டிருக்கிறேன்.


 ‘தங்கப்பதக்கம்’ போன்ற படங்களுக்கான பரிசுக் கேடயங்களை இயக்குநர் மகேந்திரன் வீட்டில், பல நாட்கள் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்த காலமும் உண்டு.

‘ஏணிப்படிகள்’ படத்திலிருந்தே இயக்குநருடன் நான் பணிசெய்யத் தொடங்கியபோதும் ‘உதிரிப்பூக்கள்’ படத்தில்தான் உதவி இயக்குநர் என்ற அந்தஸ்தை அடைந்தேன். அதுவும் வெள்ளிவிழா கண்ட படம்.

‘உதிரிப்பூக்கள்’ பட வெள்ளிவிழா மியூசிக் அகாடமி அருகில் உள்ள சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டல் ஹாலில் வீணை எஸ்.பாலசந்தர் பங்கேற்க நடைபெற்றது.

படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருக்குப் பெரிய பெரிய கேடயங்களை வழங்கினார்கள். வரவேற்று உபசரித்து அமரவைக்கும் பணியில் நாங்கள் இருந்தோம். வந்தவர்களை உபசரித்துக்கொண்டிருந்தாலும் என் கண்கள் ஷீல்டுகளின் அழகில் அவ்வப்போது கவனம் செலுத்தவும் தவறவில்லை. ‘கதா’பாத்திரங்களுக்கு எல்லாம் ஷீல்டு கொடுத்து முடிந்ததும் என் பெயர் அழைக்கப்பட்டது.

மேடை ஏறினேன். கதாபாத்திரங்கள் என்னை வரவேற்க, வீணை எஸ்.பாலசந்தர் என்னுடன் கைகுலுக்கியபடி இருக்க நான் குடமா, டிஃபன் பாக்ஸா என்று ஆவலுடன் நோக்க தயாரிப்பு நிர்வாகியின் இரண்டு கைகளையே பல்லக்காக்கி ராஜவம்சத்துத் தாமரைகளின் தேவசுகந்தம் வீசி ரஜபுத்ரி ஒருத்தி உலா வருவதைப் போல் என் பெயர் பொறித்த ஷீல்டு ஒய்யாரமாய் வந்து என் இரு கரங்களில் கதகதப்பை ஏற்படுத்தியது.

கனவா… நனவா… என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. அதற்குள் அடுத்த உதவி இயக்குநரின் பெயரும் அழைக்கப்பட்டு அவர் கையிலும் ஷீல்டு. நான்கு உதவி இயக்குநர்களும் நன்றி சொல்ல இயலாமல் இயக்குநரைப் பார்த்தோம். கண்கள் கசிந்தன.

உதவி இயக்குநர்களுக்கு அப்படி ஒரு கௌரவத்தை ‘உதிரிப்பூக்க’ளில் தொடங்கிவைத்த பெருந்தன்மையாளர் மகேந்திரன்.

படமாக்கும் பாடலை நிறுத்தி நிறுத்தி நமது தேவைக்கு ஏற்ப ஒலிக்கவிடும் நாகரா சாதனம் இல்லாமல் உதிரிப்பூக்கள் படப்பிடிப்பின் ஒவ்வொரு நாள் உரையாடல்களையும் பியானோ டைப் டேப்ரெக்கார்டரில் தோளில் மாட்டியபடியே பதிவுசெய்வதும், பதிவுசெய்த வசனங்களை பேப்பரில் தெளிவாகக் காட்சி எண், பக்க எண் போட்டு ஸ்கெட்ச் பேனாக்களால் அலங்கரித்து எழுதி டப்பிங் பேசும்வரை பாதுகாப்பதும் என் வேலை.

உதவி இயக்குநர்களை உயர்த்தியவர்

ஓர் உதவி இயக்குநர் வசம் பொறுப்பை ஒப்படைத்தால் அவர் நூறு சதவீதம் சரியாகச் செய்வார் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. ‘கை கொடுக்கும் கை’ சமயத்தில் டப்பிங் குரல் பதிவுசெய்யும் வேலையையும் என்னை நம்பி ஒப்படைத்தார். அதனால் என்னால் எல்லா வேலைகளையும் எளிதில் கற்றுக்கொள்ள முடிந்தது.

78-ல் படிப்பை முடித்துவிட்டு நான் பத்திரிகை ஒன்றில் பணியாற்றியபடி ஒவ்வொரு நாளும் அவர் வீட்டுக்குச் சென்று காத்திருந்து, அவரிடம் வேலை கேட்பேன்.

அவர் வீட்டு வரவேற்பறையின் இருக்கை விளிம்பில் உட்காராத மாதிரி ஒருவித பயபக்தியுடன் உட்கார்ந்து அவரைப் பார்த்து எழுந்து கையில் வைத்திருக்கும் கவிதை எழுதிய நோட்டுக்களை எல்லாம் காட்டி பாட்டெழுத வாய்ப்புக் கேட்ட நிமிடங்கள் இன்னும் என் நெஞ்சைவிட்டு நீங்கவில்லை.

என் கையெழுத்து மட்டுமே தகுதியானவனாய் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். பிளாட்ஃபார்ம் டிக்கெட்கூடக் கிடைக்காதா என்று ஏங்கி ஏங்கி அலைந்த ஓர் ஏழை எழுத்தாளனை, கவிஞனை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி கோச்சிலேயே தன்னுடன் அழைத்துச் சென்று உதவி இயக்குநராய் பாடலாசிரியராய் ஆக்கி மௌனமாக ரசித்தவர் மகேந்திரன்.

‘உதிரிப்பூக்கள்’ கம்போசிங் பாம்குரோவ் ஹோட்டலில் நடந்தபோது, இளையராஜாவிடம் என்னைக் காட்டி ‘கண்ணன் நல்ல கவிஞர், நல்லாப் பாட்டெழுதுவார்’ என்று பெருமையோடு அறிமுகப்படுத்தி அருகில் அமரவைத்து இளையராஜாவுக்கும் எனக்குமான ஒரு நீண்ட நெடிய பயணத்தை முதல் புள்ளிவைத்து பெருங்கோலமாய் வரைந்தவர் இயக்குநர் மகேந்திரன்.

உதவி இயக்குநர்களையும் உடன் வேலை செய்தவர்களையும் மரியாதையுடன் ‘ங்க’ போட்டு மட்டுமே அழைப்பார். கெட்ட வார்த்தைகளோ சென்னைத் தமிழோ ஒரு நாளும் அவர் சொல்ல நான் கேட்டதில்லை.

முன்மாதிரிகளின் மொத்த உருவம்!

நாடக நடிகர்களை, தகுதியானவர்களை மிகவும் கஷ்டப்படுகிற கலைஞர்களைத் தொடர்ந்து படங்களில் பயன்படுத்துவார். குமரி முத்து, சாமிக்கண்ணு, சாந்தாராம், ‘வெண்ணிற ஆடை’ மூர்த்தி போன்ற நட்பு முகங்களை அவர் ஒரு நாளும் விட்டுக்கொடுத்ததே இல்லை.

முதலாளித்துவம், பூர்ஷ்வாத்தனம் எதுவும் இல்லாத ஓர் உழைப்பாளி அவர். கார் வாங்கியபோதுகூடப் பின்பக்கம் கைநீட்டி பந்தாவாக அமர்ந்து ஒரு நாளும் அவர் உலா வந்ததில்லை.

படத்தொகுப்பாளர் லெனினுக்கும் ஒளிப்பதிவாளர் அசோக்குமாருக்கும் சர்வ சுதந்திரமும் சகல மரியாதையும் கொடுத்தவர். அடுத்தவர் கதைகளை உரிமை கொண்டாடும் உலகத்தில், பிற எழுத்தாளர்கள் புதுமைப் பித்தன், பொன்னீலன், சிவசங்கரி உமா சந்திரன், போன்றவர்களைப் பெருமைப்படுத்தியவர்.

கதை விவாதத்தில் உடனிருந்து ஒத்துழைத்த காரணத்துக்காகப் பரந்த மனத்துடன் விஜய் கிருஷ்ணராஜ் (கிருஷ்ணா) அவர்களுக்கும் ‘உதிரிப்பூக்கள்’ வெள்ளிவிழாவில் தான் வாங்கியது போன்ற வெற்றிக் கேடயத்தை வாங்கிக் கொடுத்தவர்.

எழுத்தாளராக இருந்து அவர் எழுதிய பல பக்க வசனக் காட்சிகளை எல்லோர் முன்னிலையிலும் தயவுதாட்சண்யம் இன்றி அடித்துச் சுருக்கி இயக்குநர் ஸ்தானத்தின் உன்னதப் பெருமையை உடன் இருந்தவர்களுக்கு உணர்த்தியவர்.

அவர் எழுதிய 10 பக்கங்களை நான் 24 பக்கங்களாக காப்பி எடுப்பேன். கடைசியில் அது இரண்டு பக்கங்களோ 4 பக்கங்களோதான் காட்சியில் வரும். இப்படி மகேந்திரன் என்றாலே முன்மாதிரிகளின் மொத்த உருவம் அவர்.

 தயாரிப்பாளர்களையும் அவர் தவிக்கவிட்டதில்லை. ‘ஜானி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி… ஸ்ரீதேவி ‘காற்றில்.. எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத் தேடுதே..’ என்ற பாடலை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதான மேடையில் பாடும்போது எதிரே ஆயிரக்கணக்கான துணை நடிகர் நடிகைகள் குடை பிடித்துக்கொண்டே மழை என்றுகூடப் பாராமல ரசிப்பதுபோல் தான் முதலில் காட்சியை எழுதியிருந்தார்.

ஆனால், தயாரிப்பாளரால் அந்தச் செலவைச் செய்ய இயலவில்லை. இயக்குநர் அதற்காகப் படப்பிடிப்பை நிறுத்தவில்லை. தயாரிப்பாளரின் சிரமங்களை உணர்ந்து காட்சியில் சில மாற்றங்களைச் செய்தார்.

புயல் காரணமாக யாருமே வராத நிலையில் ஜானியை எதிர்பார்த்து அர்ச்சனா மட்டும் பாடுவதுபோல் காட்சியமைப்பை மாற்றி அதன்படியே படமாக்கினார். அந்தப் பாடல் வரிகள்தாம் அவரது மறைவுச் செய்திக்குப் பிறகு இப்போது, எனது காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன.

கட்டுரையாளர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர்

தொடர்புக்கு: yaarkannan@gmail.com


இயக்குநர் மகேந்திரன் அஞ்சலிமாமனிதர் மகேந்திரன்தங்கப்பதக்கம்உதிரிப்பூக்கள்வெள்ளிவிழா மியூசிக் அகாடமி உட்லண்ட்ஸ் ஹோட்டல்கதாபாத்திரங்கள்உதவி இயக்குநர்களை உயர்த்தியவர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

government-3-agriculture-bills

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author